கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1319 அன்றிருந்த அதே தேவன் தான் இன்றும் நம்மோடிருக்கிறார்!

1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்.

ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது!  வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய வசனத்தில், ஒருமுறை கரடி  மட்டும் அல்ல  சிங்கமும்  தாவீதையும் அவனுடைய ஆடுகளையும் தாக்கவந்தபோது கர்த்தர் அவைகளின் கையிலிருந்து தன்னையும் தன்னுடைய ஆடுகளையும்  தப்பவைத்தார்  என்று அவன் கூறுவதைப் பார்க்கிறோம்.

கோலியாத்தை எதிர்க்க, எந்த அனுபவமுமில்லாத  தாவீதால் முடியும்  என்று சவுல் ராஜாவால் நம்பமுடியவில்லை. எந்த அனுபவமுமே இல்லாத ஒருவனை, மகா வீரனான  கோலியாத்தை எதிர்க்க எப்படி அனுப்பமுடியும் என்று சவுல் எண்ணினான். அதற்குத் தாவீது, என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் எந்த சந்தேகமுமில்லாமல் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று உறுதியான நம்பிக்கையோடே கூறினான்.

தாவீதின் உள்ளம் அவனுடைய கடந்த காலத்தில், சிங்கம், கரடி போன்ற பேராபத்து தன்னை நெருங்கினபோது கர்த்தர் தம்மைத் தப்புவித்ததை நினைத்துப் பார்த்தது. அதே தேவன் கோலியாத்திடமிருந்தும் தன்னைத் தப்புவிப்பார் என்று உறுதியாக நம்பினது.

இது நமக்கு ஒருபாடமாக இல்லையா! கடந்த காலத்தில் நம்மோடிருந்து வழிநடத்திய தேவன், ஆபத்துகளைத் தாண்டிவர உதவிய தேவன், சோதனைகளில் வெற்றி காணச்செய்த தேவன்  வருகின்ற நாட்களிலும் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தை நமக்குக் கொடுக்கவில்லையா? தாவீது தன்னுடைய சிறு வயதிலேயே இதை விசுவாசித்தான், ஆனால் நாமோ சந்தேகப்பட்டுத் தவிக்கிறோம்.

ஐயோ எனக்கு முன்னால் இவ்வளவு பெரிய பிரச்சனை உள்ளதே, நான் என்ன செய்வேன் என்று மனதில் கண்ணீர் வடிக்கும் உன்னைப் பார்த்து கர்த்தர் சொல்கிறார், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்! அன்று உன்னைக் கரம்பிடித்து நடத்திய நான் இன்றும் உன்னோடே இருக்கிறேன் என்கிறார். தாவீதைப் போல உறுதியாய் அவரை நம்பு! வெற்றி உன்பக்கம்!

கோலியாத்தைப் போல மாபெரிய சோதனை நம்மை எதிர் கொண்டாலும் நாம் பயப்பட வேண்டாம். அன்று நடத்திய அதே தேவன் இன்றும் நம்மோடிருக்கிறார்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment