கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1376 ஏமாற்றத்தால் பயம் மட்டுமே மிஞ்சும் !

1 சாமுவேல்28: 11 – 13  அப்பொழுது அந்த ஸ்திரீ உமக்கு  நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்…….

……தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் நம் தேவனாகிய கர்த்தர் நம்மை பாதுகாத்து வழிநடத்துமாறு ஜெபிப்போம்.

சவுல் இஸ்ரவேலை ஆளும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட முதல் ராஜா! எல்லோரையும் விட உயரமானவன்!  கண்ணைக்கவரும் ஆணழகன்! இஸ்ரவேலர் எல்லோரும் பெருமை பாராட்டக்கூடிய திறமைசாலி!

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சவுலின் உண்மையான ரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தாழ்மையான தலைவனாக இல்லாமல், முரட்டு குணமும், கேவலமான பொறாமையும், பொல்லாங்கான குணமும் கொண்டவனாக வெளிப்பட்டான்.

கடைசியாக கர்த்தருடைய வார்த்தையை மதிக்காமல், கீழ்ப்படியாமல் நடந்த சம்பவத்தில் சாமுவேல் அவன் இனி ராஜாவாக நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். ஆதலால் பெலிஸ்த சேனை பாளயமிறங்கியவுடன் பயத்தில் நடுங்கிக்கொண்டு அஞ்சனம் பார்க்கும் ஒரு பெண்ணை நோக்கி ஓடுகிறான்.

ஏவாள் புத்திசாலியான சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டு கனியை சாப்பிட்டவிதமாக, அந்தப் பெண்ணின் உபசாரத்தில் மயங்கி அவள் தயாரித்த விருந்தை உண்ணுகிறான். கர்த்தரால் தடைபண்ணப்பட்ட உலகத்துக்குள் சவுல் வேகமாக சருக்கி விழுகிறான்.

இந்த உலகத்துக்குள் ஏமாற்றுத்தனமும், பொய்யும் மட்டுமே உண்டு. ஏதேன் தோட்டத்தில் நடந்ததை சிந்தித்துப் பாருங்கள்! பொய்யை உண்மையென்று நம்பும்படியாக பேசுகிறான்  சாத்தான். தேவர்களைப் போலாகலாம் என்ற பொய்யான பாதுகாப்பும் கொடுக்கிறான். கடைசியில் என்ன மிஞ்சியது? பயம்! பயம் மட்டும்தான்!

இங்கு சவுலும், எந்தோரின் அஞ்சனம் பார்க்கும் பெண்ணும் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள்!   அவளிடம் முதலில் தான் யாரென்று மறைத்து பொய் சொல்லுகிறான் சவுல். பின்னர் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது என்று பாதுகாப்பான வார்த்தைகளை பேசுகிறான். கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது பயம்! பயம் மட்டும்தான்!

உலோகங்களை அவைகளின் சத்ததைக்கொண்டு கண்டுபிடிக்க முடியும்! அப்படியே மனிதரை அவர்கள் வார்த்தைகள் மூலமாகக் கண்டுபிடிக்கமுடியும்!  இங்கு இந்த இருவருமே சாத்தானின் பிள்ளைகள் என்பது அவர்கள் வார்த்தையில் தெளிவாயிற்று.

இப்படித்தான் பொல்லாங்கானவன் தம்முடைய வார்த்தைகளால் நம்மையும் ஏமாற்றுவான்! கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் செவிகொடுக்காமல், நம்மை வஞ்சிக்கும் வார்த்தைகளுக்கு நாம் செவி சாய்த்து, பொய்யை உண்மை என்று நம்பி, நாம் ஏமாறும் போது, நமக்கு பயம் மட்டும்தான் மிஞ்சும்! சாத்தான் வஞ்சகம் பேசுவான் ஆனால் நம்முடைய  கர்த்தரோ,

அவர் தம்முடைய ஜனங்களுக்கும், தம்முடைய பரிசுத்தவான்களுக்கும்,சமாதானம் கூறுவார்

 ( சங்:85:8)

சாத்தானுடைய பொய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நாம் தேவனுடைய சத்திய வார்த்தைகளை அதிகம் அறிந்திருக்கவேண்டும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment