Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

சர்வதேச மகளியர் தினம்!

நியாதிபதிகள்: 13:2 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள்”.

சில வேதாகமப் பகுதி என்னை ஆச்சரியப்பட்அ வைக்கும். சில பகுதி என்னை அழ வைக்கும். ஆனால் இன்றையப் பகுதி என்னை சிரிக்க வைத்தது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் எனக்கு சிரிப்பு வந்தது என்று நினைக்கிறேன்.

பெண்ணுரிமைகளைப் பற்றி அதிகமாக நாம் எண்ணும் இந்த தினத்தில் இந்த வேதாகமப் பகுதி என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது.

இதில்  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவின் ஊர் பெயர், கோத்திரம் பெயர் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோவாவின் மனைவியும் சிம்சோனின் தாயுமான அந்தப்பெண்ணின் பெயர் மாத்திரம் கொடுக்கப்படவில்லை. ஏன் தேவனாகிய கர்த்தர் இந்தப் பெண்ணின் பெயரை மாத்திரம் வேதத்தில் இடம் பெறாமல் செய்தார் என்பது கேள்விக்குறியானது.

இந்த அதிகாரத்தை படித்த போது அந்தப்பெண் ஒரு தேவனுக்கு பயந்த ஸ்திரீ என்பதை உணர்ந்தேன். பெலிஸ்தியரின் மத்தியில் வாழ்ந்தாலும், பெலிஸ்தியரின் பழக்கவழக்கங்களை ஆடையாகப் போர்த்தியவள் அல்ல அவள். தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்தவள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய் தூதனானவர் பூமிக்கு வந்து, இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கு நீங்கி இரட்சிக்க ஒருவன் பிறக்கப்போகிற செய்தியை முதலில் இஸ்ரவேலின் தலைவர்களிடமோ, அல்லது மனோவாவிடமோ கூறவில்லை. இந்த நற்செய்தி முதலில் தேவனால் நம்பப்பட்ட இந்தப் பெண்ணிடமே அறிவிக்கப்பட்டது.

இந்த அருமையானத் தாயின் பெயர் ஏன் வேதத்தில் இடம் பெறவில்லை என்ற கேள்வி என் மனதை உறுத்தியது.ஏனெனில் வேதாகமத்தில் கவனக்குறைவோ அல்லது விபத்தோ இந்தப் பெயர் இடம் பெறாததற்கு காரணம் இல்லை என்று தெரியும். ஆதலால் தேவ

இன்று நான் இந்த தியானத்தை தொடர ஆரம்பித்தபோது கர்த்தர் அவருடைய கிருபையின் ஞானத்தால் இதை எழுத உதவி செய்தார்.

இந்தத் தாயைப் போல, நம்மை சுற்றிலும் அநேக சகோதரிகள் விசுவாசத்தில் நிலைத்திருந்து அமைதியாக தேவன் தமக்குக் கொடுத்த வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.உண்ண ஒருவாய் நல்ல உணவில்லாதபோதும் கர்த்தர் என்னைப் போஷிப்பார் என்ற நம்பிக்கையோடு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் சகோதரிகளையும், தான் வசிக்கும் கூரையின் வழியாய் மழைத் தண்ணீர் ஒழுகும்போதும் கர்த்தர் நல்லவர் அவர் என் தேவைகளைப் பூர்த்தி செய்வார் என்ற அசையாத விசுவாசத்தோடு வாழும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்த விசுவாசத் தாய்மாரின் பெயர் உலகத்துக்குத் தெரியாது. ஆனால் தேவன் அறிவார். ஒருநாள் தம் தேவதூதரை அவர்கள் வாசலுக்கு அனுப்புவார். ஏனெனில் அவர்கள் மறக்கப்படுவதில்லை! தேவனுடைய புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் மனோவாவின் மனைவியின் பெயரைப் போல  ‘உண்மையும் உத்தமுமானவள்’ என்று பதிவாயுள்ளன!

வேதத்தில் பெயர் பதிவாகாத அநேக மனைவிமாரும், மகள்களும் உண்டு!

ஏனோக்கின் மனைவியும், மகள்களும்,

மெத்தூசலாவின் மனைவியும், மகள்களும்,

லாமேக்கின் மனைவியும், மகள்களும்,

நோவாவின் மனைவியும், மகள்களும்,

இயேசுவின் தாயாகிய மரியாளின் தாய்,

பேதுருவின் மாமியார்,

விசுவாசத்தில் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்ட பெண்,

தனக்கு உள்ள எல்லாவற்றையும் காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழை ஸ்திரீ,

சமாரிய ஸ்திரீ,

பொந்தியு பிலாத்துவின் மனைவி,

பெந்தேகோஸ்தே நாளில் மேலறையில் கூடியிருந்த பெண்கள்,

பிலிப்புவின் நான்கு தீர்க்கதரிசி மகள்கள், இன்னும் பலர்…….

இவர்கள் பெயர் கர்த்தருக்குத் தெரியும்! உன் பெயரும் கர்த்தருக்குத் தெரியும்! அவர் உன்னைக் காண்கிறார்! சோர்ந்து போகாதே! ஒருநாள் கர்த்தர் தம் தேவதூதரை உன்னிடம் அனுப்புவார்! உன் தேவைகளை அற்புதமாய் சந்திப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

2 thoughts on “சர்வதேச மகளியர் தினம்!”

Leave a reply to Jebakaniraja Cancel reply