1 இராஜாக்கள்: 4:29,30,32 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் , எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.
அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான், அவனுடைய பாட்டுக்கள் ஆயிரத்து ஐந்து.
சாலொமோனுக்கு தேவன் அருளிய ஞானத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, தேவன் அவனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் ,கொடுத்தது மட்டுமல்லாமல் மனோவிருத்தியையும் கொடுத்தார் என்று.
தேவன் சாலொமோனுக்கு வாக்கு கொடுத்ததை நிறைவேற்றுகிறார். ஞானத்தில் வல்லவர்களாக இருந்த கிழக்கத்திய மெசொப்பொதாமியா, எகிப்து போன்ற நாடுகளின் சகல் ஞானவான்களைவிட சாலொமோனுடைய ஞானம் சிறந்து விளங்கியது. அதுமட்டுமா சாலொமோன் எழுதிய நீதிமொழிகளையும், பாட்டுக்களையும் பாருங்கள்! அதுமட்டுமல்ல அவனுடைய ஞானம் பூமியில் வளரும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், பிராணிகள், மச்சங்கள் இவையெல்லாவற்றையும் பற்றி கூட இருந்தது என்று வேதம் சொல்கிறது.
அவன் இஸ்ரவேல் மக்களை நியாயம்தீர்க்க மட்டும்தானே ஞானத்தை கேட்டான். ஆனால் தேவன் அவனுக்கு அருளிய ஞானத்தைப் பாருங்கள்!
எனக்கு இதை வாசிக்கும்போது எபேசியர் 3:20 தான் ஞாபகத்துக்கு வருகிறது.
நாம் வேண்டிக்கொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு….
தேவனாகிய கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் தம் சித்தத்தை நிறைவேற்றும்போது, சாலொமோனுக்கு கொடுத்த மிகுதியான ஞானத்தைப் போலவே நமக்கும் அருள வல்லவராயிருக்கிறார்.
ஆனால் ….. நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற உனக்கு என்ன தேவையோ அதையே அருளுவார்! ஒருவேளை இன்று உனக்கு பெலன் தேவையானால் தேவனாகிய கர்த்தர் அதை உனக்கு அருளுவார். உன்னுடைய தேவையை அறிந்த தேவன் உனக்கு அதை மிகுதியாக அருளுவார்.
மோசே பேசுவதில் குறை உள்ளவனாக இருந்தான். அவன் தேவனை நோக்கிப் பார்த்தபோது, அவனுக்கு தேவையான உதவியை தேவன் உடனே அருளினார் அல்லவா! மோசே தேவையான வேளையில் பேசியது மட்டுமல்ல வேதத்தின் முதல் ஐந்து புத்தகங்களை எழுதவில்லையா? நாம் நினைப்பதற்கு மேலாகவே அருளிச் செய்கிற தேவன்!
இன்று உன்னுடைய தேவையை தேவனுடைய சமுகத்துக்கு சொண்டு செல்! தேவனுடைய சித்தத்தை உன் வாழ்வில் நிறைவேற்ற உன்னுடைய தேவை என்ன?
தேவனால் ஆகாதது ஒன்றுமில்லை!
மோசேயைப் போல உன் குறைகளை அவரிடம் சொல்! சாலொமோனைப் போல உன்னுடைய தேவையை அவரிடம் சொல்! நீ நினைப்பதற்கு மேலான பதில் உனக்கு வந்து சேரும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
