கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1280 புயலுக்கு முன்னரே நங்கூரத்தை ஸ்திரமாய் போடு!

1 சாமுவேல்: 2: 11, 12  ” பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.”

நாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை!  இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான்!  நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன! சில பாடங்களை நாம் கடந்து வரும் கடினமான அனுபவங்களுக்கு பின்னர் தான் கற்றுக்கொள்கிறோம்.

ஒருசிலர் வாழ்க்கையில் சரியான அடி வாங்கிய பின்னர்தான் கடவுளைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆவிக்குரிய பாடங்களை அவர்களுக்குக் கற்றுக் கொள்ள அவர்கள் அலைகளையும் புயலையும் காண வேண்டியதுள்ளது. வாழ்க்கையில் புயல் வீசுமுன்னர் ஆவிக்குரிய வாழ்வின் நங்கூரம்  ஸ்திரமாக போடப் படுமானால் நாம் எவ்வளவு பாக்கியசாலிகளாக இருப்போம்! , நம் வாழ்க்கை என்னும்  படகு ஆடும்போது கர்த்தரை இறுகப் பற்றிக் கொள்ள நமக்கு அது உதவியாக இருக்கும் அல்லவா!

நாம் அன்னாள் என்றத் தாயைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் வாழ்வில் கடுமையான ஏமாற்றங்கள் இருந்தபோதும் அவள் கர்த்தரைப் பற்றுவதை விடவேயில்லை. அவள் ஜெபம் கேட்கப்படாமலிருந்தபோதும் அவள் ஜெபிப்பதை விடவேயில்லை!  தேவனுடைய ஆலயத்துக்கு செல்வதில் எந்தப் பயனும் இல்லை என்றுத் தோன்றிய போதும் ஆலயத்துக்கு செல்வதை விடவே யில்லை.  ஏனெனில் அவளுடைய அஸ்திபாரம் கர்த்தர் மேல் கட்டப்பட்டிருந்ததால் இவை எதுவும் அவளை அசைக்கவில்லை.

அவளுடைய குமாரன் சாமுவேலை சீலோவில் உள்ள தேவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்யும் படியாக விடும் காலம் நெருங்கியது. அந்தக் காலத்தில் இஸ்ரவேல் மக்களிடம் கர்த்தருடைய பயம் இல்லை. கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் குமாரரோ கர்த்தரின் வழியில் நடக்கவில்லை.

அந்த சமயத்தில் அன்னாளின் இடத்தில் நான் ஒருவேளை இருந்திருந்தால் என் பிள்ளையை கடவுள் பயமில்லாதவர்கள் மத்தியில் வளர அனுமதித்திருக்க மாட்டேன். பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது எத்தனை தடவை யோசித்து சேர்த்திருப்பேன்! ஆண்டவரே என் பிள்ளை இந்த ராமாவிலே என்னிடத்திலே வளர்ந்தால் உம்முடைய பயத்தில் வளர்வான், அந்த ஏலியின் குமாரர் இருக்கும் இடத்தில் என் பிள்ளையை எப்படி விடுவது என்று கேட்டிருப்பேன்.

ஆனாள் அன்னாள் அப்படி எண்ணவே இல்லை!  அவள் பாத்திரம் நிரம்பி வழிந்ததால் அவளுடைய பிள்ளையின் வாழ்க்கையிலும் அந்த ஆசீர்வாதத்தை அவளால் கொடுக்கமுடிந்தது. மழலைப் பருவத்திலேயே சாமுவேலின் வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருந்தாள். அவனுக்குள் உள்ளவர் உலகத்திலும் பெரியவர் என்று அன்னாளுக்கு நன்கு தெரியும்.

தேவனுடைய பிள்ளைகளே நம்முடைய ஆவிக்குரிய பாத்திரம் நிரம்பி வழியுமானால் மட்டுமே அந்த ஆசீர்வாதம் நம்முடைய பிள்ளைகளையும் நிரப்பும். சிறு வயதிலேயே கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுப்போமானால் அவர்கள் வளரும் போது அவர்களைப் பற்றிய பயம் நமக்கிருக்காது! சிறு வயதிலேயே அவர்கள் கர்த்தருக்கு பயந்து வாழக் கற்றுக்கொண்டால் பின்னர் அவர்கள் அவரில் வேரூன்றி நிலைத்து நிற்பார்கள்.

கர்த்தருக்குப் பயப்படுதலை நாம் ஊட்டி வளர்க்காமல் விட்டு விட்டு, பின்னர் அவர்கள் சீரழிவதைப் பார்த்து கண்ணீர் வடித்து பயனில்லை!  புயல் வருமுன்னரே அஸ்திபாரத்தை உறுதியாகப் போட்டால் எந்தப் புயலும் நம் பிள்ளைகளை சீரழிக்காது!

அன்னாள் சாமுவேலை வளர்த்ததைப் போல பிள்ளைகளை வளர்க்கும் ஞானத்தை தேவனிடம் நாடுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment