உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும், அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.”
நான் அலுவலகத்துக்கு போகும் வழியில் வயல்வெளிகள் உள்ளன! நீர்ப்பாய்ச்சியிருக்கும் வயல்களில் வாத்துகள் கூட்டம் கூட்டமாய் வலம் வந்துக்கொண்டிருக்கும் அழகை அடிக்கடி நான் ரசிப்பதுண்டு. அதில் எப்பொழுதுமே ஒரு வாத்து முன்னால் இருக்கும், மற்றவை அனைத்தும் அந்த தலைவர் வாத்து போகிற திசையில் தான் திரும்புவார்கள்! யாராவது அவர்களை தொந்தரவு செய்தால் தலைவர் வாத்து இறக்கைகளை விரித்து சிறிது பறப்பதைப் பார்த்து மற்றவையும் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். இதில் என்னைக் கவர்ந்த காரியம் என்ன தெரியுமா? முன்னால் போகிற வாத்தின் குரலை அல்ல அதின் நடக்கையைத்தான் மற்றவை பின்பற்றும்!
இன்று நாம் வாசித்த வேதபகுதியில், ‘ஆசீர்வாதங்கள்’ என்ற பட்டியலில் தேவனாகிய கர்த்தர் நமக்கு, நீ வாலாகாமல் தலையாவாய் என்று தலைமைத்துவத்தை ஒரு ஆசீர்வாதமாகக் கொடுக்கிறார்.
நாம் கடந்த சில நாட்களாக ஆசீர்வாதங்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம் என்பதே இதன் அர்த்தம்! அவரே நம் வாழ்வில் முதலிடம் பெற்றிருப்பார்! அப்படிபட்ட சுகந்த வாசனையுள்ள வாழ்க்கையை நாம் வாழும்போது நாம் தலையாயிருப்போம் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
தலை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் சேனையின் தலைமை என்ற அர்த்தமுள்ள வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது! நாம் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வாழும்போது, அவருடைய முன்மாதிரியை பின்பற்றும்போது மற்றவர்கள் நம்முடைய நடக்கையை பின்பற்றுவார்கள்!
நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு, “ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யும்படி மாதிரியைக் காண்பித்தேன்” என்றார். (யோவான்: 13:14,15)
அங்கேயிருந்த யூதாசுக்கு இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவரைப் பின்தொடர்ந்தால் நான் தலையாயிருக்கலாம் என்று எண்ணினேன் இவர் என்னை மற்றவர்கள் காலைக் கழுவ சொல்கிறாரே என்று வெறுப்புடன் பார்த்தான். இன்று கூட திருச்சபையானாலும் சரி அல்லது அரசாங்கமானாலும் சரி , ஊழியம் செய்யும் தலைவர்களை உலகம் பெலவீனராகவே பார்க்கிறது! யூதாஸ் இயேசு கிறிஸ்துவை தலையாக அல்ல வாலாகப் பார்த்தான்! அவரைக் காட்டிக்கொடுக்கத் துணிந்தான்!
‘வால்’ என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் அர்த்தத்தைப் பாருங்கள்! நாம் அதன் அர்த்தம் ’கடைசியானது’ அல்லது ஒரு குவியலில் அடியில் இருப்பது என்று எண்ணுவோம்! ஆனால் அப்படியல்ல! அதன் அர்த்தம் பதர் என்பது. வாலாக இருப்பவர்கள் பதரைப் போல காற்றோடு செல்லுவார்கள்! காற்றடிக்கும் திசையில் அவர்கள் நம்பிக்கையும் விசுவாசமும் மாறும்! திடநம்பிக்கையற்றவர்கள்! மணலின்மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீட்டைப் போல பெருங்காற்றில் வீழ்ந்து போவார்கள்!
கர்த்தராகிய இயேசு இன்று உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன், நீ கீழாகாமல் மேலாவாய் என்கிறார். உன்னை பலருக்கும் ஊழியம் செய்யும் தலையாக மாற்றுவேன் என்கிறார்! பலருக்கும் முன்மாதிரியான வாழ்கைக்கு உன்னை அழைக்கிறார்! இது கர்த்தர் உனக்கு கொடுக்கும் பெரிய ஆசீர்வாதம்! இழந்து போகாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

Dear Prema, I have been reading ur msgs. They were so encouraging to me.
May the Lord use u to touch the lives of many. In His love, Jeba
On Jun 8, 2016 6:34 AM, “Prema Sunder Rajs Blog” wrote:
Rajavinmalargal posted: “உபாகமம்:28:14 “ இன்று நான் உனக்கு விதிக்கிற உன்
தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும்,
அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்,
நீ கீழாகாமல் மேலாவாய்.” நான் அலுவலகத்துக்கு போகும் வழிய”
Thank you Jeba! your words encourage me to continue writing! Thank you!