கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1350 நல்வழிப்படுத்தும் ஒரு வேத பாடம்!

1 சாமுவேல் 25: 15 -17   அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும்.

ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை  கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கைகளில் நடந்த நன்மை, தீமை யாவற்றையும் கதையைப்போல  நம் மனதில் நிற்பவைகளாக எழுதியிருக்கிறார்.  அதனால் தான் நாம் வேதத்தில் காணும் அன்றாட வாழ்க்கைக்கானப் பாடங்களை தவறாமல் படித்து, புரிந்து, அவற்றை நம்  மனதில் எழுதிக்கொள்ளவேண்டும். அப்படி செய்வோமானால் அவை நம்மை நல்லவழியில் நடக்க உதவும்.

இங்கு தாவீதின் வாழ்வில் கால்பதித்த அபிகாயிலை ஒரு புத்திசாலியானப் பெண்ணாகப் பார்க்கிறோம். புத்திசாலித்தனத்தில் பலவகை உண்டுதானே!  இந்தப்பெண்ணிடம் நான் கண்டது நடைமுறை புத்திசாலித்தனம்! அவளுடைய ஊழியக்காரன் ஒருவன் வந்து அவள் கணவனாகிய நாபால் தாவீதின் மனுஷரிடம் சீறினான் என்று சொன்னவுடன் அவள் இருக்கையிலிருந்து எழுந்து கண்ட வார்த்தைகளால் நாபாலைத் திட்டவில்லை ! தொடர்ந்து அவன் கூறிய சம்பவங்களை பொறுமையோடு கேட்டாள். ஒரு புத்திசாலியின் அடையாளம்!

அவளுடைய ஊழியக்காரனின் வார்த்தைகளைப் பொறுமையோடு செவி கொடுத்து கேட்டதால் அபிகாயிலுக்கு தாவீது தமக்கு எந்த தீமையும் செய்யவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அவள் கணவன் தாவீதிடம் பொல்லங்கான வார்த்தைகளைப் பேசியது தவறானது என்றும் புரிந்துகொண்டாள்.

தன்னிடம் பேசிய ஊழியக்காரனை அபிகாயில் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. அநேகர் வேலையில் இருப்பார்கள், விசேஷமாக ஆடுகள் மயிர் கத்தரிக்கும் வேளையில் எல்லோரும் அங்கு கூடுவார்கள். அவளுக்கு ஒவ்வொருவரையும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அதனால் அந்த ஊழியன், திருமதி நாபால் அவர்களே! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அதனால் நான் சொல்வதை கொஞ்சம் கவனித்து செயல் படுங்கள் என்று கூறியிருக்கலாம்!

அபிகாயிலுக்கு அவளுடைய கணவனைப்பற்றி நன்கு தெரியும். அவனுடைய செயல்களில் அவன் துராக்கிருதன் என்று அறிவாள். நாபாலின் குணத்தோடு இந்த ஊழியரின் வார்த்தைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெளிவாகப் புரிந்தது. முழுக்கதையையும் கேட்டு அறிந்து கொண்டாள்!

கவனித்து செயல் படுவது புத்திசாலித்தனம்! இது நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம்! எந்த முக்கிய்மான காரியத்திலும்  பொறுமையாக யோசித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து செயல்படுவோமானால் தவறான முடிவுக்குள் நாம் செல்ல மாட்டோம்.

இன்னும் ஒருபடி அதிகமாகக் கூறுகிறேன். கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, படித்து, அவர் நமக்கு வேதத்தின் மூலமாக அளிக்கும் ஞானத்தின் மூலம் செயல் படுவதுவதுதான் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த புத்திசாலித்தனம்!

நீ செய்யவேண்டிய காரியத்தை கவனித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து அவருடைய வழிநடத்துதலை அறிந்து செயல்படு! அபிகாயிலைப்போல ஒவ்வொரு காரியத்தையும் சரியாக எடை போட்டு பின்னர் செயல்பட வேண்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

Leave a comment