கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1380 நண்பர்களைப் பற்றி நாம் பேசும் அவதூறு!

2 சாமுவேல் 3: 7 – 8 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்ன்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள். இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபம் கொண்டு……. என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யுதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?

கடந்த மாதம் தேர்தல் போர் என்ற தலைப்பில் அவ்வப்பொழுது செய்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். உண்மைக்கு தட்டுபாடாகிய  நிலைமைதான் இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வந்தனர். ஒருவரின் பெயரை தரைமட்டமாக பேசி அழிப்பதையே மற்றவர் குறிக்கோளாக கொண்டிருந்தனர்.

கர்த்தருடைய வார்த்தை இன்றைய சூழ்நிலைக்கு  எப்படி பொருந்துகிறது என்று , இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு காட்டுகிறது.  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமாயிருந்தாலும், நம்முடைய வாழ்வுக்குத் தேவையான பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.

இந்தக் கதையை நீங்கள் முன்பு வாசித்ததுண்டா? நான் வேதத்தை பலமுறை வாசித்திருந்தாலும் உண்மையில் இந்தக் கதை எனக்கு ஞாபகமே இல்லை!

இதன் பின்னணியை சற்று சுருக்கமாக சொல்கிறேன்.

தாவீது செய்த உதவிக்கு நன்றி செலுத்தாமல், அதற்கு பதிலாக தீங்கு செய்ய நினைத்த சவுலின் குடும்பத்தில் வளர்ந்தவன் தான் அவனுடைய இளைய குமாரன் இஸ்போசேத். சவுலின் மரணத்துக்கு பின்னர் அவனுடைய படைத்தலைவனாகிய அப்னேர், இஸ்போசேத்தை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். அதற்காகத் தன் காலமெல்லாம் நன்றியோடு இருக்கவேண்டிய இஸ்போசேத், அப்னேர் தன்னுடைய குடும்பத்தில் பலத்தவனாயிருப்பதைக் கண்டு அவன் மேல் வீண்பழி சுமத்துகிறான்.

மிகக் கொடிய முறையில் அப்னேர் தன் தகப்பனாகிய சவுலின் மறுமனையாட்டியை தனக்கு சொந்தமாக்கியதாகப் பழி போடுகிறான்.

மறுமனையாட்டி என்பது ராஜாக்களின் காலத்தில் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை. இது  வேசித்தனம் அல்ல! இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படுவதுதான். அநேக ஏழைப் பெண்கள் இப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது ஸ்தானத்தில் மனப்பூர்வமாக வாழ முடிவு செய்வது வழக்கம். இங்கே சொல்லப்பட்ட  ரிஸ்பாள் சவுலின் மறுமனையாட்டி, சவுலுக்கு சொந்தமானவள். சவுலின் குடும்பத்தை சேர்ந்தவள்.

இஸ்போசேத் இங்கு கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண்ணைத் தனக்கு சாதகமாக உபயோகப்படுத்தி அப்னேர் மேல் பழி சுமத்துகிறான். ஆனால் அப்னேர் கை கட்டிக்கொண்டு அந்தப்பழியை ஏற்கவில்லை! அதற்கு பதிலடி கொடுக்க முடிவெடுக்கிறதைப் பார்க்கிறோம்.

இதை வாசிக்கும்போது, அப்னேரைப்போன்ற உண்மையான ஒரு நண்பனின் பெயரைக் கெடுக்க இஸ்போசேத் எப்படித் துணிந்தான் என்று தான் நினைக்கத் தோன்றியது.

நாம்கூட சிலநேரங்களில் நம்முடைய நண்பர்களைப்பற்றி வீண்காரியங்களைப் பேசுவதில்லையா? ஒருவேளை அது அந்த நண்பரின் காதுக்கு எட்டுமாயின் அவர் மனது புண்படுமே என்று நினைப்பதேயில்லை!

அதே சமயத்தில் நண்பர்களைப் பற்றி பேசப்படும் அவதூறுகளை செவி கொடுத்து கேட்பதும் தவறே!

ஒருவரைப்பற்றி  அவதூறு சொல்வதை விட பெரிய கெடுதி நாம் யாருக்குமே இழைக்க முடியாது. நாம் பேசும் ஒரே ஒரு வார்த்தையில் கூட ஒருவரின் பெயரை அழித்துவிடலாம்.

கர்த்தர் இப்படிப்பட்ட பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்படி ஜெபிப்போம்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment