கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1276 என் மாம்சமானது உம்மையே வாஞ்சிக்கிறது!

1 சாமுவேல்: 1: 13  ” அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;”

அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் ‘இருதயத்திலே பேசினாள் ‘ என்று பார்க்கிறோம்.

அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்! அன்னாள் தன் இருதயத்திலே கர்த்தரிடம் பேசினாள் என்று இங்கு நாம் பார்க்கிறோம். அன்னாள் யாரோ எழுதி வைத்த ஜெப புத்தகத்தைத் தேடவில்லை,  யாரோ ஜெபித்த ஜெபத்தை வாசிக்கவில்லை!  தன் இருதயத்தின் நினைவுகளைக் காண வல்லவரான தேவனை நோக்கி உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தாள்.

அன்னாளைப் போல தாவீதும் தன் இருதயத்திலே கர்த்தரை தரிசிக்க ஆவலாய் , ” என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

இப்படி பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்”.   ( சங்: 63: 1,2)  என்கிறான்.

தன் ஆத்துமாவிலே தேவனைத் தேடிய அவன் கர்த்தருடைய சமுகத்திலே அவரது மகிமையைத் தரிசித்தான்.

எப்படிப்பட்ட நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது! எந்தவிதமான துக்கம் உங்கள் உள்ளத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறது என்றும் தெரியாது. ஆனால் கர்த்தருடைய சமுகத்தில், அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து உங்களுடைய இருதயத்திலிருந்து அவரைத் தேடும் போது சமாதானமும், ஆறுதலும், சுகமும் நிச்சயமாக கிடைக்கும் என்பது மட்டும் எனக்கு அனுபவப்பூர்வமாக நன்குத் தெரியும்.

“இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்…..அவர் என்னை அனுப்பினார் (ஏசா; 61: 1 – 3)

“..என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது? ” ( சங்: 56: 8)

இன்று இருதயத்திலே ஏற்பட்டிருக்கிற காயமும், வலியும் ஒருநாள் உங்களுக்கு அழகைக் கூட்டும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் ஏனெனில் அன்னாளைப் போல  இருதயம் நொறுங்கிப் போய், காயப்பட்டிருந்த அனுபவம் எனக்கும் உண்டு!  அழுகையோடும் பெருமூச்சோடும் அவருடைய சமுகத்தில் விழுந்து கிடந்த அனுபவமும் உண்டு!

பயப்படாதே! கர்த்தருடைய சமுகத்தில் வந்து அன்னாளைப் போல, தாவீதைப் போல உன் இருதயத்திலிருந்து கர்த்தரிடம் பேசு! உங்களுடைய நொறுங்கிய இருதயத்தின் காயத்தைக் கட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும்! அவருடைய ஆறுதலின் பிரசன்னம் உங்களை ஆற்றித் தேற்றும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment