1 இராஜாக்கள் 17:19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து;
நான் இன்று ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் இதைத் தவற விட்டிருப்பேன்! எனக்கு வேதத்தில் உள்ள கதைகளெல்லாம் நன்றாகத் தெரியும் என்ற எண்ணம் எனக்கு! எவ்வளவு பெரிய தவறு தெரியுமா அது! இன்று நான் வேதம் ஒரு பொக்கிஷசாலை என்பதை உண்மையாக விசுவாசிக்கிறேன். அதைப் பலமுறை வாசிக்கும்போதுதான் அந்த பொக்கிஷங்கள் நமக்குப் புலப்படும்.
அதைத்தான் இன்றைய சம்பவத்தில் பார்க்கிறோம். சாறிபாத்தின் விதவையின் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நேரிட்டபோது, முரட்டு மனிதனைப்போல காணப்பட்ட எலியா தன்னுடைய ஆறுதலான குணத்தை வெளிக்காட்டுகிறான். அந்த விதவையின் வேதனையைப் பார்த்தவுடன், உன் அருமையான குமாரனை என்னிடத்தில் தா என்று கேட்பதைப் பார்க்கிறோம்.
இதை வாசித்தபின்னர், நான் ஜெபித்தபோது, நான் இதற்கு முன்பு பலமுறை வாசித்த வார்த்தைகள் புது அர்த்தத்தோடு என் முன் தோன்றின.இந்தப் பொன்னான பொக்கிஷத்தை நாம் தவற விட வேண்டாம். அவன் கூறியதைப் பாருங்கள்! தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து – இந்த வார்த்தைகளைக் கூர்ந்து பாருங்கள். அந்தப் பிள்ளையைத் தன்னுடைய அறைக்கு, தான் பலமணி நேரம் தேவனோடு செலவிட்ட அந்த மேல் வீட்டுக்கு , தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வழி நடத்துகிற அந்தத் தெய்வீகப் பிரசன்னம் உள்ள மேல் வீட்டுக்குக் கொண்டு போகிறான்.
அந்த விதவையின் வீட்டில் அவன் சிறிது நாட்கள்தான் வாழ்ந்திருந்தாலும் பரவாயில்லை, அவனுக்கு நிரந்தர விலாசம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தேவன் அந்த மேல் வீட்டில் அவனோடிருந்தாரே அது மட்டுமே அவனுக்கு போதும். அந்த மேலறையில்தான் தேவனுடைய பிரசன்னம் எலியாவுடைய ஒவ்வொரு நாடியிலும் பிரவேசித்தது, அந்த மேலறையில்தான் எலியா தன் தேவனோடு உறவாடினான், அவரோடு பேசினான், அவருடைய சத்தத்தைக் கேட்டான்.
அந்த விதவையின் வீட்டின் மேலறையில் எலியா தேவனோடு பேசிய சத்தம் அந்த விதவையின் காதுகளில் ஒவ்வொருநாளும் ஒலித்திருக்கும். அவள் அவனுடைய ஜெபத்தின் ஒலியைக் கேட்டபோது, எலியா ஒரு சாதாரண மனிதன் அல்ல என்று நிச்சயமாக உணர்ந்திருப்பாள். அந்தப் புரிதலே அந்த முரட்டு மலைவாழ் மனிதனிடம் தன்னுடைய குமாரனை ஒப்படைக்க அவளுக்கு உதவியிருக்கும்.
நம் ஒவ்வொருவருக்கும் மேல் வீட்டு அனுபவம் தேவை என்பதை நாம் உணருகிறோம் அல்லவா? எலியாவுக்கு அந்த அனுபவம் சாறிபாத் விதவையின் மேல் வீட்டு அறையில் கிடைத்தது. எனக்கு என்னுடைய படுக்கையறையின் ஒரு பகுதியே நான் தேவனோடு பேசும் இடம். உங்களுக்கு?
மிகவும் ஆடம்பரமான மேலறை நமக்குத் தேவையில்லை. ஆனால் நாம் அவரோடு தனியாக நேரம் செலவிடும் ஓரிடம் நமக்குத் தேவை. பரலோக வாழ்வின் அனுபவத்தை நமக்குக் கொடுக்கும் இடம், எலியாவின் மேலறை அனுபவத்தை நமக்குக் கொடுக்கும் ஓரிடம் நிச்சயமாகத் தேவை. நான் இதை எழுதும்போது, இந்த வசனம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
யாக்கோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
எப்படி தேவனிடத்தில் சேருவது? எலியாவைப்போல தேவனோடு தனிப்பட்ட நேரத்தை செலவிடும்போதுதான் நாம் அவரிடத்தில் சேர முடியும், அப்பொழுதுதான் அவர் நம்மிடத்தில் சேரவும் முடியும்.
எவ்வளவு நேரம் தேவனிடத்தில் சேர நாம் எடுத்துக் கொள்கிறோம்? எவ்வளவு நேரம் நாம் மேல் விட்டில் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கிறோம்? எவ்வளவு நேரம் அவருடைய சத்தத்தை நாம் கேட்கிறோம்? இவைதான் நம்முடைய பரலோக வாழ்வை நிச்சயிக்கும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
