கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1417 சோதோம் மக்கள் வீழ்ந்த அதே கண்ணியில் தாவீது!

2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது….

பல நேரங்களில்  சாலை ஓரங்களில்  சோம்பலாய் உட்கார்திருப்பவர்களைப் பார்த்து வேலைவெட்டியில்லாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறார்களே என்று நினைப்பேன். ஆனால் உண்மை என்னவென்றால் பணக்காரகள் தான் அதிகமாக வேலை வெட்டியில்லாமல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களுக்கு உல்லாசமான ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது.

இங்குதான் லோத்தின் குடும்பம் வாழ்ந்த சோதோமும், எருசலேமில் யுத்தத்துக்கு போகாமல் வீட்டில் இருந்த தாவீதின் கதையும் சம்பந்தப்படுகிறது! நான் இதைப்பற்றி அதிகம் அறிய இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள் என்று எழுதியிருந்தேன்!

அன்று பணமும் புகழும் வாய்ந்த பட்டணமாய்த் திகழ்ந்தது சோதோம் பட்டணம். பகட்டும்,பெருமையும் வாய்ந்த பணக்காரர்களின் கையில் அதிக நேரம் வெட்டியாய் செலவிட இருந்ததால் தான் பிரச்சனைகளே உருவாயின. சோதோமின் அழிவிற்கு அங்கிருந்த விபசாரம் தான் காரணம் எனறு நாம் நினைப்போம் அல்லவா? ஆனால் பெருமையும், அகங்காரமும் உள்ள பணக்காரர்கள் வெட்டியாக செலவிட்ட உல்லாசமான நேரத்தில் நடந்த கீழ்த்தரமான செயல்களே அதற்கு காரணம்.

அநேக நாட்கள் ஒரு சுலபமான வாழ்க்கைக்கு நாம் கூட ஆசைப்படுகிறோம் அல்லவா? ஆசை மட்டும் அல்ல பேராசையும் கூட.   டிவியைப் பார்க்கும்போதும், பேப்பர் படிக்கும்போதும் நாம் கடந்து வரும் , ‘எல்லாமே’  உள்ளவர்களைப்பார்த்து நாம் பொறாமை படாமல் இருக்க முடியுமா? யு ட்யூபில் அம்பானி போன்ற பெரிய பணக்காரர்கள் வீட்டு திருமண வைபவங்களை பார்க்கிறோம். உலகம் போற்றும் செல்வந்தர்களைப் பார்த்து நானும் அப்படி வாழ வேண்டும் என்று நினைப்பது நம்முடைய இருதயத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் பேராசையைக் காட்டுகிறது. ஆனால் இது கர்த்தரின் வழி அல்ல!

அதனால் தான் கர்த்தர் தம்முடைய கிருபையால் நமக்கு கர்த்தரின் இருதயத்திற்கேற்ற ஒருவனாய் இருந்த தாவீதைப் போன்ற தம்முடைய பிள்ளைகளின் கதையை வேதத்தில் இடம் பெற செய்திருக்கிறார்!   கர்த்தரைப் போல வாழவேண்டும் என்று ஏங்கிய உள்ளம் கொண்டவன்!

ஆனால் எங்கே தவறு நடக்கிறது பாருங்கள்! தாவீது முன்னால் நிறைவான நன்மைகள், செழிப்பு, செல்வம் அனைத்தும் வைக்கப்பட்டபோது,  அவனுடைய உல்லாசமான ஓய்வு நேரம் ஒரு வெட்டியான செயலற்ற  நேரமாகி விட்டது. சோதோம் மக்கள் வீழ்ந்த அதே கண்ணியில் தாவீதும் வீழ்ந்தான்.

செல்வந்தம் கொண்டு வரும்  உல்லாசமான  நேரம் நம்மை ஒரு வேண்டாத பாதைக்கு இழுத்துச் செல்லலாம்!  இது நம்முடைய ஆத்துமாவுக்கு எதிரியாகக்கூட மாறலாம். இதுவே தாவீது பத்சேபாள் என்ற கதையின் அடிப்படை! நமக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment