2 சாமுவேல் 6:21, 22 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்….. அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.
என்னை யாராவது தீண்டி விட்டால் சும்மா இருக்கமாட்டேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா!
தாவீதும் மீகாளும் அப்படிதான் இங்கு நடந்து கொண்டனர். என்னைப்பற்றி நீ அவதூறு சொன்னால் நான் மட்டும் சும்மா இருப்பேனா என்று தாவீதும் மீகாளிடம் பதில் பேசுவதை இன்றைய வேதாகமப்பகுதி காண்பிக்கிறது. தாவீது தன்னை இஸ்ரவேலின் தலைவனாகத் தெரிந்து கொண்டது கர்த்தர் தானேத் தவிர வேறு எந்த மனுஷனும் இல்லை என்று அவள் மேல் கணையை எறிந்தான்.
மீகாளுடைய தகப்பனாகிய சவுலும் அவளுடைய சகோதரர் அனைவரும் போரில் மரித்துப் போயிருந்தார்கள். அவளும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த அவளுடைய கணவனை விட்டு பிரித்து வரப்பட்டிருந்தாள். அவளை மிகவும் நேசித்த ஒருவனைவிட்டு விட்டு வந்து இப்பொழுது அரண்மனையைப் பெண்களால் நிரப்பியிருந்த ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவளுடைய பற்போதைய மனநிலையை புரிந்து கொண்டு தாவீது இன்னும் கொஞ்சம் நிதானமாக அவளோடு பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதற்கு பதிலாக தாவீது, அவளுடைய தகப்பனையும், மொத்த குடும்பத்தையும் கீழே போட்டு பேசுவது மட்டுமல்லாமல், விஷம் நிறைந்த உணவின்மேல் சற்று அதிகம் குழம்பு ஊத்துவதுபோல, அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களின் கண்களுக்கும் தன்னைப் பிடிக்கும் என்றும் கூறினான்.
தாவீது மீகாளிடம், இனி அவளுடைய குடும்பம் அல்ல , தான் மட்டுமே தேசத்தின் பெண்கள் மனம் மகிழும் அழகிய ஆண்மகன் என்றும் தெளிவு படுத்தினான்.
மீகாள் தாவீதைக் குற்றப்படுத்தி பேசியது நிச்சயமாக எனக்கு பிரியமில்லை என்றாலும், தன்னுடைய கணவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து வரப்பட்ட அவள்மேல் எனக்கு ஒரு பரிதாபம் பிறந்தது. தாவீது இன்னும் கொஞ்சம் நிதானமாக அவளை நடத்தியிருக்கலாம் என்று தோன்றியது. அவள் மனதளவில் புண்பட்டு போயிருந்தாள் என்று தெரிகிறது அல்லவா!
தாவீதின் அரண்மனையில் அவனுடைய அநேக மனைவிமார்களையும், மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய கார சாரமான வெறுப்பையும் கண்டு வளர்ந்த தாவீதின் குமாரனாகிய சாலொமோன் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. இது சாலொமோனின் அனுபவத்திலிருந்து வந்த வார்த்தைகள்.
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும். கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
( நீதிமொழிகள் 15:1)
ஒருவேளை தாவீது மெதுவாக அவளுக்கு பிரதியுத்தரம் கொடுத்திருந்தால் அதன் விளைவு எப்படியிருந்திருக்கும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?
இந்தக் கேள்விகளை இன்றைய சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
