கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!

1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்.

இன்று நாம் மறுபடியும் 1 ராஜாக்களின் புத்தகத்தைத் தொடரப் போகிறோம்.

இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனை பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம்.

தேவனை அறியாத, மற்றும்  கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நாம் எப்படி சாட்சியாக வாழ முடியும் என்பதற்கு ராஜாவாகிய  ஒரு உதாரணம்.

ஆசா 41 வருஷம் ஆஷா  எருசலேமிலே ராஜ்யபாரம் பண்ணினான். அவனுடைய தாய் மாகாள் அருவருப்பான விக்கிரகத்தை உண்டு பண்ணி வழிபட்டு வந்தாள் என்றும்,  அவள் விக்கிரகனக்களுக்கு  ஒரு தோப்பு வைத்திருந்தாள் என்றும் இந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்.  ஆசா அவற்றையெல்லாம் அழித்து போட்டு மாகாளை ராஜாத்தியாக  இராதபடி விலக்கி விட்டான் என்று இந்த அதிகாரம் நமக்குக் கூறுகிறது. ஒருவேளை அவளை அவன் எச்சரித்திருந்திருக்கலாம். ஆனால் ராஜமாதா அதைக் கண்டுகொண்டிருந்திருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். ராஜமாதாவை பதவியிலிருந்தே விலக்கி விட்டான்.

அன்றைய காலகட்டத்தில் , ராஜாக்களிடம் ஏமாற்றுதல் காணப்பட்டது, ஒருவரை ஒருவர் பழிவாங்குதலும் காணப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருடைய நடத்தையும் அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டத் தலைவர்கள் என்று சொல்லவே முடியாதபடி இருந்தது. நாமும்கூட அப்படி ஒருசிலரைப் பார்த்து இவர்களையா கர்த்தர் இந்தப் பதவிக்குத் தெரிந்துகொண்டார்? இவர்கள் இதற்குத் தகுதியானவர்களே அல்ல என்று நினைத்திருக்கிறோம் அல்லவா? அவ்வாறே ராஜாக்கள் வாழ்ந்து வந்தனர்.

தாவீது அதை இவ்வாறு கூறுகிறான்,

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள் இச்சக உதடுகளால் இருமனதாய் பேசுகிறார்கள் (சங்கீதம் 12 :2)

ஆனால் ராஜாவாகிய ஆசாவோ முழு மனதோடு தேவனைப் பின்பற்ற முடிவு பண்ணினான். அதுவும் விக்கிரக ஆராதனை ஒவ்வொரு மக்களாலும் விரும்பி தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு செயலாக இருந்த நேரத்தில் ராஜாவாகிய ஆசா , தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே ஆராதனை செய்யும்  முடிவை செய்தான். 

அவனுடைய 41 வருஷ ராஜ்யபாரத்தில் அவனுடைய வார்த்தைகள் அவன் வாழ்க்கையை எதிரொலிக்கவில்லை, ஆனால் அவனுடைய செயல் அவன் வாழ்க்கையை எதிரொலித்தது. 

அவன் தேவனுக்காக வாழ்வதில் உறுதியாக இருந்தான் அவனுடைய வார்த்தைகளை விட வாழ்க்கை உரத்த சத்தமாக பேசியது.  ராஜாவாகிய ஆசாவின் இருதயம், அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல தேவனோடு ஒப்பரவாக இருந்தது என்று இன்றைய வேதாகமப் பகுதி நமக்குத் தெளிவாக காட்டுகிறது.

இந்த புதிய ஆண்டில் உன்னுடைய இருதயம் தேவனோடு ஒப்பரவாக உள்ளதா?  தேவனை பிரியப்படுத்தும்படியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? உன்னுடைய வார்த்தைகள் உரத்த சத்தமாய் பேசுகின்றதா அல்லது உன்னுடைய வாழ்க்கை உரத்த சத்தமாய் பேசுகின்றதா என்று சற்று சிந்தித்து பார்.

ஒரு நிமிடம்! எல்லோரும் தேவனைப் பிரியப்படுத்தும் படியாக வாழ்ந்ததால் அவனும் தேவனை பிரியப்படுத்தினான் என்று வேதம் சொல்லவில்லை எல்லோரும் கீழ்படியாமல் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் ஆசா தேவனுக்குக் கீழ்படிந்தான். 

நீயும் ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று  வாழ்ந்து கொண்டிருக்கலாம்,  உன்னை சுற்றி உள்ளவர்கள் தேவனைப் பிரியப்படுத்தாதவர்களாக இருக்கலாம் ,உன்னை சுற்றிலும் பாவமான சூழ்நிலை காணப்படலாம், தேவனைப் பிரியப்படுத்தாத குடும்பத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் அவற்றின் மத்தியில் உன்னுடைய உள்ளம் தேவனோடு ஒப்புரவாகி இருக்கிறதா என்று இன்று சற்று யோசித்துப் பார்!

எல்லோரும் எப்படி இருக்கிறார்களோ அப்படியே நானும் இருந்து விடுகிறேன் என்று சிந்திக்காமல், தனித்து நின்று தேவனுக்காக வாழ்ந்த ஆசாவைப் போல இந்தப் புதிய ஆண்டில் நானும் கிறிஸ்துவுக்காக முழு மனதோடு வாழ்வேன் என்று ஒருகணம் ஜெபிப்பாயா?

உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கையே பேசட்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment