கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1391 நம்மைப் போஷித்து, காத்து, வழிநடத்தும் பொறுப்புள்ளவர்!

மத்தேயு:10:29    ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.

ஒருநாள் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் ( பைசன்) காட்டு எருமைகளைப் பார்த்தோம். உடனே  காரை ஓரமாக நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க  ஆரம்பித்தோம். அப்பொழுது பின்னால் இருந்த கூட்டத்துக்கு தலைவர் போல இருந்த ஒரு பலமான தோற்றம் கொண்ட ஒரு மாடு தலையை உயர்த்தி எங்களுடைய காரை முறைத்து பார்க்க ஆரம்பித்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த என் மகன் உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டான்! அந்த மலையில் வாழும் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்திருந்த அவன் இந்த விலங்குகள் எப்பொழுதும் ஒரு தலைமையை வைத்திருக்கும் என்றும், தனக்கு பின்னால் உள்ள கூட்டத்துக்கு அந்த தலைமை விலங்கே பாதுகாப்பு அளிக்கும் என்று சொன்னான். நாங்கள் காரிலிருந்து அவைகளைப் பார்க்கிறோம் என்று தெரிந்தவுடன் தன் தலையை உயர்த்தி எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்த அந்த ஒரு பைசன் என் கண்களை விட்டு அகன்றதே இல்லை!

தன்னை நம்பியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு  விலங்குகள் மத்தியிலும் காணப்படுகிறது!  இந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம், தான் படைத்த விலங்குக்கே இப்படிப்பட்ட குணத்தைக் கொடுத்த தேவன் தம்மை அண்டினவர்களை எவ்விதம் பாதுகாத்து வழிநடத்துவார் என்று யோசிப்பேன்.

நாங்கள் கடந்த முறை இஸ்ரவேல் நாட்டுக்கு சென்ற போது எகிப்தின் வனாந்திரம் வழியாக இஸ்ரவேலுக்குள் செல்லும்போதுதான் கர்த்தர் ஏன் இஸ்ரவேல் மக்களை இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும், பகலில் மேக ஸ்தம்பமாகவும் முன் சென்று வழிநடத்தினார் என்பது புரிந்தது. அந்த வனாந்தரத்தில் பகலில் கொடும் வெயில் அடிக்கிறது அதனால் அவர்களை மேகத்தினால் மூடியும், இரவில் குளிர்ந்த காற்று அடித்து நடுக்க செய்வதால் அக்கினி ஸ்தம்பத்தால் அனல் அளித்தும் அவர்களுடைய பிரயாணம் அவர்களுக்கு களைப்பைக் கொடுக்காதபடி ஒரு ஏர்கண்டிஷனை அல்லவா தேவனாகிய கர்த்தர்  ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்!

கர்த்தராகிய இயேசு கூறுவதைப் பாருங்கள்! வானத்து பறவைகளை கவனிக்கும் தேவன் நம்மை மறந்துவிடுவாரா என்ன? உன் ஜீவனுள்ள காலமெல்லாம் உன்னோடிருப்பேன் என்று சொன்னவர் நம்மை கைவிட்டு விடுவாரா என்ன?

அவரை முழுமனதோடும் நேசிக்கும் அவருடைய பிள்ளைகளை பாதுகாத்து, போஷித்து வழிநடத்தும் பொறுப்பு நம்முடைய தேவனை சார்ந்தது அல்லவா?

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் இந்த நான்கு நாட்களும் பார்த்த விதமாக நம்முடைய் கர்த்தராகிய இயேசு உண்மையுள்ளவர், நம்பத்தகுந்தவர், மாறாதவர், பொறுப்புள்ளவர்! அவரோடு நாம் கொள்ளும் உறவு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment