கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1277 இருளுக்கு பின் ஒளி வீசும் என்பதை மறந்து விடாதே!

1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

சென்னையில் ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற பெருங்காற்று!  எங்களுடைய மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது ஒரு கனத்த பெருமழை!

அந்த வேளையில் மரங்கள் ஆடுவதையே பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய கவனத்தை, பெரு மழையில் நனைந்து கொண்டு,  மரத்தின் மேல் அமர்ந்திருந்த சில பறவைகள் ஈர்த்ததன. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது! ஆவலுடன் அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன்! அவைகள் தங்கள் நனைந்த உடலை உதறி உலர்த்திய வண்ணம் வாயைத்திறந்து சத்தமிட்டுப் பாடிக்கொண்டிருன்தன!

அன்னாள் தன் உள்ளத்திலிருந்து கர்த்தரிடம் பேசுவதைப் பார்த்த ஏலி அவளை ஆசீர்வதித்தான்  என்று பார்த்தோம். அதன்பின் அன்னாள் துக்க முகமாயிருக்கவில்லை  என்று வேதம் சொல்கிறது.

அவளுடைய இருண்ட வாழ்க்கையில், கரு மேகங்களுடன் பெய்த மழைக்கு பின், சற்று கதிரவன் உதித்தது போல அவள் தேவன் மேல் வைத்த விசுவாசம் அவளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அந்த ஒளி அவள் இருதயத்தில் ஊடுருவியவுடன் அவள் முகத்திலிருந்த துக்கம் மாறிப்போயிற்று!  அந்த ஆகாயத்துப் பறவைகளைப் போல அவள் உள்ளம்  தன்னுடைய வாழ்வில் சூழ்ந்த  துக்கத்தை மறந்து கர்த்தரைத் துதித்தது!

அதுவரையிலும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த அன்னாள் தன் ஜெபத்துக்கு தக்க நேரத்தில் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து போய் போஜனம் பண்ணினாள்.

நாம் ஒவ்வொருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கும் துக்கம் வேறு வேறாக இருக்கலாம்! அன்னாள் தன் ஜெபம் கேட்கப் படாமல் இருந்தபோது, தன்னை நெருக்கிய வேதனையைத் தாங்க முடியாமல் சாப்பிடாமல் துக்கித்துக் கொண்டிருந்தாள். பிள்ளை பெற முடியாத மலட்டுத்தன்மை, ஈட்டி போல குத்திய வார்த்தைகள் இவை அவள் வாழ்வை இருள் சூழ செய்திருந்தது.

இன்று நீ உன்னுடைய வாழ்வில் எந்த சுழ்நிலையைக் கடந்து கொண்டிருக்கிறாய்? இருளும், பெருங்காற்றும், பெருமழையும் உன் வாழ்வில் சூழ்ந்து உள்ளனவா?

ஒருவேளை உன் வாழ்க்கைத் துணைவரால் நீ கடும் புயலைக் கடந்து கொண்டிருக்கலாம், அல்லது குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் படும் பாடுகள் உன்னை பெருங்காற்றாய் வதைத்துக் கொண்டிருக்கலாம்! ஒருவேளை உன்னுடைய வியாதி, கடன் பிரச்சனைகள் உன்னை இருளில் ஆழ்த்திக் கொண்டிருக்கலாம்! அல்லது உன் பிள்ளைகளால் நீ படும் வேதனை உன்னை இருள் சூழ செய்திருக்கலாம்!

அன்பு சகோதரனே! சகோதரியே! உன் துக்கம் எதுவாயிருந்தாலும் சரி, பெரும்புயலுக்கு பின் உன் வாழ்வில் ஒளி வீசும் என்பதை மறந்து போகாதே!

எந்த நேரமானாலும் சரி, எந்த இடமாயிருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஜெபத்தை ஆவலுடன் கேட்டு பதிலளிப்பார். அவருடைய சமுகத்துக்கு சென்று அவர் மேல் உன் பாரங்களை இறக்கி வை!  அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை! அவர் உனக்காக யாவையும் சுமப்பார்! அன்னாளைப் போல முகப்பிரகாசத்துடன் கடந்து செல்!

நீ ஏன் இன்று துக்க முகமாயிருக்கிறாய்? எழுந்து போஜனம் செய்! கர்த்தர் உன் வேண்டுதலைக் கேட்டார் என்று விசுவாசி!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment