கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1256 நீ எங்கும் அலையத் தேவையில்லை!

ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.”

இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த ரூத், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம்  மட்டுமல்லாமல் ,  தைரியத்தோடு  அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார்.

ரூத்தின் வாழ்க்கையில் நான் கண்ட இன்னொரு அருமையான காரியம் என்னவெனில், எடுத்த முடிவில் உறுதியாகத் தரித்திருந்ததுதான். ரூத்தைப் போல வயலுக்கு வருபவர்கள் மறுநாள் வேறு வயலைத் தேடிப் போவது வழக்கம். அதனால் தான் போவாஸ் ரூத்திடம், இந்த அறுப்பெல்லாம் அறுத்துத்தீருமட்டும் இங்கேயே வா என்று கூறினான். ரூத் அறுவடை முடியுமட்டும் வேறு யாருடைய வயலையும் தேடாமல் போவாஸின் வயலில் கோதுமைக் கதிரைப் பொறுக்குவதில் உறுதியாக இருந்தாள்.

போவாஸின் வயலில் அவளுக்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அவள் வேறெங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. அதைப் போலவே நம்முடைய இயேசு கிறிஸ்துவிடம் நமக்குத் தேவையான அனைத்தும் உள்ளன.  ரூத்தைப் போலவே நாம் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை!

என்னுடைய கிறிஸ்தவ ஊழியப் பாதையில், உணர்ச்சிவசப்பட்டு விசுவாசத்தில் காலெடுத்து வைத்த அநேகர் பின்வாங்கிப் போனதைப் பார்த்திருக்கிறேன்.  இயேசுவுக்காக வாழ்வேன் என்ற உறுதியான மனப்பான்மை அநேகருக்கு வருவதில்லை. காற்றடிக்கும் பக்கமெல்லாம் புல்லைப்போல சாய்பவர்கள் உண்டு!  எல்லா கூட்டங்களிலும் கையைத் தூக்கி ஒப்புக் கொடுப்பவர்கள் உண்டு! ரூத் அங்கும் இங்கும் அலையவே இல்லை. அறுவடை முடியுமட்டும் போவாஸின் வயலிலே உறுதியாகத் தரித்திருந்து தன்னுடைய கடமைகளை செய்தாள்.

என்னில் தம்முடைய நற்கிரியையை ஆரம்பித்தவர் கடைசி பரியந்தம் என்னை நடத்துவார் என்ற நம்பிக்கையுடன், ரூத்தைப் போல நானும் அறுவடையின் கடைசிவரை அவருக்கு உண்மையாக  அங்கும் இங்கும் அலையாமல், சிந்தனைகளை சிதறவிடாமல், கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற உறுதி நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

நம்முடைய அன்பர் கிறிஸ்துவின் வயலில் சந்தோஷம் உண்டு! சமாதானம் உண்டு! தாகத்துக்கு தண்ணீர் உண்டு! ஜீவ அப்பம் உண்டு! இளைப்பாறுதலும் உண்டு! அவரை விட்டு நீ எங்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை!

முன்னோக்கி செல்வேன், முன்னோக்கி செல்வேன், உலகைத் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று ரூத்தைப் போல உறுதியுடன் செல்! வெற்றி உன் பக்கம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment