Tag Archive | 13

இதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல!

2 சாமுவேல் 14: 12, 13  அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியால் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில் நம்முடைய காட்டுக்கே ராஜாவாகிய சிங்கத்தை அதின் கம்பீரத்தோடு பார்ப்பது பிடிக்கும்.  அதனுடைய தங்க நிறமும், கெம்பீரக் குரலும் என்னை சிலிர்க்க வைக்கும்.

அதனால்தானோ ஏனோ வேதத்தில் தைரியசாலிகளை சிங்கத்துக்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

நீதிமான்களோ சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள்  ( நீதி: 28:1)

அதுமட்டுமல்ல தேவனுடைய கர்த்தருடைய பாதுகாப்பைப் பற்றி கூறும்போது ஏசாயா தீர்க்கதரிசி

..சிங்கமும், பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும் அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும் அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். ( ஏசா:31:4)

சிங்கம் பயமே இல்லாமல் தன்னுடையதை தைரியமாக பாதுகாக்கும். இந்த மிருகத்தைத்தான் வேதம் நமக்கு தைரியத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு தைரியத்தைதான் நாம் தெக்கோவாவூராளாகிய புத்தியுள்ள ஸ்திரீயிடம் பார்க்கிறோம்.

இந்தப்பெண்ணைப்ப்ற்றி நாம் படிக்கும்போது அவள், பகுத்தறியும் ஞானம் உள்ளவள், இரக்க குணம் உள்ளவள், குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் கொண்டவள், தன்னுடைய அறிவால் தாவீதுடைய பரிவான குணத்தை தட்டி எழுப்புகிறாள் என்று பார்த்தோம்.

இன்று அவள் யாருமே போகத் துணியாத, ஏன், தாவீதுடைய நண்பனாகிய யோவாப் கூட செய்யத்துணியாத ஒரு பெரிய காரியத்தை தைரியமாக செய்கிறாள். பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர்?  என்று அவள் துணிந்து கேட்டது வேறு யாரும் இல்லை! இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது!

தாவீது தன்னுடைய குமாரனைக் குறித்த முடிவு எடுக்க தேவன் இந்த தையமான பெண்ணை உபயோகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியை நான் படிக்கும் போது, இந்தப்பெண் ராஜாவாகிய தாவீதிடம் பேசி, உறவாடிக்கொண்டிருக்கும்போது அவனை நன்கு அறிந்ததாலே, அவள் அவனுடைய சமூகத்தில் தைரியமாக ஒரு வேண்டுகோளை வைக்கிறாள் என்று உணர்ந்தேன். எனக்கு இன்று

ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.  ( எபிரேயர் 4: 16)

தான் நினைவுக்கு வந்தது. நம்முடைய தேவனாகியக் கர்த்தருடன் ஒவ்வொரு நாளும் அப்பா பிதாவே என்று உறவாடும் நாம் அவருடைய கிருபாசனத்தண்டையில் தைரியமாய் நெருங்கி அவருடைய கிருபையை பெற முடியும்!

ஒரு தைரியமான, சிங்கத்தைப் போன்ற ஒரு பெண், ராஜாவின் சமுகத்தில் வந்து வேண்டுகோளை வைத்தது போல நாமும் தேவனுடைய கிருபாசனத்தை அண்டுவோம்!  நமக்கும் இரக்கம் கிடைக்கும்!

தேவன் தாமே இந்த வார்த்தைகள் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ் 784 பயத்திலிருந்து விடுதலை உண்டு!

2 சாமுவேல் 17: 6-10  ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய  ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். … உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் … உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்… உம்முடைய தகப்பன்  சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும் இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

நான் உயர்நிலைப் பள்ளியை விடுதியில் இருந்து படித்தேன். அங்கு இரவு படிக்கும் வேளையை முடித்துவிட்டுத் நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்குத் திரும்பி கொண்டிருந்தோம். திடீரென்று முன்னால் சென்ற ஒருத்தி எதையோ பார்த்தமாதிரி கத்தினாள். அவ்வளவுதான் எங்கள் யாருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் கத்தி கூச்சல் போட்டு ஒருவர்மேல் ஒருவர் விழுந்து பெரிய குழப்பமே ஆகிவிட்டது! இதுதான் பயம்  என்பது! பயம் நமக்கு ஒரு மரத்தை மிருகமாகக் காட்டும்!

நான் கர்த்தரகிய இயேசுவைப் பற்றி பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அவர் பாவத்திலிருந்து இரட்சிக்கிறார் என்ற வாசகத்தைதான் அதிகமாக கேட்டிருக்கிறேன். உண்மை!  ஆனால் அவர் நமக்கு இன்னும் ஒரு பெரிய விடுதலையைக் கொடுக்கிறார். அது பயம்! ஏனெனில் பயம்தான் நம்மைக் கொல்லும் முதல் எதிரி என்று நினைக்கிறேன் நாம் நன்மையான வாழ்வைப்பற்றிப் படித்து வரும் கடைசி பாகத்தில் இன்று  தேவன் நமக்கு அளிக்கும் நன்மையான வாழ்வில் பயத்துக்கு இடமேயில்லை என்று பார்க்கிறோம். ஏனெனில் நம்மை பயப்படுத்தும் எத்தனை காரியங்களைப்பற்றி நாம் ஒவ்வொருநாளும் கேட்கிறோம்!

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு தேவன் வேதத்தில் மறைத்து வைத்திருக்கும் இன்னொரு பொக்கிஷத்தை வெளிப்படுத்துகிறது. தாவீது தன்னுடைய குமாரன் அப்சலோமால், சிங்காசனத்தை அடையும் ஆசையில் முதுகில் குத்தப்படுகிறான் என்று நேற்று பார்த்தோம். அப்சலோம் இதற்காக அக்கிதோப்பேலின் அறிவுரையைக் கேட்கிறான். அக்கிதோப்பேலின் அறிவுரை உண்மையிலேயே சிறந்த ஒன்றாக இருந்தபோதும், அப்சலோமுக்கு அதில் முழுவதும் நம்பிக்கை இல்லை. அவன் ஊசாயிடம் இன்னொரு வாய்மொழி கேட்கலாமே என்று கூறி அவனையும் வரவழைக்கிறான். ஆனால் அப்சலோமுக்கு அறிவுரை கொடுக்கும்படி வரவழைக்கப்பட்ட ஊசாய் தாவீதுக்கு நல்ல நண்பன் என்பதை யாரும் அறியவில்லை. ஊசாய் இங்கு எல்லோரையும் திசை திருப்புகிறான். ஏனெனில் அவன் தாவீதை நன்கு அறிந்தவன்! அவன் தாவீது மிகுந்த பலசாலி மட்டுமல்ல பிகப்பெரிய யுத்த வீரனும் கூட  என்பதை ஞாபகப்படுத்துகிறான்.

தாவீது எதற்கும் பயப்படாத ஒரு வீரன் என்பதை இஸ்ரவேலர் எல்லோரும் அறிந்திருந்தார்கள் என்று ஊசாய் கூறுகிறான். ஆனால் இந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? தானாகவே வந்ததா? அவன் சிறுவனாயிருந்த போது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்க்கும் நாட்களில் தேவனாகிய கர்த்தரை அறிந்து அவருடன் தொடர்பு கொண்டிருந்ததால் தன்னுடைய ஆடுகளைத் தாக்க வந்த சிங்கத்தையும், ஓநாயையும் அழிக்க முடிந்தது. பின்னர் மகா கோலியாத்தை போரில் எதிர்கொண்டபோது அவன் யாருடைய நாமத்தில் பயமில்லாமல் நின்றான்? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தினால் அல்லவா? அவன் இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேலால் அபிஷேகம்பண்ணப் பட்ட பின்னர் சவுலால் வேட்டையாடப்பட்டபோது அவனுடைய  எல்லாப் பயத்தினின்றும் விடுதலையாக்கினது கர்த்தர் அல்லவா? அதுமட்டுமல்ல அவன் இஸ்ரவேலின் ராஜாவான பின்னர் அவனை சுற்றியிருந்த அத்தனை ராஜ்யங்களையும் முறியடித்தானே அந்த வெற்றியைக் கொடுத்தது யார்? தாவீதின் வார்த்தைகளால் பார்த்தால் சங்கீதம்: 108:10,13 ல்

அரணான பட்டணத்துக்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? எதோம்மட்டும் என்னை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? தேவனாலே பராக்கிரமஞ்செய்வோ, அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுவார்.

என்றல்லவா கூறுகிறான்!

மத்தேயு 14:27 ல் கர்த்தராகிய இயேசு கடலின்மேல் நடந்து வருவதைப் பற்றிப் படிக்கிறோம். அதைப்பார்த்து கலங்கி பயத்தினால் அலறிய  சீஷரை நோக்கி,

திடன்கொள்ளுங்கள் நான் தான்! பயப்படாதிருங்கள் என்றார்

என்று பார்க்கிறோம். கர்த்தராகிய தேவன் அளிக்கும் நன்மையான வாழ்வில் பயத்துக்கு இடமேயில்லை. கர்த்தர் தாவீதோடு இருந்து அவனுக்கு எல்லா சத்துவத்தையும் பெலனையும் அழித்து வெற்றியுள்ள வாழ்க்கையை அளித்தது போல உன்னுடனும் இருந்து எல்லா பயத்தையும் நீக்கி உனக்கு வேண்டிய பெலனளிப்பார்!

தாவீதைப் போல கர்த்தரோடு பேசவும், உறவாடவும், கர்த்தருடைய நாமத்தினால் வெற்றி பெறவும் கற்றுக்கொள்!

நம்முடைய கர்த்தராகிய இயேசுதாமே இந்த வார்த்தைகளின் மூலம் நம்மை எல்லா பயத்துக்கும் விடுதலையாக்கி வெற்றியுள்ள வாழ்வைத் தருவாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ் 720 கட்டுப்பாடற்ற வாழ்க்கை!

2 சாமுவேல் 11: 12, 13  அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்….. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத் தன் முன் அழைத்து புசித்து குடித்து வெறிக்கப்பண்ணுகிறான்.

என்ன பரிதாபம்! கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட இஸ்ரவேலின் ராஜா இத்தனை கேவலமாக தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் உபயோகப்படுத்தி உரியாவின் மனதை குடிபோதையால் கலங்கப்பண்ணி அவனைத் தன் மனைவியுடன் போய்த் தங்குமாறு முயற்சி செய்கிறான்.

அன்று தன்னை வேட்டையாடிய சவுல் தன் கைக்கு அருகே இருந்தபோது அவன் மேல் கை போட மாட்டேன் என்று உறுதியாக இருந்தானே அந்த தாவீதா இவன்! மிகுந்த தயவுள்ள இருதயத்தைக் கொண்ட தாவீது இன்று இரக்கமில்லாதவனாக காணப்படுகிறான்.

உரியாவை எப்படி தன் வீட்டிற்குப் போக வைக்க என்றுத் தெரியாமல் தாவீது இப்பொழுது அவனுடைய ஐம்புலன்களையும் இழுக்கும் விதமான ராஜாவின் மேஜையில் வைக்கும் உணவினாலும், ராஜாவின் திராட்சைத் தோட்டத்திலிருந்து வரும் மதுவினாலும் அவனை நிரப்புகிறான். அதிகமாய் குடித்து விட்டால் குடிபோதையில் தான் சொன்னதை செய்வான் என்ற எண்ணம். ஆனால் வேதம் தாவீது அவனை வெறிக்கப்பண்ணினான் என்று கூறினாலும் அவன் புத்தி பேதலிக்கும் வரை குடித்ததாகத் தெரியவில்லை.

தாவீது தன் இள வயதில் கட்டுப்பாடோடு வாழ்ந்தவன் தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவன் தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தாமல் அநேக மனைவி மாரையும், மறுமனையாட்டிகளையும் சேர்க்க ஆரம்பித்தான். அவனுடைய இந்த கட்டுப்பாடற்ற தன்மை ஒருநாள் பொங்கி தன்னுடைய சேனையின் வீரனான உரியாவின் மனைவியைத் தொட செய்தது. ஒரு ராஜ்யத்தை கட்டியாளத் தெரிந்த அவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனுக்கு தன் குடும்பத்தை எப்படி கட்டுப்படுத்தத் தெரியும்? தாவீதின் குடும்பம் பின்னால் பல கஷ்டங்கள் அனுபவித்ததை வேதம் நமக்கு காட்டுகிறது.

நம்மை பாவத்தில் விழவைக்கும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கிருபையை கர்த்தர் நமக்குக் கொடுக்குமாறு ஜெபிப்போம். தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளும் ஆவல் ஒவ்வொரு நாளும் நமக்கு வேண்டும். அவருடைய பலத்த புயத்துக்குள் நம்மை ஒப்புக்கொடுத்து கட்டுப்பாடோடு பரிசுத்தமாய் வாழ ஜெபிப்போம்.

கர்த்தாவே எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்