Archives

இதழ்:850 ஒரு அந்நிய ஸ்திரி காட்டிய இரக்கம்!

யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”

சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ  எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர்! இதை நாம் சென்னையில் வெள்ளம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம் அல்லவா!  ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர்! அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர்!  ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை! அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்!

இப்பொழுது இந்த இரு வேவுகாரரும் அவளுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது! அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது! அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்!

நீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.

கானானிய ஸ்திரியாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்?

ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா? (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.

கானானிய  ஸ்திரியாகிய  இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும்,  இரக்கம் காட்டுவதே  நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது!

இரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்!

 உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

இதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே!

யோசுவா: 2:9  ”கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன்”

யோசுவாவால் அனுப்பப்பட்ட இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் ராகாபின் வீட்டில் நுழைந்தபோது, எரிகோவின் ராஜாவால் எச்சரிக்கப் பட்டும், ஒரு நொடி கூட பின்னோக்காமல் இஸ்ரவேலின் ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்து, அந்த இரண்டு மனிதரையும் ராகாப் தன்னுடைய வீட்டில் ஒளித்து வைத்தாள் என்று நேற்று நாம் பார்த்தோம்.

ராகாப் அவர்களிடம் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்று அறிவேன் என்பதாக இன்றைய வேத வசனம் கூறுகிறது.

இந்த அறிவேன் என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கத்தைப் பாருங்கள்! ஒரு நண்பரை நாம் நன்கு அறிவோம் என்றால் நமக்கு அவரைப்பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் நன்கு தெரியும், அவரோடு நெருங்கிப்  பழகியிருக்கிறோம், அவரைப்பற்றிய சாட்சியை நம்மால் நிச்சயமாக சொல்லமுடியும் என்றுதானே அர்த்தம்? இந்த அர்த்தங்களைக் கொடுக்கும் எபிரேய வார்த்தையை உபயோகப்படுத்திதான் ராகாப் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்றாள்.

ஒரு கானானிய வேசியின் வாயிலிருந்து புறப்பட்ட விசுவாச அறிக்கைதான் கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்…..அறிவேன் என்ற வார்த்தைகள்!. இவ்வளவுதான் ராகாப் கர்த்தரைப்பற்றி அறிந்திருந்தாளா? சில வசனங்களுக்கு பின்னர் ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்”(யோசு:2:11) என்று கூறுவதையும் கவனியுங்கள்.

நாம் ராகாபை வேதத்தில் சந்தித்தபோது அவளை எரிகோவில் கூட்டத்தில் ஒருத்தியாக வாழ்ந்த சாதாரணப் பெண்ணாக, பிழைப்புக்காக வேசித்தனம் பண்ணிய, இஸ்ரவேலால் புறஜாதி என்று அழைக்கப்பட்ட ஒரு கானானிய ஸ்திரியாகத்தான் பார்த்தோம்.

ஆனால் ராகாப் அந்த வேவுகாரரிடம் என்ன கூறுகிறாள் பாருங்கள்!

நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும்,  நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓருக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்                  (யோசு: 2:10)

தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்தரம் வழியாக நடத்தியதும், சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததும், மன்னாவால் போஷித்ததும், எதிரிகளை முறியடித்ததும் அவள் காதுகளில் எட்டியிருந்தன! கேள்விப்பட்டோம் என்ற இந்த வார்த்தை ஏதோ ஒரு காதுக்குள் போய் மறு காது வழியே வெளியேறிய கட்டுக்கதையைக் குறிக்கவில்லை! கேள்விப்பட்டதை அவள் ஆராய்ந்தாள், சிந்தித்தாள், இஸ்ரவேலின் தேவன் மகா பெரியவர் என்று அறிந்தாள்! இப்பொழுது இஸ்ரவேலின் வேவுகாரரை தன் வீட்டுக்குள்ளேயே பார்த்ததும் தான் கேள்விப்பட்டவைகளைக் கோர்வையாக்கி முழு நம்பிக்கையுடன் உங்கள் கர்த்தரை நான் அறிவேன் என்றாள்.

கர்த்தர் ஏன் ஒரு வேசியை தெரிந்து கொண்டார்? ஏன் இஸ்ரவேலின் வேவுகாரரை எரிகோவில் வாழ்ந்த எல்லோரையும் விட்டுவிட்டு இந்த வேசியின் வீட்டுக்குள் போக அனுமதித்தார்? என்று ஒருவேளை நம்மில் பலர் கேட்கலாம்!

நாம் எங்காவது ஒரு ஊருக்கு போனால் அங்கே யாராவது நமக்கு தெரிந்தவர்கள் வீடு இருந்தால் போய் தங்கமாட்டோமா? எங்கே நமக்கு வரவேற்பு கிடைக்குமோ அங்கேதானே போவோம்? அப்படித்தான் கர்த்தர் ராகாபின் வீட்டைத் தெரிந்து கொண்டு தன்னுடைய ஊழியக்காரரை அவள் வீட்டுக்குள் அனுப்பினார்! ஏனெனில் ராகாப் தன் செவிகளில் கேள்விப்பட்டதை, இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை அறிந்திருந்தாள்!

நாம் சாதாரணமாக கடந்து வருகிற ஒவ்வொரு அனுபவங்களையும், நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு சம்பவங்களையும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதாரண மனிதரையும் கூட கர்த்தர் தம்மை நமக்கு வெளிப்படுத்த உபயோகிக்கலாம்!

 

ஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!

அப்பொழுது உம்மை நான் உண்மையாய் நேசிப்பேன்!

ஆண்டவரே உம்மை எனக்கு வெளிப்படுத்தும்!

அப்பொழுது உம்மை நான் உண்மையாய் சேவிப்பேன்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

 

 

இதழ்: 848 இஸ்ரவேலின் தேவனா? எரிகோவின் ராஜாவா?

யோசுவா 2:2 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி உன்னிடத்தில் வந்து உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்றான்.

நாம் ராகாபைப் பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் வேவுக்காரர் இருவர் வேசியான அவளுடைய வீட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கினார்கள் என்று நேற்று பார்த்தோம்.

சில நேரங்களில் பிரச்சனைகள் நாம் அழைக்காமலே நம் வாசலைத் தட்டுகின்றன என்பது எவ்வளவு உண்மை! ராகாப் இந்த இரு வேவுகாரரையும் தன் விட்டுக்கு அழைத்தாளா? யாரும் அழையாத விருந்தாளிகளாகத் தானே வந்தனர்! அவர்களோடு ராகாபுக்கு ஆபத்தும் வந்து வாசலைத் தட்டியது!

எரிகோவின் ராஜாவிடமிருந்து ராகாப் வீட்டுக்கு ஆள் வந்தனர். நம்முடைய தமிழ் வேதாகமத்தில் ராஜா ஆள் அனுப்பி சொல்லச்சொன்னான் என்று எழுதப்பட்டிருக்கிறது ஆனால் ராஜா ’ஆள் அனுப்பி’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் ’ராஜா ஆள் அனுப்பி ராகாபை தன்னண்டை வரவழைத்து’ என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. அப்படியானால் ராகாப் அரசனால் வரவழைக்கப்பட்டு பயமுறுத்தப்பட்டிருப்பாள். பின்னர் ராகாப் பயந்து அந்த மனிதரை நம்மிடம் ஒப்படைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் அரசன் அவளை வீட்டுக்கு அனுப்பியிருப்பான். அரசகட்டளை அவள் தலையின்மேல் ஊசலாட ராகாப் வீடு திரும்பினாள்.

இதை வாசிக்கும்போது அரசகட்டளை தலைக்குமேல் ஊசலாடும்போது அரசனுக்கல்ல கர்த்தருக்கே கீழ்ப்படிவோம் என்று முடிவெடுத்த இரு பெண்மணிகள் ஞாபகத்துக்கு வருகின்றனர். சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளைப் பார்வோன் கூப்பிட்டு எபிரேய ஸ்திரிகளுக்கு பிரசவம் பார்க்கும்போதே ஆண்பிள்ளைகளை கொன்றுவிடும்படி பேசினான் (யாத்தி:1:15).  இந்த வசனத்தில் ’பேசினான்’ என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கம் நிச்சயமாக தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசினான் என்று அர்த்தம் இல்லை!  அவர்களுக்கு கட்டளையிட்டான் என்றுதான் அர்த்தம். அவர்கள் பார்வோனின் மிரட்டலுக்கு பயப்படாமல் இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படியத் துணிந்தனர்!

சிப்பிராளும், பூவாளும் பார்வோனிடம் ஞானமாகப் பேசிய விதத்தையும், ராகாப் எரிகோவின் ராஜாவின் கட்டளைக்கு ஞானமாக நடந்து கொண்ட விதத்தையும் படிக்கும்போது, கர்த்தர் நம் உள்ளத்தில் எது சரியென்று சொல்கிறாரோ அதற்காக துணிந்து நிற்கவும், செயல்படவும் பெலமும் தைரியமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆவல் எழுந்தது.

எரிகோவின் ராஜாவின் எச்சரிப்பைக் கேட்ட ராகப், ஒரு நொடி கூட பின்னோக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய ராஜாதி ராஜாவுக்கு கீழ்ப்படிய முடிவு செய்தாள். உடனடி நடவடிக்கையாக ராகப் அந்த இரண்டு மனிதரையும் ஒளித்து வைத்தாள் என்று பார்க்கிறோம் (யோசு:2:4) ஒரு சாதாரணப் பெண்ணாக ஏதோ வயிற்றைக் கழுவ பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த ராகாப் யாரோ எப்படியோ போகட்டும் நமக்கென்ன என்று அந்த ஊரில் வாழ்ந்த மற்றவர்களைப் போலத் தன் வாழ்க்கையை தொடர்ந்திருக்கலாம், ஆனால் ராகாப் தனக்கு இஸ்ரவேலின் தேவனுக்கு சேவை செய்யும்படியாய் கிடைத்த தருணத்தை  இழக்கவில்லை.

ராகாப் எரிகோவின் ராஜாவுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஒருவேளை வெகுமதிகள் பெற்றிருக்கலாம்! இஸ்ரவேலின் தேவனுக்கு கீழ்ப்படிந்ததால் அவள் உயிரையே இழந்திருக்கலாம்! ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை சேவிப்பதை தெரிந்து கொண்ட கணத்தில் கர்த்தர் அவளைத் தமக்கு சுதந்தரமாகும்படி தெரிந்துகொண்டார்.

இஸ்ரவேலின் தேவனா? எரிகோவின் ராஜாவா? என்று ராகாபுக்கு வந்த சோதனை நமக்கு ஒவ்வொரு நாளும், நாம் செய்யும் ஒவ்வொரு சாதாரண காரியங்களிலும் வரலாம்! சிப்பிராள், பூவாளைப் போல, ராகாபைப் போல கர்த்தருக்காக உறுதியாய் நிற்பாயா அல்லது உலகத்தை பிரியப்படுத்துவாயா?

என்னுடைய கவலையெல்லாம் கர்த்தர் என் பக்கம் இருக்கிறாரா என்பது இல்லை, நான் அவர் பக்கம் இருக்கிறேனா என்பதுதான் என்ற ஆபிரகாம் லிங்கனைப் போல நீ யார் பக்கம் இருக்கிறாய் என்று சிந்தித்துப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

 

இதழ்: 847 ஒரு காட்டு ரோஜா!

யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….”

நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா? நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம் அடுத்த இரண்டு வாரங்கள் எரிகோவில் வசித்து வந்த கானானிய ஸ்திரியான ராகாபின் கதையை படிக்கும்போது இதைத்தான் செய்யவேண்டும்!

இப்பொழுது நமது முதல் காட்சியின் பின்னணி என்ன? மோசே மரித்துப்போனார் என்று கேட்டவுடன் இஸ்ரவேல் மக்கள் அவருக்காக துக்கித்து அழுது கொண்டிருக்கிறார்கள். அதற்குள் கர்த்தரால் ஆயத்தப்படுத்தப்பட்ட யோசுவாவை கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தினால் பலப்படுத்தி இஸ்ரவேலை வழிநடத்தும்படி கூறுகிறார். இப்பொழுது யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்க வேண்டும்!

இன்றைய வேத வசனத்தில் நாம் பார்க்கிறோம் யோசுவா இரண்டுபேரை எரிகோவை வேவுபார்க்கும்படி அனுப்புகிறான் என்று. அந்தக் காலத்தில் எரிகோ நகரம்தான் கானானின் நுழைவாயிலாக இருந்தது. உயரமான மதில் சுவராலும், பேரீச்ச மரங்களாலும் சூழப்பட்ட இந்த நகரம் யோர்தானின் தெற்கு திசையில் அமைந்திருந்தது!

இந்த இருவரும் ராகாப் என்ற வேசியின் வீட்டில் தங்குகின்றனர். ஒரு சில வேதாகமவல்லுநர்கள் வேசியின் வீடு என்பதை ஒரு சத்திரத்துக்கு ஒப்பிட்டு எழுதுகின்றனர்! இன்றைக்கு நாம் தங்கும் ஓட்டல் போல. ஆனால் எபிரேய, கிரேக்க வேதாகமம் நிச்சயமாக அப்படிக்கூறவில்லை. இதில் உண்மையென்னவெனில் வேவுபார்க்க வந்திருக்கும் இருவரும் பகல் முழுவதும் ஊரில் அங்கும் இங்கும் அலைந்து விட்டு இரவு நேரத்தில் வேசியின் வீட்டில் நுழைந்துவிட்டால் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்ற எண்ணத்தால்தான் நுழைந்திருப்பார்கள்.

ராகாப் ஒரு வேசி என்று வேதம் சொல்கிறது! அவளை சொல்லிக் குற்றமில்லை, அவள் வாழ்ந்த ஊரில் ஆபிரகாமின் தேவனையும், ஈசாக்கின் தேவனையும், யாக்கோபின் தேவனையும் யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றி சிறிதளவு கேள்விப்பட்டிருந்ததால் அவர்கள் உள்ளத்தில் இஸ்ரவேலரைக் குறித்து சிறிது பயம் இருந்தததே தவிர இஸ்ரவேலரை நேரடியாக சந்திக்கும் தருணம் இல்லை. அவர்கள் வரட்டும், யார் வல்லவர் என்று ஒரு கை பார்த்துவிடலாம், என்ற எண்ணத்தில் தான் இருந்தார்கள். அதுமட்டும் அல்ல பாகாலை வழிபட்ட அவர்களுக்கு, சரீர ஆசைகளை திருப்தி பண்ண நடைபெற்ற வேசித்தனம் கூட  ஒருவிதமான கடவுள் வழிபாடாகவே பட்டது.

இதுதான் ராகாப் என்ற வேசியைப் பற்றி நாம் படிக்கப்பாகிற வரலாற்றின் பின்னணி. இதை நம் மனக்கண் முன்னால் வைத்தவிதமாய் நாமும் இஸ்ரவேலின் வேவுகாரர் இருவரோடும் கூட சேர்ந்து ராகாப் என்ற வேசியின் வீட்டுக்குள் பிரவேசிக்கப் போகிறோம்! இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்கப் போகிறோம்!

என்னைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் ராகாப் தான்! நான் வேசியா என்று ஒருவேளை நீங்கள் என்னிடம் கேட்கலாம்! நாம் எத்தனைமுறை பணத்துக்காக, பொருளுக்காக, பதவிக்காக, அதிகாரத்துக்காக, யாரையாவது திருப்தி படுத்துவதற்காக, நம்முடைய காரியத்தை சாதிப்பதற்காக நம்மையும் நம்முடைய விசுவாசத்தையும் விற்றிருக்கிறோம்!

ராகாப் பிறப்பினாலும், வளர்ப்பினாலும்  ஒரு வேசியாக, காட்டில் படர்ந்த முள்ளைப்போல இருந்தாலும், அந்த முள்ளிலும் காட்டு ரோஜா மலரும் அல்லவா? ஒருவன் எப்படி பிறந்தான் எப்படி வாழ்ந்தான் என்பது முக்கியம் இல்லை! அவனுடைய வாழ்க்கையில் தருணம் கொடுக்கப்படும்போது அவன் அதை உபயோகப்படுத்தி தன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கிறானா இல்லையா என்பதுதான் முக்கியம்!

தருணம் கிடைத்தால் உள்ளத்தை திறப்பவர்கள் நம் பக்கத்து வீட்டிலும் இருக்கலாம், நம் தெருவிலும் இருக்கலாம், நம்முடன் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம்! அவர்கள் அப்படிப்படவர்கள், இப்படிபட்டவர்கள் என்று சாக்குபோக்கு சொல்லாமல் அவர்களுக்குத் தருணத்தை ஏற்படுத்திக்கொடுப்பது நம் கடமை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

 

 

 

இதழ்: 846 யோசுவாவின் தலைமைத்துவம்!

யோசுவா: 1: 9  நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..”

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம்.  நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை சுதந்தரிக்க வேண்டும்! அதற்குள் மோசே எடுத்துக்கொள்ளப் பட்டதும் ஒரு கணம் அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல பரிதபித்தனர். ஆனால் கர்த்தரோ அவர்களைக் கைவிடவில்லை. கர்த்தர் யோசுவாவை ஆயத்தம் பண்ணியிருந்தார்.

நாம் இன்றிலிருந்து யோசுவா புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு முன்னால் இன்று இந்த யோசுவா யார்? என்று சற்று ஆராய்வோம்!

யோசுவா என்னும் பெயருக்கு எபிரேய மொழியில் ‘ யெகோவாவே இரட்சகர்’ என்ற அர்த்தம் உண்டு. அவன் இளம் பிராயத்திலேயே கர்த்தருடைய இரட்சிப்பை கிருபையாய் அடைந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் பிறந்த அவன் எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த நூனின் தலைப் பிள்ளை. எகிப்தில் தலைப்பிள்ளைகள் சங்காரம் பண்ணப்பட்ட இராத்திரியிலே கர்த்தருடைய துதனாவர் கடந்து வந்த போது, நூனின் வீட்டுவாசலில் ஆட்டுக் குட்டியின் இரத்தம் இருந்ததால் அவனுடைய தலைப் பிள்ளையாகிய யோசுவா இரட்சிக்கபட்டான்!

தன்னுடைய வாலிப வயதிலேயே கர்த்தரை விசுவாசித்தவன். அவன் மோசே மூலமாய் கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் கண்களால் கண்டவன். செங்கடல் பிளந்தபோது அதன் வழியாய்க் கடந்து வந்தவன். விசுவாசம் அவனுக்குள் வேரூன்றியிருந்தது.

யாத்தி:17:13 ல் யோசுவாவை ஒரு நல்ல போர்ச்சேவகனாகப் பார்க்கிறோம். ஒரு சேனைத் தலைவனாக அவன் அமலேக்கியரோடு போராடி வெற்றி பெற்றான். ஒரு சேனையை யுத்தத்தில் நடத்தும் திறமையும், பட்டயத்தை உபயோகப்படுத்தும் பயிற்சியும் எங்கிருந்து வந்தது யோசுவாவுக்கு? ஒருவேளை அவன் எகிப்தில் யுத்த வீரனுக்கான பயிற்சி பெற்றிருக்கலாம். மோசே தன்னுடைய மக்களுக்காக பார்வோனின் அரண்மனையை விட்டுக்கொடுத்தது போல ஒருவேளை யோசுவாவும் எகிப்தின் சேனையில் பதவியேற்காமல் தன் ஜனங்களோடு புறப்பட்டு வந்திருக்கலாம் என்ற யூகம் உள்ளது! யோசுவா எதிரிகளை எதிர்த்து போராடும் மனத்தைரியம் கொண்டவனாக இருந்தான்.

யாத்திராகமம் 24 ம் அதிகாரம் 13ம் வசனத்தில் நாம் யோசுவாவை மோசேயுடைய ஊழியக்காரன் என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலின் தலைவனான மோசேக்கு அவன் ஊழியம் செய்தான். நாற்பது வருட வனாந்தர நாட்களில் இஸ்ரவேலின் பாளயத்துக்கு வெளியே மோசே தனியாக ஒரு கூடாரம் அமைத்து அதில் கர்த்தரோடு பேசுவது வழக்கம்(யாத்தி:33:7-11). அப்படியாக மோசே சென்றபோதெல்லாம் ஊழியக்காரனான யோசுவா கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பான். அவன் ஒரு நல்ல போர்ச்சேவகன் மட்டும் அல்ல, கர்த்தருடைய பிரசன்னத்தையும் அவருடைய மகிமையையும் உணர்ந்தவன்!

எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் யோசுவா கானானை வேவு பார்க்க காலேபோடும் இன்னும் பத்து பேரோடும் சேர்ந்து மோசேயால் அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம். மற்ற பத்துபேரும் அங்குள்ள சூழ்நிலைகளைக் கண்டு பயந்து மக்களைப் பயப்படுத்தியபோது யோசுவாவும், காலேபும் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தங்கள் விசுவாசத்தை மேற்கொள்ளாமல் தைரியமாக நாம் கானானை சுதந்தரிப்போம் என்றனர்! இஸ்ரவேல் மக்கள் விசுவாசிக்காததால் இன்னும் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைய வேண்டியிருந்தபோதிலும், அவர்களுடைய தலைமுறையினர் எல்லோரும் வனாந்தரத்தில் மரித்தபோதிலும் யோசுவாவும் காலேபும் தாங்கள் கானானை சுதந்தரிப்போம் என்ற விசுவாசத்தில் தளரவேயில்லை.

உபாகமம் 34: 9 ல் யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்என்று பார்க்கிறோம். கர்த்தருடைய ஊழியத்தை செய்ய தேவையான உதவி நமக்கு பரத்திலிருந்து அருளப்படுகிறது என்பதற்கு யோசுவாவே உதாரணம்!

கர்த்தர் யோசுவாவை தெரிந்து கொண்டு அவனை தன்னுடைய ஊழியத்துக்காக ஆயத்தப்படுத்தியிருந்தார். மோசேயைப் போல யோசுவாவும் ஒரு சாதாரண மனிதனாகப் சில தவறுகளை செய்தாலும் அவன் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவனாக சிறந்து விளங்கியதின் இரகசியம் என்ன? அவன் கர்த்தருடைய வார்த்தையின் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை!

யோசுவாவிடம் இருந்த குணநலன்கள் நம்மிடம் உள்ளதா? இரட்சிப்பின் அனுபவம் உள்ளதா? கர்த்தர் மேல் விசுவாசம் வேரூன்றியிருக்கிறதா? ஒரு நல்ல போர்ச்சேவகனாக கர்த்தருடைய வார்த்தை என்னும் பட்டயத்தைக் கொண்டு எதிரியாகிய சாத்தானை எதிர்த்து போராடும் திறமை உள்ளதா? ஊழிய மனப்பான்மை உள்ளதா? சூழ்நிலைகளைக் கண்டு தளராத தைரியம் உள்ளதா? ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தருடைய வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதா? இவையே ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைமைத்துவத்தின்  அடையாளங்கள்!

இவை நம்மில் காணப்படுமானால் கர்த்தர் நம்மையும் நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் சிறந்து விளங்க செய்வார்! நீயும் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறாய்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

இதழ்: 845 மோசே முகமுகமாய் அறிந்த அநாதி தேவன்!

உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;

வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.

இன்று நம்முடைய கடைசி நாள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்! இன்றைக்கு நாம் வாசிக்கிற வசனம் ஒரு தங்கப் புதையலைப் போல மோசேயின் உபதேசத்தில் புதைந்து கிடக்கிறது!

மோசேயுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்றும், தவறும்போதும் கர்த்தருடைய பாதங்களில் விழுந்து கிடக்கும் இயல்பும், கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும் இயல்பும் அவருக்கு இரு தூண்களைப் போல இருந்தன என்று பார்த்தோம்.

இப்பொழுது தன்னுடைய அருமையான, கர்த்தரோடு சஞ்சரித்த வாழ்க்கையின் கடைசி பகுதியில் மோசே ”அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். மோசேயின் குரலில் திடநம்பிக்கை தொனிக்கிறது! தாம் முகமுகமாய் அறிந்த தேவனே தனக்கு அடைக்கலம், அவர் நித்தியமானவர், என்றென்றைக்கும் நம்பப்படத்தக்கவர் என்கிறார்.

இதை வாசிக்கும்போது என்னுடைய வாழ்க்கையின் கடைசிமூச்சில் இப்படிப்பட்ட சாட்சியை நான் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். வெளியே காற்று வேகமாக அடித்தது, இடியோடு மழை பெய்தது! வாசலில் நிற்கும் மரம் காற்றின் வேகத்தில் ஒடிந்து விழுந்து விடுவாற்போல் அசைந்தது! அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு சிறிய பறவை தனக்கென்று ஒரு சிரு கூட்டை அமைத்துக்கொண்டு அதிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றும், இடியும், மழையும் அந்தப் பறவையை அசைக்க முடியவில்லை. இந்த பறவையைப்போல இன்று அவருடைய நித்திய புயத்துக்குள் அடைக்கலமாக வாழும் நான் கடைசிவரை விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் பெருமூச்சின் ஜெபமாக வெளிப்பட்டது!

எகிப்தில் எல்லா ஆண் பிள்ளைகளையும் கொல்லும்படியாக பார்வோன் உத்தரவு கொடுத்திருந்த போது இரண்டு எபிரேய மருத்துவச்சிகள் மூலமாக கர்த்தர் மோசேக்கு அடைக்கலம் கொடுத்தார்! பின்னர் மூன்று மாதக் குழந்தையாக நாணற்பெட்டியில் நைல் நதியில் மிதந்த போது பார்வோன் ராஜாவின் குமாரத்தியால் அடைக்கலம் பெற்றார்! குழந்தையை வளர்க்க ஒரு தாய் தேவைப்பட்டபோது கர்த்தர் மோசேயை அவருடைய தாயின் கரத்திலேயே அடைக்கலமாகக் கொடுத்தார்! மோசே மீதியான் வனாந்தரத்தில் தலைசாய்க்க இடமில்லாமல் அலைந்தபோது கர்த்தர் எத்திரோவின் மகளான சிப்போராளை மனைவியாகக் கொடுத்து அடைக்கலம் கொடுத்தார்! இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பெரும்பொறுப்பை ஏற்றபோது அவனுடைய ஆத்துமாவை உற்சாகப்படுத்த துதி பாடல்களோடு ஆராதனை நடத்திய தீர்க்கதரிசியாகிய அவர் சகோதரி மிரியாமைக் கர்த்தர் அடைக்கலமாகக் கொடுத்தார்!

மோசே தன் முதிர் வயதில் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் என்று திட்டமாகக் கூற முடிந்தது!

உன்னால் இன்று தேவனே எனக்கு அடைக்கலம் என்று நிச்சயமாகக் கூற முடியுமா? கர்த்தருடைய புயத்துக்குள் அடைக்கலமாக வந்திருக்கிறாயா? அவருடைய பிரசன்னம் உன்னோடு எப்பொழுதும் தங்கியிருக்கிறதா?

உன்னுடைய நிகழ்கால வாழ்க்கையையும், நீ அறியாத உன் எதிர்காலத்தையும் மோசே முகமுகமாய் அறிந்த இந்த தேவனாகிய கர்த்தரிடம் ஒப்புவிக்க பயப்படாதே! அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்! 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

இதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்!

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து  உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

 நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும் பார்த்தோம்.

இன்று கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு கட்டப்பட்ட வீட்டின் இரண்டாவது தூணாக அமைவது என்ன என்று பார்க்கப்போகிறோம்.

“உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்”. கர்த்தருடைய வார்த்தைகள் நம்மை போதித்து வழிநடத்தும் என்பது நான் என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிற ஒரு உண்மை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் கூடியிருந்த சபையில் அவர்கள் முன்பாக ஒரு பிரசங்கம் பண்ணிக் காட்ட வேண்டியதிருந்தது. அதை நான் முடித்துவிட்டு வெளியே வரும்போது எங்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து நீ ஒரு பெரிய பிரசங்கியாக வருவாய் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும் என்றார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தில் தெளிவான குரலில் நீ பிரசங்கிக்கப் போவதில்லை, வேதத்தை கற்பிக்கப்  போகிறாய் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை வேதத்தை சிறியோர் பெரியோருக்கு கற்பிக்கும்  கிருபையை கொடுத்திருக்கிறார். இந்த ராஜாவின் மலர்கள் மூலமாக நான் உங்களோடு கர்த்தருடைய வார்த்தையை போதிப்பதும்  கர்த்தருடைய அநாதி தீர்மானம் அல்லவா!

மோசே நாற்பது ஆண்டுகள் தேவனை முகமுகமாய் அறிந்த அனுபவத்தில் நம்மை நோக்கி கர்த்தருடைய வார்த்தைகளின் போதனையை ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். என்னுடைய அனுபவத்தில் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக சொல்லுகிறேன் வேதவார்த்தைகள் ஜீவனுள்ள வார்த்தைகள், அவை உங்களை போஷிக்கும், உங்களை வழிநடத்தும், உங்களைக் காக்கும், தேவனோடு நெருங்கி வாழவும், அவருடைய திருமுக பிரகாசத்தை நாம் காணவும் நமக்கு உதவும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு மனமகிழ்சியைக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும், நம் பாதைக்கு தீபமாக இருக்கும். இது நிச்சயமாக என் அனுபவம் மாத்திரம் அல்ல, என்னைப் போன்ற உங்களில் பலருடைய அனுபவமும் தான்!

நம்மில் அநேகர் பிரசங்கத்தை கேட்கும்போது ஆம் ஆம் என்று தலையசைக்கிறோம். ஆனால் அவற்றை ஒரு காதில் கேட்டு விட்டு மறுகாதில் விட்டுவிடுவோம். இங்கு மோசே உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் என்கிறார். போதனையடைவார்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம்  அவற்றைக் காதுகளால் கேட்பது மட்டும் அல்ல, அவை நம் வாழ்வின் அங்கமாக வேண்டும். அவற்றை நாம் உட்கொள்ள வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளில் நம் வாழ்க்கை வேரூன்றியிருக்கும் போதுதான் நாம் நல்ல கனி கொடுக்கும் மரமாக வாழ முடியும்.

அனுபவ முதிற்சியுள்ள மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்த்து ‘ கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும்படி’  தன்னுடைய கடைசி உபதேசத்தில் கூறுகிறான். இன்று கர்த்தருடைய வார்த்தை உன் வாழ்வில் அங்கமாக இருக்கிறதா? அதுவே நாம் கற்பாறையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டும் வாழ்க்கை என்னும் வீட்டின் இரண்டாவது பெலமான தூண்!

கர்த்தருடைய வார்த்தையானது பாதைக்கு தீபம்!

அது நாம் இருளில் நடக்கும்போது

வழிகாட்டும், நம் கால்கள் தவறாதபடி காக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது கொழுந்து விட்டு எரியும் அக்கினி!

அது நம்முடைய சாட்சியை

தைரியமாக பறைசாற்ற உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சுத்தியைப் போன்றது!

அது கல்லான நம் இருதயத்தை உடைத்து, நொறுக்கி,

நாம் அவருடைய சித்தப்படி வாழ நம்மை உருவாக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சிறிய விதையைப் போன்றது!

அது நல்ல நிலமாகிய நம் இருதயத்தில் விழும்போது

நம்மை நற்கனி கொடுக்கும் மரமாய் மாற்றும்!

கர்த்தருடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்!

அது நம் இருதயத்துக்குள் ஊடுருவி சென்று,

நம்மை ஆராய்ந்து பரிசுத்தமாய் நாம் வாழ உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது சத்துணவைப் போல!

நாம் குழந்தைகளான போது பாலைப் போல நம்மை புஷ்டியாக்கும்!

நாம் பெரியவர்களான போது மாமிசத்தைப் போல நம்மை திருப்தியாக்கும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!