2 நாளாகமம் 20 : 17 இந்த யுத்தத்தை பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பை பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் ;நாளைக்கு அவர்களுக்கு எதிராக புறப்படுங்கள் ;கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
நேற்று நாம் தேவனாகிய கர்த்தர் ராஜாவாகிய யோசபாத்தையும் , யூதா மக்களையும் தைரியமாய் எதிரிகளை சந்திக்க புறப்பட்டு வனாந்தரத்துக்கு செல்லும்படி கூறியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்ல தேவன் யுத்தம் நடக்கும் இடத்தின் வரைபடத்தையும் அவர்களுக்கு கொடுத்ததையும் பார்த்தோம்.
இன்றைய அறிவுரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது . யகாசியேல் அவர்களிடம் யுத்தத்துக்கு ஆயத்தமாகி ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறவில்லை அதற்கு பதிலாக நீங்கள் இந்த யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறான். யுத்தம் செய்கிறவர் கர்த்தரே அங்கு உங்களுக்கு எந்த வேலையும் இல்லை என்று கூறுகிறான்.
நம்முடைய வாழ்க்கையில் வியாதி, கஷ்டங்கள், பிரச்சனைகள் என்ற முப்படைகள் நம்மைத் தாக்கும் பொழுது நாம் முதலில் கையில் எடுப்பது அவற்றை எதிர்கொள்ளும் ஆயுதங்கள் தானே! நம்முடைய முப்படைகளை எதிர்கொள்ளும் வார்த்தைகள் அல்லது செயல்கள் இவற்றைத்தானே நாம் கையில் எடுக்கிறோம்? நாம் அவற்றை எதிர்த்துப் போராடி ஒரு முடிவை காண விரும்புகிறோம். எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடி உதவியைத் தேடுகிறோம்.
எனக்கு கெத்சபேதுருமெனேத் தோட்டத்தில் பேதுரு நடந்து கொண்ட விதம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. கர்த்தராகிய இயேசுவை சிறைபிடிக்க போர் சேவகரும், பிரதான ஆசாரியரால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரும் வந்தபோது, பேதுரு பிரதான ஆசாரியரின் வேலைக்காரனின் காதை தன்னுடைய பட்டயத்தால் வெட்டி விட்டான். அப்பொழுது இயேசு உன் பட்டயத்தை எடுத்து உறையிலே போடு என்று அவனிடம் கூறுவதைப் பார்க்கிறோம்
அந்த இடத்தில் உடனுக்குடனான செயலோ அல்லது பட்டயமோ தேவைப்படவே இல்லை. பேதுருவைப் போல நானும் கூட அடிக்கடி இப்படிப்பட்ட பதட்டமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. நானே என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து விடுவேன் என்று இறங்கி விடுவேன். நான் அமைதியாக தேவனுடைய சமூகத்தில் காத்திருப்பதை விட்டுவிட்டு தீவிரமாக செயல்பாட்டில் இறங்கி விடுவேன்.
நீங்களும் கூட ஒருவேளை என்னை போன்றவராக இருக்கலாம்!
யாத்திராகமம் 14: 13 ல் நாம் பர்க்கும்விதமாக, கர்த்தருடைய ஜனங்களாகிய இஸ்ரவேல் மக்கள் செங்கடலின் ஒருபுறத்தில் நின்று கொண்டிருந்தனர் , எகிப்தியரோ அவர்களை மிக வேகமாக துரத்தி நெருங்கி விட்டனர்.
ஒருகணம் கண்களை மூடி அந்தக் காட்சியை உன் மனக்கண்ணால் பார்! ஒருபுறம் சமுத்திரம் ! மறுபுறம் செங்குத்தான மலைகள்! இன்னொரு புறம் எகிப்தியரின் சேனைகள்! இஸ்ரவேல் மக்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்????
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி, பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள்; கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்றான்.
இஸ்ரவேல் மக்கள் செங்கடலின் முன்னே நின்ற பொழுதிலும், யூதா மக்கள் முப்படைகளை வனாந்திரத்தில் சந்தித்த பொழுதும் கர்த்தர் அவர்களிடம் கூறிய ஒரே ஒரு காரியம், நீங்கள் சும்மா இருங்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் என்பதே.
சங்கீதம் 46 இந்த அருமையான வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
அதே சங்கீதம் 10 வது வசனத்தில் நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்றும் பார்க்கிறோம்.
இந்த காலை வேளையில் கர்த்தராகிய தேவன் நம்மை நோக்கி, நீ சும்மா இரு, உனக்காக நான் யுத்தம் பண்ணுவேன், நீ அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்து கொள் என்று சொல்கிறார்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே நாம் ஓடியாடி நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து கொண்டிருப்போமானால் நமக்காக தேவனாகியக் கர்த்தர் கிரியை செய்து கொண்டிருப்பதை நாம் காண்முடியாது!
தேவ சமுகத்தில் தரித்திருந்து அவர் நமக்கு பெற்றுத் தரும் வெற்றியைக் காணுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
