2 சாமுவேல் 11:14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.
இன்றைய வேதாகமப்பகுதியைத் தொடர உதவிசெய்து வரும் கர்த்தரை மனமாரத் துதிக்கிறேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இந்த வேதாகம தியானத்தை வாசிக்கும் உலகத்தின் பல பாகங்களில் வாழும் என்னுடைய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி!
ஒரு டெலிவிஷன் ஷோ பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறிவுப்பரீட்சை. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த பரீட்சையில் வரப்போகும் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்ட ஒரு கவர் அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தனித்தனியாக கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அதை எடுத்துக்கொண்டு எலிவேட்டரில் ஏழாவது மாடிக்கு சென்று அங்கு இருக்கும் ஒருவரிடம் கொடுத்துவிட்டு பரீட்சை எழுத செல்ல வேண்டும். ஆனால் இப்படியாக ஒருவருக்கு கொடுக்கப்பட்டது மற்றவருக்குத் தெரியாது. அந்த கவர் திறந்துதான் இருந்தது. ஒவ்வொருவராக அதை வாங்கிக்கொண்டு மேலே சென்றனர். அந்த அறையின் வாசலில் இருந்தவர் நீங்கள் அந்தக் கவரைத் திறந்து பதிலைப் பார்க்கவில்லயே என்று கேட்பார். அவர்கள் எல்லோரும் அதைத் திறந்து பார்க்கவில்லை என்றுகூறிவிட்டு உள்ளே சென்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏழு மாடி ஏறிச் செல்லும் வழியெல்லாம் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்ததென்றும், அவர்களில் பாதிபேர் அதைத் திறந்து பதில்களைப் பார்த்து விட்டார்கள் என்றும் போட்டியை நடத்தியவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அதைத் திறக்கவே இல்லை என்று நேருக்கு நேர் பார்த்து கூறிய பொய் தான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நான் ஒருவேளை யாரும் பார்க்காத இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வேன்? ஒருவேளை ஒரு தவறை செய்துவிட்டு அதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடிந்தால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று அடிக்கடி யோசிப்பது உண்டு. யாருக்கும் தெரியாத இடத்தில் பாவம் செய்வது என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஒரு நெருக்கடியான சோதனை தானே?
பாவம் இந்த உலகத்தில் வந்த நாள் முதல் கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் இல்லாத இடத்தில் பாவம் செய்து பின்னர் அந்த பாவத்தை மறைத்து ஒளிந்ததை பார்க்கிறோம்.
தாவீது உரியாவிடம் யுத்தத்தைப்பற்றிய செய்திகளை விசாரித்தான், யோவாபைப் பற்றி விசாரித்தான், பின்னர் நல்ல பதார்த்தங்களோடு அவனுடைய மனைவியிடத்தில் அனுப்பினான், அது தவறியதால் மது அருந்த வைத்து வீட்டுக்கு அனுப்பினான். அதுவும் தவறிப் போயிற்று. விசுவாசமுள்ள போர்சேவகனான உரியா, இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்தில் இருந்ததால் அவன் தன்னுடைய மனைவியின் தோளில் இளைப்பாற மறுத்தான்.
தாவீதோ யாரும் பார்க்காத வேளையில் தன்னுடைய பாவத்தை மறைக்க, உரியாவைக் கொலை செய்யும்படியான ஒரு கடிதத்தை எழுதி அதை உரியாவின் கையிலே கொடுத்து அனுப்புகிறான். யாருக்கும் தெரியாமல் தான் பத்சேபாளுடன் செய்த பாவத்தை மறைக்க அவளுடைய கணவனைக் கொலை செய்ய அவன் உள்ளம் முடிவு செய்தது.
உரியா யாரும் பார்க்காத வேளையில் அந்தக் கடிதத்தை திறந்து பார்த்திருக்கலாம். ஆனால் அங்கும் உரியா நேர்மையாக நடந்து தன்னுடைய மரண தூதை தானே சுமந்து சென்றான்.
யாரும் பார்க்காத வேளையில் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் சந்திக்கும் கேள்வி! யாரும் பார்க்காத வேளையில் நான் எதைப் பார்க்கிறேன்? யாரும் இல்லாத வேளையில் நான் எதை செய்கிறேன்? இன்று இந்த உலகமே இண்டெர்னெட் மூலம் உங்கள் கையில் இருக்கிறது. தனிமையில் இருக்கும்போது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இரகசியமான வாழ்க்கையா? மற்றவர் முன் முகமூடியா?
பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் என்பது வேத வார்த்தை. கர்த்தருக்கு முன்பாக உன்னால் எதையுமே மறைக்க முடியாது என்று உணரு! நீ இருட்டில் செய்யும் ஒவ்வொன்றையும் கர்த்தர் காண்கிறார் என்பதை மறந்து விடாதே!
இன்றே அறிக்கைசெய்து விட்டுவிடு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
