கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!

1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து,

ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான்.

இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக ‘ஒரு நன்மையும் இல்லை ‘ என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான்.  அவன் தனக்கு முன்னான எல்லா ராஜாக்களைப் பார்க்கிலும் கேடானவன் என்ற பட்டம் பெற்றவனாய் வாழ்கிறான். இந்தப் பட்டம் பெற யார் ஆசைப்படுவார்கள்?  ஆனாலும் உம்ரி அதைப்பற்றி கவலைப்பட்டவனாக தெரியவில்லை.

இஸ்ரவேல் ராஜ்யம் ஒரு பாறையில் அடிபட்டு, நொறுங்கி, உருண்டு தன்னுடைய அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.அதுமட்டுமல்ல, இஸ்ரவேல் ராஜ்யம் ஒவ்வொரு ராஜாக்களாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டிருந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தது. பல கொலைகளுக்கு பின்னரே உம்ரி இந்த ராஜ்யத்தை பிடித்தான்.

ஆனால் தேவனாகிய கர்த்தரோ அவனுடைய இரத்தக் கறை படிந்த ஆட்சியை விரும்பவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு வாழ்ந்த மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்தேன். அந்த மனிதன் செய்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார்களா?  அல்லது ஒரு நாள் அவர்களுக்கு இரட்சிப்பு உண்டு என்று எதிர்பார்த்து அமைதி காத்தார்களா? அல்லது அங்குள்ள மக்களில் சிலர் எதிர்ப்பு  தெரிவித்தார்களா?

நான் ஒருவேளை அந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருந்தால் என்ன செய்திருப்பேன்? என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். ஐயோ! தேவனே இவனுடைய அக்கிரம செயல்கள் இன்னும் எவ்வளவு தூரம் மோசமாக செல்லும்? என்று தேவனை நோக்கிப் பார்த்து கதறி இருப்பேன்.  வேறு என்ன செய்ய முடியும்!

இந்த ராஜ்யத்தின் சரிவுக்கு என்ன காரணம் ? ஒரே நாளில் இப்படி சரிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை! ஒரே நாளில் ஒரு மனிதன் இவ்வளவு அக்கிரமக்காரனாக மாற முடியாது.

தாவீது ராஜா தன்னுடைய நம்பகமான போச்சேவகனை தானே கொலை செய்வோம் என்று என்றாவது கனவு கண்டிருப்பானா?

அல்லது சாலொமோன்  ராஜா ஆயிரம் பெண்களை ஒரே நாளில் மணந்திருப்பானா?

உம்ரி  எனக்கு எல்லா ராஜாக்களையும் விடக் கேடான ராஜா என்ற பட்டம் வேண்டும் என்று நிச்சயமாக கேட்டிருக்க மாட்டான்.

இவர்கள் யாருமே ஒரே ராத்திரியில் பொல்லாங்கு என்ற பாதையில் நடந்தவர்கள் அல்ல.  இவர்கள் சிறிது சிறிதாக தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி முற்றிலும் வீழ்ந்தவர்கள்.

இந்த அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக நான் வாசித்த போது ஐயோ நான் ஒருபோதும் இவ்வளவு பொல்லாங்காய் நடந்து கொண்டிருக்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் உடனே அப்போஸ்தலனாகிய பவுலுடைய எச்சரிக்கை மணி என் செவிகளில் ஒலித்தது. 

இப்படி இருக்க தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக் கடவன். (1 கொரிந்தியர் 10 :12)

இந்த ராஜாக்களின் கீழ்ப்படியாமை அவர்கள் ஆண்ட மக்களையும் பிடித்துக் கொண்டது என்பதே மிகுந்த வருந்த கூடிய காரியம்! யாரோ எப்படியோ போகட்டும் என்று வாழ்ந்து கொண்டிருந்த அநேக தேவனுடைய பிள்ளைகளை கூட இது சரிவுக்குள்ளாக இழுத்திருக்கும். 

அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்களுக்கு எழுதும்போது

தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொண்டிருங்கள். (ரோமர் 12 :10)என்று எழுதுகிறார்.

ஆனால் இன்று இந்த உலகத்தில் காணும் எந்த தீமையும் நம்மை வெல்ல முடியாது என்று நமக்கு வாக்கு கொடுத்து இருக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்    (யோவான் 16 :33)

ஒவ்வொரு நாளும் நம்மை நாமே சோதித்தறிந்து,  நாம் தீமையை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். தீமைக்கு எதிராக நமக்குளே நாம் போராடும் பொழுது தான் அதை நாம் வெற்றி கொள்ள முடியும். 

உலகத்தில் காணும் பொல்லாங்குகளை நாம் அழித்துவிட முடியாது ஆனால் அவை நம்மை மேற்கொள்ளாதவாறு நம்மைப் பாதுகாப்பதே முக்கியம்.

இருள் நம்மை சூழும் போதும், பொல்லாங்கு நம்மை நெருங்கும் போதும்,  தேனுடைய செட்டைகளுக்குள் மட்டுமே நமக்கு பாதுகாப்பு உண்டு என்பதை மறந்து விடாதே !

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment