சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.
தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம்.
உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம் வாழ ஆரம்பிக்கும்போது அந்த சந்தோஷம் தானாய் நம்மை விட்டு மறைந்து விடும்.
இன்றைய வேதாகமப்பகுதியில் , தாவீதும் இந்த சந்தோஷத்தைப்பற்றி அறிந்திருந்தான்.அவன் மணந்த அத்தனை பெண்களாலும் கொடுக்க முடியாத சந்தோஷம், ராஜாதி ராஜனாக பெற்ற வெற்றிகளால் கிடைக்க முடியாத சந்தோஷம், ராஜாவாக இருப்பதால் அவனைத் தேடி வந்த பணத்தால் அடைய முடியாத ஒரு சந்தோஷம்! இவையனைத்தும் மொத்தமாக அவனிடம் இருந்தபோதும், அவன் நினைத்த எல்லாமே அவனுக்கு கிடைத்தபோதும் அவன் அடைய முடியாத ஒரு சந்தோஷம்தான் அது!
நாம் பார்க்கிற பெரிய சினிமா ஸ்டார்களும், பெரிய வியாபாரிகளும், விரலை சுண்டினால் எதையும் அடையும் பெரிய பணக்காரகளும், இன்று போதை மருந்துகளையும், குடிப்பழக்கத்தையும், தற்கொலையையும் தேடிப் போவது இந்த சந்தோஷம் கிடைக்காமல் போவதால் தான்! பணத்தால் விலை கொள்ள முடியாத சந்தோஷம் அது!
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்து நாத்தான் தீர்க்கதரிசியின் மூலம் மனந்திருந்தி தேவனை நோக்கிப் பார்த்தபோது, அவன் அவருடைய இரக்கத்தைத் தேடி, ரட்சிப்பை விரும்பி, பரிசுத்தத்தை வேண்டி நின்றது மட்டுமல்லாமல், அவன் இழந்து போன சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கூட வேண்டுகிறான்.
இந்த சந்தோஷத்தைப் பற்றி நாம் இன்னும் சற்று அறிந்து கொள்ள வேண்டுமானால், வாழ்க்கையில் மிகவும் நொறுக்கப்பட்ட, பலமுறை கப்பல் சேதங்களில் அகப்பட்ட, பலமுறை வாரால் அடிக்கப்பட்ட, பலமுறை மரணதருவாயில் இருந்து, பசியாக பட்டினியாக இருந்த, சிறை வாசங்களை அனுபவித்த நம்முடைய அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைக் கேளுங்கள்!
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ( ரோமர் 15: 13)
இவ்வளவு கடினமான பாதையில் சென்று கொண்டிருந்த பவுலுக்கு எங்கிருந்து இந்த சந்தோஷம் கிடைத்தது? எதனால் அவருடைய வாழ்க்கை துதிகளும் ஸ்தோத்திரங்களும் நிறைந்ததாக இருந்தது? இது தேவனாகிய கர்த்தரின் சந்தோஷம் என்னும் வற்றாத நீரூற்றிலிருந்து வரும் அருவியே! எந்தக் காரணத்துக்காகவும் அது வற்றிப் போகாது! இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கொடுக்கப்படும் ஜீவ ஊற்று அது!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சந்தித்த சமாரிய ஸ்திரீயைப் பற்றி படிக்கும்போதெல்லாம் தாவீதின் ஞாபகம் வரும்! இருவரும் விபசாரம் செய்தார்கள்! இருவரும் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்பினர்! இருவரும் இரக்கத்தை நாடினர்! இருவருமே இரட்சகரை கண்டு கொண்டனர்! இருவருக்குமே சந்தோஷம் கிடைத்தது! இந்த இருவரைப் பற்றியும் பார்க்கும்போது, காலமும், நடைமுறை பழக்கவழக்கங்களும் வேறு வேறாக இருந்தாலும் தேவை ஒன்றாகத் தான் இருந்தது! இன்று நாமும் வேறொரு கால கட்டத்தில் வாழ்ந்தாலும், வேறு பழக்கங்கள் கொண்ட நாட்டில் வாழ்ந்தாலும் நம்முடைய தேவையும் ஒன்றே! சந்தோஷம்!
எங்களுடைய வீட்டில் கிணறு இருக்கிறது! கிணற்றுத் தண்ணீர் நல்ல சுவையுள்ளது. அந்தத் தண்ணீரை எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தால் அது எப்படி உபயோகப்படும்? அதை இரைத்து வெளியே கொண்டுவந்தால் தானே பிரயோஜனம்! அதுமட்டுமல்லாமல் அதை ருசித்துப்பார்த்தால் அதன் சுவை தெரியும்! தாகம் தணியும்!
அதைப்போன்றது தான் சந்தோஷமும்! தேவனாகிய கர்த்தரண்டை உள்ள வற்றாத இந்த ஜீவ ஊற்றிலிருந்து நாம் இரைத்து நம்முடைய வாழ்வில் நாம் விலை பெறாத சந்தோஷத்தை அடைவோம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்