கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1323 ஆபத்தான விளையாட்டு!

1 சாமுவேல்: 18: 7 -9 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து ….

இஸ்ரவேலில் கொண்டாட்டம்! பெண்கள் ஆடல் பாடலுடன் தாவீதின் வெற்றியைக் கொண்டாடினர். பெண்கள் தெருக்களில் கூடி சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடுவதை சற்று மனக்கண்கள் முன்பு கொண்டுவாருங்கள்! எத்தனை களிப்பு! எத்தனை சிரிப்பு! எல்லா திசையிலும் கலகலவென்று சிரிப்பொலி கேட்டது.

பெலிஸ்தருடன் யுத்தம் முடிவடைந்துவிட்டது. எல்லோரும் சந்தோஷமாய்க் களிகூறும் நேரத்தில்  இன்னொரு யுத்தம் ஆரம்பிக்கிறது. இந்த யுத்தம் தான் என்னைப்பொறுத்தவரை பல குடும்பங்களில், நண்பர்கள் மத்தியில், ஏன் நம்முடைய திருச்சபைகளிலும் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.  ஒருவரையொருவர் ஒப்பிடுதல் என்ற யுத்தம்!

இங்கு இஸ்ரவேலின் பெண்கள் சவுலையும் தாவீதையும் ஒப்பிட்டு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்து விட்டனர், அது அடக்க முடியாமல் பற்றி எரிந்து விட்டது! சவுலுக்குள் ஒளிந்திருந்த பொறாமை என்ற அசுரனைப் பற்றி அறியாமல்தான் இந்தப் பெண்கள் அவர்களை ஒப்பிட்டு பாடிவிட்டனர். ஆனால் அந்த அசுரன் தாவீதைக் கொல்லத்துணிவான் என்று கொஞ்சமும் அறியவில்லை.

சில நேரங்களில் இந்தப் பெண்களைப்போல நம்முடைய அறியாமையால்,  ‘அவன் அண்ணன் மாதிரி ஸ்மார்ட்டாக தம்பி இல்லை,  என்ன இருந்தாலும் உன் அக்கா மாதிரி நீ இல்லை ‘ என்று சற்றும் யோசிக்காமல் ஒப்பிட்டு பேசுவது உண்டு அல்லவா!  தாலந்து உள்ள பிள்ளைகளை அவர்கள் கூடப்பிறந்தவர்களோடு ஒப்பிட்டு பேசி எத்தனைக் குடும்பங்களில் பிரச்சனைகள் எழும்புகின்றன!

ஆனால் குடும்பத்தில் மட்டுமல்ல நம்முடைய திருச்சபைகளிலும் இது நடக்கின்றது அல்லவா! ஒரு போதகர் போய் மற்ற போதகர் பொறுப்பேற்கும்போது நாம் எப்படி பேசுகிறோம்?  அதுவும் பழைய தகரபோதகர் நமக்கெல்லாம் பிடித்தவராக இருந்தால் நாம் அடுத்தவரைப் பற்றி என்னவெல்லாம் பேசுவோம்?

இஸ்ரவேலிலே பெண்கள்தான்  இந்த ஒப்பிடுதல் விளையாட்டை விளையாடினர் என்பதை மறக்கவேண்டாம். தாவீது இளைஞன், அழகானவன், வீரன், தைரியமானவன், புத்திசாலி இவை போதாதா பெண்களுக்கு! இந்த விளையாட்டு எத்தனைப் பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்து உள்ளது தெரியுமா? பெற்றக் குழந்தைகளையும், கணவனையும் விட்டு விட்டு, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஒப்பிட்டு மற்றவனோடு ஓடிய எத்தனைக் கதைகளை தினமும் கேட்கிறோம்!

உங்களுக்கு அன்பானர்வகளை மற்றவர்களோடு ஒப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்! அது ஆபத்தானது!  கர்த்தர் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை! அவர் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைகளையும் விசேஷித்தவர்களாகக்  காண்கிறார்.

நம் ஒவ்வொருவரிலும் அவருடைய சிருஷ்டிப்பின் அழகு காணப்படுகிறது! ஒருவரை மற்றொருவரோடு ஒப்பிட்டு பேசி கர்த்தருடைய் சிருஷ்டிப்பை குறைகூற வேண்டாம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment