கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1596 இயேசுவே என் கப்பலோட்டியாயிரும்!

2 நாளாகமம் 20: 16  நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய் போங்கள்; இதோ அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.

நான் வர்ணம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மூலமாக படங்கள் வரையக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பென்சில் மூலமாக ஒரு அருமையான படத்தை வரைந்தேன்.  அது மிகவும் அழகாக வந்ததினால் எங்கள் வீட்டில் அதை பிரேம் செய்து மாட்டியிருந்தோம். 

அந்தப் படத்தில் அலைக்கழிக்கும் அலைகள் மத்தியில் ஆடிக்கொண்டிருந்த படகில் இயேசு கிறிஸ்து மாலுமியாக நிற்பது போன்று ஒரு காட்சியை சித்தரித்திருந்தேன். என்னுடைய வாலிப வயதில்  நான் அதை வரைந்த போது, என்னை விட அனுபவம் மிகுந்த ஒருவர் என் வாழ்வில் மாலுமியாக, என் வாழ்க்கைப்படகில் என்னோடு  இருக்கிறார் என்ற எண்ணம் அந்தப் படம் மூலமாக எனக்கு அடிக்கடி வந்தது.  இயேசுவே நீரே என் மாலுமியாக, என் கப்பலோட்டியாக இரும் என்று நான் அடிக்கடி ஜெபித்தது கூட உண்டு. அதைப்பற்றி இன்று நான் சிந்திக்கும்போது கூட என் உள்ளம் சிலிர்க்கும். ஏனெனில் நான் அன்று ஜெபித்தவாறே என் தேவன் ஒருநாளும் என்னைக் கைவிடாமல் என்னோடு இருந்தார் என்பது என் வாழ்வின் சாட்சியாகும்.

நாம் நம் பரம பிதாவாகிய தேவனைத் தவிர யார் மேல் இவ்வாறு முழுவதுமாக நம்பிக்கையோடு  சார்ந்து வாழ முடியும்? 

இந்த செய்தியை தான் யகாசியேல் , ராஜாவாகிய யோசபாத்துக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் அறிவித்தான். அவர்களை பயப்படாதிருங்கள் என்று சொன்னது மாத்திரமல்ல அதற்கும் மேல் ஒரே ஒரு படி சென்று அவர்கள் எந்த இடத்தில் எதிரிகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தான். எதிரிகளுக்கு கண்ணி வைப்பதைக் குறித்து ராஜாவாகிய யோசபாத்  கவலைப்பட வேண்டியதில்லை,  ஏனெனில் தேவனாகிய கர்த்தர் கண்ணியை வைத்து விட்டார், அவர்களுடைய மறைப்பிடத்தையும் வெளிப்படுத்தி விட்டார். 

யகாசியேல் கொடுத்த தேவசெய்தியின்  படி, ராஜாவாகிய யோசபாத் தன்னுடைய எதிரிகளை வனாந்தரத்தில் சந்திக்க ஆயத்தமாகி விட்டான்.

உங்களுடைய வாழ்க்கையை பற்றி எனக்கு தெரியாது ஆனால் நான் இந்த வியாதி, கஷ்டங்கள்,  பிரச்சனைகள் என்ற முப்படைகள் போன்ற எதிரிகளால் சில தருணங்களில் வனாந்தரத்தில் தள்ளப்பட்டது போல உணர்வது உண்டு.  அந்த வேளைகளில் என் தேவனாகிய கர்த்தர் நீ தைரியமாக போ,  நீ வனாந்தரத்தில் தள்ளப்படும் முன்னர் உனக்கு வெற்றி உண்டு என்று என்னுடைய உள்ளத்தில் கூறுவதையும் கேட்டு இருக்கிறேன்.

அந்த நேரங்களில் சங்கீதம் 91: 2 சங்கீதக்காரன் கூறுவது போல , நான் கர்த்தரை நோக்கி நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன் , நான் நம்பி இருக்கிறவர் என்று சொல்லுவேன் என்று நானும் புலம்புவதுண்டு!

இவ்விதமாகத்தான் யூதாவின் மக்களைத் தேவனாகிய கர்த்தர் முப்படைகளை சந்திக்கும்படி வனாந்தரத்துக்கு அனுப்பினார். அப்படி அனுப்பும்போது அவர்களை வெறுமையாய் அல்ல , யுத்தத்திற்குரிய முழு வரை படத்தையும் அவர்கள் கரத்தில் கொடுத்து அவர்களை அனுப்பினார். 

யோசபாத்தின்  சரித்திரத்தை நாம் வாசிக்கும் பொழுது, தேவன் நம்முடைய வாழ்வில் மாலுமியாக மட்டும் அல்ல நம்முடைய வாழ்வின் வரைபடத்தையும் தம்முடைய கரத்தில் ஏந்தி இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. நம்மைத் தம் உள்ளங்கைகளில் வரைந்துள்ள  அவர் மட்டுமே  நம்மை வழி நடத்த வல்லவர்.  அவரை முழு மனதோடு விசுவாசிக்கிற நம்மை பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

நாம் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்! தேவனே நம் மாலுமி! நாம் செல்லும் பாதையை அவர் அறிவார்! 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment