Tamil Bible study

இதழ்: 2634 ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயம் உண்டா?

1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.

சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன?

ஒருதடவை, இருதடவை அல்ல! சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில்  தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்!

இன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின்  வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த  அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.

அவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும்  என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்கும்! சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா? அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.

நம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா?

என்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா?  பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை!  என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான்!  ஒருவேளை என்னால் முடியாவிட்டால்??? என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது!

மீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது! அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது! அவனைத் தன் தகப்பனாகிய ராஜாவிடமிருந்து   காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது!

உன் வாழ்க்கை எப்படி? ஒருவேளை உனக்கும் நிச்சயமாய் பயம்  இருக்கலாம்! யாருக்காகவோ நீ அனுதினமும் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்! ஆனால் அப்படிப்பட்ட  பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்!

 நாம் தேவனாகியக் கர்த்தர் மேல் வைத்திருக்கும் அன்பு ஒன்றே இந்த உலகத்தின் பயத்தை மேற்கொள்ள நமக்கு உதவி செய்யும்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

முத்திரையிடப்பட்ட 1,44000! வீடியோ வெளியாகி உள்ளது! பகிருங்கள்!

https://www.youtube.com/@rajavinmalargal

Leave a comment