கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1287 உனக்குள் எழுப்புதல் கொழுந்து விட்டு எரியட்டும்!

1 சாமுவேல் 7:8 (இஸ்ரவேல் புத்திரர்) சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள்.

இருபது வருடங்கள்! கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டுப் போய் இருபது வருடங்கள்! பெலிஸ்தரின் கைக்குள் அடங்கி பாடுகள் அனுபவித்து விட்டு கடைசியில், இதுவரை பட்டது போதும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலைத் தேடி வருகின்றனர்! எங்களுக்காக ஜெபியுங்கள் என்று அவரிடம் மன்றாடினர்! தோல்வியுற்ற வாழ்க்கையுடன்,ஜெபிக்க பெலனற்றவர்களாய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்யும் தைரியம் இல்லாமல் அவர்கள் சாமுவேலை அணுகுகின்றனர்! அப்பொழுது சாமுவேல் கர்த்தரை நோக்கி அவர்களுக்காக வேண்டிக் கொண்டான், கர்த்தரும் மறுமொழி அருளிச்செய்தார் என்றுப் பார்க்கிறோம்.

சில நேரங்களில் நான், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்காக ஜெபிப்பேன் என்று கூறுவது உண்டு!ஆனால் ஜெபமே நான் செய்யக்கூடிய உதவிகளில் மிகச்சிறந்த ஒன்று என்று நான் உணர மறந்து விடுகிறேன்.

இன்று நாம் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப் படுவதைப் பற்றி கேள்விப் படுகிறோம், அநேகக் கிறிஸ்தவர்கள் இன்று மிகுந்த பாரத்தோடு ஜெபிக்கக் கூட பெலனற்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்காக ஜெபிப்பது நம் கடமையல்லவா? ஜெபத்தில் அவர்களை நாம் தாங்கும் போது, அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியை செய்கிறோம்.

நாம் ஜெபிக்கும் போது நம்முடைய தேவனைப் பற்றி நாம் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறோம், அவருக்கும் நமக்கும் எப்படிப்பட்ட உறவு உள்ளது என்பது விளங்குகிறது! ஜெபம் என்பது ஒருதலைப் பட்டப் பேச்சு வார்த்தை அல்ல! வேதத்தின் மூலம் அவருடைய சத்தத்துக்கு நாம் செவிசாய்ப்பதும் மிகவும் அவசியம்.

இதை எழுதும்போது, ஜன்னல் வழியே வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களையும், மேகங்களுக்குள் ஒளிந்திருந்த நிலாவையும் கண்டவுடன், இவற்றை எட்டிப் பிடிக்க என்னால் கூடவே கூடாது ஆனால் என் அறையைப் பூட்டி என் பிதாவை நோக்கி நான் ஜெபிக்கும் போது வானத்தையும் பூமியையும் படைத்த தேவனை என்னால் நெருங்கி சேர முடியும் என்பதை என் உள்ளம் எனக்கு உணர்த்தியது.

உன் தினசரி வாழ்வில் ஜெபம் உண்டா? உனக்காக மட்டுமல்லாமல், எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டும் மற்றவர்களுக்காகவும் நீ ஜெபிப்பது உண்டா? இல்லையானால் இன்றே ஜெபிக்க ஆரம்பி! தேவனுடைய பிரசன்னத்தை உன்னால் எட்ட முடியும்! இது என்னுடைய அனுபவம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment