1 இராஜாக்கள் 18:38-39 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
கர்மேல் பர்வதம் மேல் பலிபீடம் கட்டியாயிற்று! எலியா கர்த்தாவே என்னைக் கேட்டருளும் என்று ஜெபித்து விட்டான். இப்பொழுது அவனுடைய ஜெபத்துக்கு பதிலாக, வானத்திலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த காளையையும், அடுக்கியிருந்த விறகுகளையும் மட்டும் அல்லாமல், பலிபீடம் கட்டப்பட்ட கற்களையும், அதை சுற்றி ஓடிக்கொண்டிருந்த தண்ணீரையும் பட்சித்தது.
இதை என்னுடைய வார்த்தைகளால் ஒரு கண்கொள்ளா அற்புதமான காட்சி என்று கூறினால் அது தகாது! அங்கு கூடியிருந்த் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள் என்று கேட்டபொழுது அவர்களுக்கு இருந்த இரு நினைவுகள் ஓடிப்போய் விட்டது. வானத்தின் அக்கினி அவர்களை உலுக்கியிருக்கும்! நாம் பிழைப்போமோ இல்லையோ என்ற பயம் அவர்களைத் தரையோடு விழ செய்திருக்கும்!
இப்பொழுது இந்த மகா பெரும் வல்லமையைக் கண்ட அத்தனைபேரும் தங்கள் தலைகள் பூமியை நோக்கத் தங்களைத் தாழ்த்தி, கர்த்தரே தெய்வம்! கர்த்தரே தெய்வம்! என்று உரத்த சத்தமிட்டனர். கர்த்தராகிய தேவனுடைய பரிசுத்த அக்கினி, இஸ்ரவேல் மக்களின் மனதில் பரிசுத்த அன்பைக் கிளறி விட்டது. கர்த்தரே தெய்வம் என்ற சத்தம் வானளாவியது!
வால்பாறையில் உள்ள எங்கள் தோட்டத்தில் சோலார் வேலி போடப்பட்டுள்ளது. அந்த வேலியில் ஒரு மின்னல் தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது எங்கள் வீட்டின் பின் புறத்தில் உள்ளதால் ஒருமுறை மின்னல் அதில் இறங்குவதை என் கண்களால் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். கண்களைப் பறிக்கும் பெரிய பிரகாசத்தோடு அது இறங்கியது. இன்றுவரை இடி மின்னல் காலத்தில் அந்த வீட்டில் தங்குவது எனக்கு விருப்பமில்லாத ஒன்றாகி விட்டது. இதுவே இப்படியிருந்தால் தேவனுடைய வல்லமை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே வெளிப்படுமானால் எப்படியிருக்கும் என்று சற்று சிந்தித்து பார்த்தேன். நான் அதைப் பார்க்க நேரிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன்! அந்த அக்கினி! பலிபீடத்தைப் பட்சித்த அக்கினியை நான் பார்க்க நேரிட்டிருந்தால்? பயத்தால் உறைந்து போயிருப்பேன்! அந்த ஒரு பொழுது மட்டும் அல்ல என் வாழ்நாள் முழுவதும் அந்த பொழுதின் நினைவுகள் என்னை அசைத்திருக்கும்!
இதைப் பற்றி சிந்திக்கும்போதுதான் கர்த்தராகிய இயேசு, யோவான் 20:29 ல் கூறியது என் நினைவுக்கு வந்தது.
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20 : 29)
நம்மில் அநேகருக்கு, என்னையும் சேர்த்துதான், இப்படிப்பட்ட கர்மேல் அனுபவம் இல்லை! தேவனுடைய வல்லமையான தரிசனம் நம் சந்தேகங்களையெல்லாம் நீக்கி, நம்மைக் கர்த்தரே தேவன் என்று முழுமனதோடு உணரச் செய்யும் அனுபவம் இல்லை! ஆனால் தேவனை அறியாத மக்கள் மத்தியில் வாழ்ந்தும், கர்த்தராகிய தேவனை உறுதியாகப்பற்றிக் கொள்ளும் அனுபவம் இருக்கிறது பாருங்கள் அதுதான் வெற்றி! அவர்களைத்தான் கர்த்தராகிய இயேசு பாக்கியவான்கள் என்றார்! அது எப்படியிருக்கிறது என்றால், தலையைத் தண்ணீருக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு எதிர்நீச்சல் போட்டு கரைக்கு போக நாம் முயற்சி செவதைப் போல உள்ளது! இந்த முயற்சி நிச்சயமாக நம்மை கரை சேர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை!
இந்த சம்பவத்தைப் பற்றி இன்னும் அதிகமாக நான் சிந்திக்கும்போது, எலியா தேவனை நோக்கி ஜெபித்த வேளையில், இன்னும் அக்கினி வானத்திலிருந்து கொடுக்கப்படாத நேரத்தில், கர்த்தாவே என்னை நினைத்தருளும், என்னைக் கேட்டருளும் என்று அவன் கதறிய வேளை என் கண்முன் தோன்றியது. அவன் அக்கினியை காணும் முன்னர், கேரீத் ஆற்றண்டை அவனுக்கு காகத்தின் மூலம் போஷித்த தேவன், சாறிபாத்தில் ஒரு விதவையை ஆயத்தம் பண்ணி வைத்திருந்த தேவன், இப்பொழுது அக்கினியை அனுப்ப அவனுக்காக கிரியை செய்து கொண்டிருந்தார்!
உன்னுடைய வாழ்விலும் என்னுடைய வாழ்விலும், அந்த அக்கினி நம் பாதக்கிஉத் தீபத்தைக் காட்டாத வேளையில், அந்த அக்கினி நம் உள்ளத்தை வெதுவெதுப்பாக்காத வேளையில், நாம் சற்றுக் கூடத் தடுமாறி நம்முடைய தேவனாகியக் கர்த்தரின் வல்லமை இருளை பிரகாசிக்கப் பண்ணாது என்று நினைத்துவிடக் கூடாது! நாம் இரு நினைவுகளால் குந்திவிடக்கூடாது.
வானத்திலிருந்து புறப்பட்ட அக்கினி, பட்சிக்கும் அக்கினி, அங்கிருந்த ஒவ்வொருவர் நாவிலும் கர்த்தரே தெய்வம் என்ற கூக்குரலைக் கொண்டு வந்தது.
இன்று நான் தேவனை நோக்கி, அப்பா உம்முடைய பரிசுத்த அக்கினி என் உள்ளத்திலும் இறங்கி , நீரே என் தேவன், நீரே வல்லமையுள்ளவர், நீரே என்னை ஆளுபவர், நான் உம்மையே நேசிப்பேன், உமக்காவே வாழுவேன் என்று என் வாழ்நாள் முழுவதும் உம்மை ஆராதிக்க எனக்கு உதவி செய்யும் என்று ஜெபித்தேன்! நீங்களும் ஜெபிப்பீர்களா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
