2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்.
இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன். என்னுடைய வாலிப வயதில் நான் விரும்பினவை எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை. சில நேரங்களில் நான் எதிர்பார்க்காமல் வந்த சில சிறிய சந்தோஷம் கூட எனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக இருந்தது. ஆனால் இன்று என்னுடைய வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும்போது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடினால் இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தம் நிறைவேறியதை மட்டுமே பார்க்கிறேன்.
சவுலுடைய சேனையின் தளபதியாகிய அப்னேர் தாவீதைப் பார்த்து உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்பதைப் பார்க்கிறோம்.
அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் மேல் கடும் கோபமூண்டு இருந்தான் என்று நாம் பார்த்தோம். ஏனெனில் அவன் அப்னேரை ஒரு பெண்ணுடன் இணைத்து அவதூறு பேசியிருந்தான். அதற்கு பழிவாங்கவே அவன் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் தாவீதின் ஆளுகைக்கு உட்படுத்த முயன்றான். அதை இதுவரை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்தான்.
இந்த நல்ல செய்தியை தாவீதிடம் சொல்ல வந்த அப்னேர், உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இந்தப் பகுதியில் நான் சேர்க்க வேண்டிய வாசகம் ஒன்றே ஒன்றுதான்! உன் ஆத்துமா எதை விரும்புகிறது என்பதைக் குறித்து ஜாக்கிரதை!
அப்பப்பா! தாவீதின் ஆத்துமா அப்னேரின் வார்த்தைகளை அப்படியே பற்றிக்கொண்டது போலும்! விசேஷமாக பெண்களின் விஷயத்தில்! அவன் விரும்பியதையெல்லாம் அடைய நினைத்தான்! அவனிடம் அதிகாரம் இருந்தது! வல்லமை இருந்தது! பணம் இருந்தது! அதனால் அவன் தான் எதை விரும்பினானோ அதை அடைய நினைத்தான்!
இது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தது மட்டுமல்ல இன்றும் நடக்கிறது! இன்றைக்கு மீடியா அல்லது டிவி மூலமாக நாம் பார்க்கிற வாழ்க்கை நமக்கு வேண்டும் என்ற ஆசை! கிரெடிட் கார்டுகள் கடன் கொடுப்பதால் எல்லாவற்றையும் வாங்க ஆசை!
அப்னேர் தாவீதின் இருதயத்தில் விதைத்த விதை தான் அவன் வாழ்க்கையை பாழாக்கியதோ என்று ஒருவேளை நாம் நினைக்கலாம். ஆனால் அது அல்ல! அதை தாவீதே மறுதலிப்பதை பாருங்கள்!
இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர், அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். ( சங் 51: 5,6)
அருமையான தேவனுடைய பிள்ளைகளே! நாம் கட்டுக்கடங்காமல் நம்முடைய மனதை பலவித ஆசைகளின் மேல் அலையவிடுவதும் நாம் நம் தாயின் வயிற்றிலிருந்தே துர்க்குணத்தில் உருவானதுதான் காரணம். நம்முடைய உள்ளத்தில் ஆசை என்னும் விதையை விதைக்க ஒரு அப்னேர் வரவேண்டியதில்லை. சற்று இடம் கொடுத்துவிட்டால் போதும் ஆசைகள் தலைதூக்கிவிடும்!
ஆனால் இவற்றின்மேல் நாம் வெற்றிபெற வேண்டுமென்றும், நாம் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும் தேவ்னாகிய கர்த்தர் விரும்புகிறார். அதுமட்டுமல்ல அதற்கான தெய்வீக ஞானத்தையும் நமக்கு அவர் கொடுக்க சித்தமுள்ளவராயிருக்கிறார்.
கர்த்தருடைய சித்தமில்லாத காரியத்திலும், கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்திலும் மனதை அலைய விட வேண்டாம்!
இன்று உன் ஆத்துமா எதை அல்லது யாரை வாஞ்சிக்கிறது என்று உன்னையே சோதித்து பார்! முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை மட்டும் தேடு! உள்ளத்தில் உண்மையிருக்க தேவன் விரும்புகிறார்! மற்றவற்றை தேவன் பார்த்துக் கொள்வார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
