1 சாமுவேல்: 1: 9,10 “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் !!!!!!! அன்பு மனைவி அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்!
பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின் பாரபட்சம் அந்தக் குடும்பத்தை இரண்டாக்கியது! வார்த்தைகள் அம்பு போல ஊடுருவி சென்றன! அன்னாளின் வாழ்க்கையில் கண்ணீரே உணவானது!
நாட்களும், வருடங்களும் கழிந்த போது இவர்களுடைய மனதில் கசப்பு என்னும் கொடிய வேர் ஆழமாக இடம் பிடித்தது. நிறைவேறாத கனவுகளும், கணவனையும், இரண்டு பிள்ளைகளையும் இழந்த துக்கமும் எவ்வாறு நகோமியின் வாழ்க்கையில் கசப்பாக மாறியதோ அவ்விதமாக அன்னாளின் மனதில், அவளுடைய மலட்டுத் தன்மையும் , பெனின்னாளின் கொடிய வார்த்தைகளும் கசப்பாக மாறியது.
இப்பொழுது சீலோவிலே தேவனைத் தொழுது கொள்ள வந்த இடத்தில் அவளுடைய மனக்கசப்பு முற்றி விட்டது. நாம் கூட அப்படித்தானே! வீட்டுக்குள் என்ன நடந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு மற்றவர்கள் முன்பு புன்முறுவலுடன் இருந்து விடுவோம். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்ற இடத்திலோ அல்லது உறவினர் முன்னாலோ யாரவது ஏதாவது சொல்லிவிட்டால் கண்ணீர் தாரை தாரையாக வந்து விடும் அல்லவா?
அன்னாளைப் போல வெளியே சொல்ல முடியாத வேதனையையும், மனக்கசப்பையும், ஈரம் வற்றாத கண்களையும் கொண்டவர்கள் நம்மில் அநேகர் இன்றும் உள்ளதால் தான் நம்முடைய தேவனாகிய கர்த்தர், அன்னாளைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை வேதத்தில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அன்னாளைப் போல பெண்கள் மட்டுமல்ல தாவீதைப் போன்ற ஆண்களும் இவ்வித வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். அதனால் தான் தாவீது,
என் இருதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தை புசிக்க மறந்தேன்என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்கிறது. (சங்:102:3,4) என்று எழுதுகிறான்.
அன்பின் சகோதர சகோதரிகளே!
இன்று உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? உணவை சாப்பிடக்கூட மறந்து போகும் அளவுக்கு துக்கம் உன்னை நெருக்கலாம்! நீ ஒன்றுக்குமே உதவாதவன் என்று உன் குடும்பம் உன்னைப் பார்ப்பதால் ஏற்படும் துக்கமாக இருக்கலாம்! அல்லது குடும்பத்துக்குள் யாரோ ஒருவர் வார்த்தைகளை அம்பாக எய்வதால் உங்கள் இருதயம் உலர்ந்து போய் பெருமூச்சாக வெளிப்படலாம்! கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்று யாரும் பார்க்காத வேளையில் உங்கள் கண்கள் தாரை தாரையாக சொரியலாம்!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நல்ல வேளை அன்னாளின் வாழ்க்கையும், சங்கீதக்காரனின் வாழ்க்கையும் மனக்கசப்போடு முடிவடையவில்லை! அல்லேலூயா கர்த்தர் அவர்கள் வாழ்க்கையை மாற்றினார்!
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் என்று சொன்னேன். (சங்:102: 28)
என்று அதே சங்கீதத்தில் தாவீது தன்னுடைய பெருமூச்சின் மத்தியில் விசுவாசத்தோடு கூறுவதைப் பார்க்கிறோம்..
நீயும் சோர்ந்து போகாதே! உன் கண்ணீரை அவர் காண்கிறார்! உன் பெருமூச்சை அவர் காண்கிறார்! உன் துக்கத்துக்கும் முடிவு உண்டு! தாவீதைப்போல விசுவாசத்தோடு காத்திரு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
