1 இராஜாக்கள் 17:17 – 20 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அவள் எலியாவை நோக்கி, தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன? அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் வைத்து; என் தேவனாகியக் கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கி கூப்பிட்டு,
இன்றைய வேதாகமப்பகுதியில் என் கண்களை கவர்ந்த வாசகம், கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்பது. வேதாகமம் எழுதப்பட்ட எபிரேய மொழியில் தங்கியிருக்க இடம் என்ற வார்த்தையின் அர்த்தம் ‘நிலைத்திருக்க’ என்ற அர்த்தத்தில் உள்ளது.
நாம் முதன்முதலில் இந்த விதவையை சந்தித்த போது அவள் அந்தப் பட்டணத்தின் வாசல் அருகே விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அவள் தன்னிடமிருந்த மாவில் அப்பம் சுட்டு தன்னுடைய மகனோடு கடைசி உணவு உண்ண ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். எலியா அவளிடம் உணவு கேட்டபோது, அவள் எலியாவுக்கு மட்டுமல்ல தங்களுக்கும் போதிய உணவு இல்லை என்பதைத் தெளிவு படுத்தினாள்.
எலியா அந்த விதவையின் வீட்டில் நுழைந்தபோது அவளுக்கு அது ஒரு பெரிய பாரமாகவே தோன்றியிருக்கலாம். வறுமையின் உச்சகட்டத்தில் இன்னுமொரு வயிற்றுக்கு சாப்பாடு போடவேண்டுமே என்ற பாரம்.
அந்த வேளையில் அந்த விதவையின் தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! உணவு! அவளுடைய குடும்பத்தாருக்கு உணவு! எலியா அவளிடம் அந்த உணவு அவளுக்குக் குறைவு படாது என்று கூறியபோது ஆச்சரியப்பட்டிருப்பாள். எலியா கூறியபடியே அவளுக்கும், அவளுடைய குமாரனுக்கும், அவள் குடும்பத்துக்கும் கூட தடையில்லாமல் ஆகாரம் கிடைத்தது என்பதை நாம் மறந்துபோக வேண்டாம்.
இங்கு முக்கியமான ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். எலியாவின் வருகை அந்த விதவையின் வறுமையை போக்க உதவியது என்று நாம் நினைக்கும் வேளையில், தேவனாகியக் கர்த்தர் அவளுடைய எதிர்காலத்தில் அவளுக்கு வரப்போகும் சோகத்தையும் அறிந்தவராய், அதையும் சந்திக்க ஆயத்தமாயிருந்தார்.
என்ன ஆறுதலான ஒரு செய்தி நமக்கு! நம்முடைய எதிர்காலத்தையும் அறிந்த தேவன் நமக்கும் எதிர்காலத்தில் வரப்போகும் எந்த சோதனைகளையும் சந்திக்க அவர் ஆயத்தமாகவே இருக்கிறார்.
நான் இன்று சாறிபாத்தின் விதவையின் இடத்தில் ஒருவேளை இருப்பேனாகில், நான் எலியாவை ஒரு சாப்பாட்டு டிக்கெட்டை கொண்டு வந்தவராக நினைத்திருப்பேன், ஏனெனில் அவர் வந்ததிலிருந்து சாப்பாட்டுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தேவன் தம்முடைய அளவில்லாத ஞானத்தால் அந்த விதவிக்கு வரப்போகும் மிகப்பெரிய துன்பத்தை அறிந்தவராய் அவளுடைய மிகப்பெரிய தேவையை சந்திக்கவே அங்கு எலியாவை அனுப்பினார்.
நாம் ஒரு சிறிய அற்புதத்தை எதிர்பார்த்து காத்திருபோம், சில நேரங்களில் அது கிடைக்காமல் கூட போய்விடும். ஆனால் தேவனாகியக் கர்த்தர் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு பெரிய அற்புதத்தை செய்யும்போது, நாம் எதிர்பார்த்தது காத்திருந்தது மிக அற்பமாக நம் கண்களுக்குப் படும்.
இன்னும் ஒன்றையும் ஞாபகப்படுத்துகிறேன்! அற்புதங்கள் நம் வாழ்வில் நடப்பதெல்லாம் நமக்குள் விசுவாசத்தை பிறப்பிக்க அல்ல, விசுவாசத்தை அறிவிக்கவே! இந்த அந்நிய தேசத்து விதவை, தேவனை அறிந்தவளாய்,
நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும் இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள் ( 1 இராஜாக்கள் 17:24)
என் தேவாதி தேவன் என் ஆசைகளையும், ஆவல்களையும் மட்டும் அல்ல என் தேவைகளையும் முன்னறிந்தவர் ! அவருக்கு ஏற்ற வேளையில் என் ஆவல்களையும், என் தேவைகளையும் சந்திக்க அவர் ஆயத்தமாகவே இருக்கிறார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
