Archive | March 2017

மலர் 7 இதழ்: 589 ஒரு எச்சரிக்கையான வாழ்க்கை!

1 சாமுவேல்: 10:9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படித் திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்.

இஸ்ரேவேலின் முதல் ராஜாவாகும்படி தெரிந்து கொள்ளப் பட்ட சவுல் தான் ஒரு பென்யமீன் கோத்திரத்தான் என்றும், மிகவும் அற்பமானக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறியதைப் பார்த்தோம்.

தேவனுடைய உத்தம தீர்க்கதரிசியான சாமுவேல், சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்க வந்தபோது அவர் சவுலை நோக்கி, கர்த்தருடைய ஆவி உம் மேல் இறங்கும்போது நீ பழைய மனிதனைப்போல அல்ல புதியவனாவாய் என்றார். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, கர்த்தர் சவுலுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்து அவனை புதியவனாக்கினார். அவன் தன்னை தேவனுடைய அழைப்புக்கு ஒப்புக் கொடுக்குமுன்னர் இருந்த பழைய சவுல் இல்லை, முற்றும் புதிய இருதயத்துடன் புதிய மனிதனானான் என்று பார்க்கிறோம்!
அவன் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டதைக் கண்டு,சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று ஜனங்கள் ஆச்சரியப் பட்டனர்!

பரலோகத் தேவன் அவனுக்கு ஒரு கணத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்தார்!

நாம் எப்படிப் பட்ட நிலமையில் இருந்தாலும், எப்படிப்பட்ட குடும்ப சூழலில் இருந்தாலும், எப்படிப்பட்ட பின்னணி நமக்கு இருந்தாலும், கர்த்தருடைய அழைப்புக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, கர்த்தர் நம்மை அவருடைய ஊழியத்தை செய்யத் தகுதியுள்ளவர்களாய் மாற்ற வல்லவர் என்பது சவுலின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது அல்லவா!

ஆனால் சவுலின் வாழ்க்கையைப் படிப்போமானால், ஒரு காலகட்டத்தில் அவன் கர்த்தர் அவனுக்கு இலவச ஈவாய்க் கொடுத்த புதிய இருதயத்தை உதறித் தள்ளியபோது, வேதம் கூறுகிறது அவனுடைய இருதயத்தில் அசுத்த ஆவி புகுந்து கொண்டது என்று. ஆம்! பரிசுத்த ஆவியானவரை நாம் வெளியேற்றும் போது, காலியான இருதயத்தை நிரப்ப அசுத்த ஆவிகள் புகுந்து கொள்ளும் என்று வேதம் கூறுகிறது!

சவுலின் வாழ்க்கையையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் சரிவையும், அவன் கர்த்தர் ஈவாய்க் கொடுத்த சுத்த இருதயத்தை இழந்து அசுத்த ஆவியால் அலைக்களிக்கப் பட்டதையும் நன்கு அறிந்த தாவீது ராஜா, தான் பாவம் செய்ததை உணர்ந்தவுடன் தன்னுடைய பாவம் நிறைந்த இருதயத்தை மாற்றி சுத்த இருதயத்தைத் தன்னிலே சிருஷ்டிக்கும் படியும், நிலைவரமான ஆவியை புதுப்பிக்கும் படியும் கர்த்தரிடம் கெஞ்சினான் (சங்:51).

இன்று கர்த்தர் நமக்கு கிருபையாய் ஈந்திருக்கிற புதிய, பரிசுத்த வாழ்க்கையை நம்முடைய கீழ்ப்படியாமையினால் இழந்து போவோமானால், பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணும் இடத்தில் அசுத்த ஆவிகள் புகுந்து கொண்டு நம் வாழ்க்கையைத் தலைகீழாக்கி விடும் என்பதற்கு சவுலின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா?

1 சாமுவேல்: 9:21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.

ஒருமுறை கர்த்தருடைய ஊழியர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தில் 2 பக்கங்கள் அவர் வாங்கியிருந்த பட்டங்களையும், விருதுகளையும் பற்றி எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் இவர் என்ன வேலைக்கா விண்ணப்பித்திருக்கிறார் என்று நினைத்தேன்! ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் எவ்வளவு கவனமாக, விரிவாக நம்முடைய எல்லா திறமைகளையும் பற்றி எழுதுவோம்? ஒருவேளை இன்று நாம் கர்த்தருடைய வேலையை செய்விண்ணப்பிப்போமானால் எப்படிப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிபோம்? கர்த்தர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார்?

இஸ்ரவேலின் முதல் ராஜாவைத் தேந்தெடுக்கும் பணியில், மிகவும் சவுந்தரியமும், கம்பீரமும், எல்லோரையும் விட உயரமுமான சவுல் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்று பார்த்தோம். சாமுவேல் சவுலிடம் இந்த செய்தியைக் கூறியவுடனே சவுல் தன்னுடைய குடும்பம் மிக அற்பமானது என்று தான் இந்த உயர்ந்த பதவிக்குத் தகுதியற்றவன் என்பதை இன்றைய வேதாகமப் பகுதியில் வாசிக்கிறோம். சவுல் தான் மிகவும் சவுந்தரியமுள்ளவன் என்று அறிந்திருந்தாலும் அவன் குடும்ப பின்னணியினிமித்தம், தான் இந்த வேலைக்குத் தகுதியற்றவன் என்று நினைத்தான்.

சவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று கூறினான். பென்யமீன் கோத்திரத்தான் என்றால் அவனுக்கு என்னக் கேவலம்? இந்த பென்யமீன் கோத்திரத்தார் ஒரு லேவியனின் மனைவியை கற்பழித்து அவளைப் பிணமாக்கினர், இந்த அவமான செயலைக் கண்ட மற்ற கோத்திரத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து பென்யமீன் கோத்திரத்தாரைத் தாக்கி, ஒரே நாளில் 25000 ம் பேரைக் கொன்றனர் என்பது வேதத்தில் இடம் பெற்றிருக்கிற சரித்திரம்!

தன்னுடைய கோத்திரத்தின் பின்னணியினால் மற்றக் கோத்திரத்தார் தான் ராஜாவாவதை விரும்பமாட்டார்கள் என்று சவுல் நிச்சயமாக எண்ணினான். அவனுடைய கோத்திரத்தைப் போலவே அவனுடையக் குடும்பமும் மிகவும் அற்பமானது என்று சவுல் நினைத்தான்! நான் சவுலின் இடத்தில் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் நினைத்திருபேன்! 41 வருடங்களுக்கு முன்பு தம்முடைய பணிக்கு அழைத்த என் தேவனிடம் நான், என்னையாத் தேடுகிறீர் ஐயா, என்னிடம் என்னத் தகுதி இருக்கிறது? என்றுதான் நினைத்தேன்!

ஆனால் கர்த்தர் நம்முடைய குடும்பப் பின்னணியைப் பார்த்தோ, நம்முடைய நிறத்தைப் பார்த்தோ, ஜாதியைப் பார்த்தோ, தேசத்தைப் பார்த்தோ அல்லது செல்வாக்கைப் பார்த்தோ நம்மைத் தம் பணிக்குத் தெரிந்து கொள்வதில்லை! கர்த்தரை மகிமைப் படுத்தும் இருதயம் உள்ளவர்கள் தான் அவருடையப் பணியை செய்யத் தகுதியுள்ளவர்கள்!

இந்த உண்மை சாமுவேலுக்கு நன்குத் தெரியும்! தேவ ஆலயத்தில் ஆசாரியனாயிருந்த, வயதில் மூத்த ஏலியை விட்டுவிட்டு, சிறுவனானத் தம்மிடம் கர்த்தர் பேசியதும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகத் தம்மை அழைத்ததும் சாமுவேலுக்குத் தெரியாதா என்ன!

உங்கள் குடும்பப் பின்னணியையோ, செல்வாக்கையோப் பார்த்து ஒருவரும் நீங்கள் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தகுதியல்ல என்று சொல்ல முடியாது! கர்த்தர் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை! ஆயத்தமான இருதயம் உனக்கு உண்டானால் மற்றவை யாவையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்!

இன்று நீ ஆயத்தமா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!

1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வந்தது, எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் செய்த அற்புதம்,போன்ற கதைகளை ஆர்வமுடன் கேட்டது மட்டுமன்றி, பின்னர் அவைகளை வேதாகமத்திலிருந்து படித்தும் மகிழ்ந்தேன். இவைகள் தேவனுடைய பிள்ளைகள் சாதித்த அசாதாரண செயல்கள்! இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது! இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும்! ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு! யார் அப்படிப்பட்ட அற்புதமான காட்சியைத் தவற விடமுடியும்!

ஆனால் இன்றைய வேதாகமப் பகுதி, நான் என்றும் ஆழ்ந்து கவனம் செலுத்தாத ஒன்று. ஒரு அன்றாட வாழ்க்கையில், சாதாரணப் பெண்மணிகள் தண்ணீர் மொண்ட இடத்தில் என்னப் பெரிய காரியம் நடக்கும் என்ற எண்ணம்! நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்? நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் தேவனுடைய வல்லமையைப் பற்றி சிந்திக்க தருணம் கிடைக்கிறதா?

இந்தப் பெண்கள் தன்னுடைய வீட்டுக்கும், வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்கும் தேவையான தண்ணீர் மொண்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்றாட வேலைதான் அது, அதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அவற்றின் மத்தியில் அவர்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியான சாமுவேலைத் தேடி, சவுலும் அவன் நண்பரும் வந்த போது அவர்கள் சவுலையும் சாமுவேலையும் இணைக்கும் பாலமாக மாறினர்!
அவகளுடைய செயல் எவ்வளவு முக்கியமானதால் அது இன்று வேதாகமத்தில் இடம் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ வந்து ஞானதிருஷ்டிக்காரன் எங்கேயிருக்கிறார் என்று கேட்டதற்கு அவர்கள் வேலையின் மத்தியில் எங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்திருக்கலாம் அல்லவா? கர்த்தருடைய கிரியைகளுக்கு அவர்களுடைய இருதயமும், கண்களும் திறந்திருந்ததால் மட்டுமே அவர்கள் வேதத்தில் இடம் பிடித்தனர்!

கர்மேல் பர்வதத்தில் அக்கினி இறங்கியது போன்ற அற்புதத்தைத் தான் காண ஒருவேளை நமக்கு கிருபை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளின் மத்தியில், நாம் வேலை செய்யும் இடத்தில், ஒவ்வொருநாளும் கர்த்தரின் கிரியைகளைக் காண நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை நமது மிகக்கடின வேலையின் மத்தியிலும் உணர முடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 586 முக அழகா? அக அழகா?

1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.

இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தார்!

அநேகமாயிரம் பேர் கூடி எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கர்த்தர் இரங்கி, மிகவும் உயரமான, அழகான, கம்பீரமான, எல்லோர் பார்வையயும் கவரும் ஒரு வாலிபனை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதி, சவுலின் சவுந்தரியத்தைப் பற்றிப் பேசுகிறது. சவுலைப் பற்றி மட்டும் அல்ல, வேதாகமம் அவ்விதமாகவே தாவீதைப் பற்றியும், சாலோமோனைப் பற்றியும் கூறுகிறது! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம்! இஸ்ரவேல் மக்கள் அவர்களை ஆண்ட தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டவுடனே எல்லாமே மாறி விட்டது!
நீ யார்?, உன்னிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது?, நீ எவ்வளவு பலசாலி?, நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய்? இந்த வெளிப்புற அளவு கோல் ஒவ்வொரு மனிதனையும் அளக்க உபயோகப்படுத்தப் பட்டது.

இத்தனை சவுந்தரியவான் ராஜாவானவுடன் அவன் தேவனாகிய கர்த்தர் விரும்பியவிதம் நடந்து கொள்வான் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும்! ஆனால் அப்படியா நடந்தது? நாம் சவுலைப் பற்றிதான் தொடர்ந்து படிக்கப் போகிறோம்!
அவனுடைய வெளியரங்கமான சவுந்தரியம் பெண்களைக் கவர்ந்த வேளையில், அவனுடைய உட்புறம் அசுத்த ஆவியின் குடியிருப்பாக இருந்தது என்பது நாம் படிக்கும் போது தெரிய வரும்!

சவுலின் அழகிய வெளியரங்கம் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தது போல நாமும் எத்தனை முறை வெளிப்புறத்தைக் கண்டு ஏமாந்திருக்கிறோம்! பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்! ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை! அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை! பின்னர் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்?

இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தன்னுடைய சவுந்தரியத்தால் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தான் ஆனால் அவனுடைய அசுத்த ஆவி நிறைந்த இருதயத்தால் அவர்களை ஏமாற்றி விட்டான்!

மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும் அதின் நினைவுகளையும் பார்க்கிறார்! நீ எந்த அளவு கோலைக் கொண்டு அளந்து கொண்டிருக்கிறாய்?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 585 என் இஷ்டம் போல என் வாழ்க்கை!

1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு!

ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த முயற்சியையும் தான் நினைவு படுத்துகிறது!

இஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை! அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.

கர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.

சாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.
உங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
உங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
உங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.
உங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.
இவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)

ஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம்! நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அந்த வழியிலே செல்கிறோம்.

ஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது!

தங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று? தொடர்ந்து படிப்போம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 584 செத்த மீன் தான் எதிர் நீச்சல் அடிக்காது!

1 சாமுவேல் 8:4-5   அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,

இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.

சமீபத்தில் நான்  பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.

நாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே!
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்!

இந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற  செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.

அன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன்,  தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான். 

சாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த  நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.

அவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர்.  கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.

சரி, சரி!  இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்!கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளை என்ற உயர்ந்த  அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா?

உலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.

எங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது! உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று!  
இன்று உங்கள் நிலைமை என்ன?

கிறிஸ்துவுக்கு  சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும்!  நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!

1 சாமுவேல் 8: 6-7  எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள்.

சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத் தங்களை ஆளுகை செய்ய ஒரு ராஜாவை நியமிக்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலிடம் விண்ணப்பம் பண்ணினர் என்று பார்த்தோம்.

சாமுவேல் இதைக் கேட்டவுடன் மிகவும் துக்கித்தான். அவன் இருதயம் நொறுங்கியது. ஒருவேளை தானே இதற்குக் காரணம் என்று பழியைத் தன் மேலே போட்டுக் கொண்டு வருந்தியிருப்பான். பொருளாசைப் பிடித்த அவனுடைய பிள்ளைகளால்தானே இந்த நிலைமை வந்தது. தான் ஒரு நல்லத் தகப்பனாக இருந்திருந்தால் தன் பிள்ளைகள் இப்படி பணத்துக்குக்காக நியாயம் தீர்த்திருக்க மாட்டார்களே என்று துக்கித்திருப்பான்.

ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலை நிராகரித்து விட்டனர்.என்னக் கொடூரம் இது!  எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார்! அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே! இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா? அவரை எப்படி இந்த ஜனங்கள் நிராகரிக்க முடியும்??

எத்தனை தடவை நீங்களும் நானும் இந்த சூழ்நிலையைக் கடந்து செல்கிறோம்! நாம் ரத்தத்தையே வேர்வையாக்கி வளர்த்த நம் பிள்ளைகள் நம்மை நிராகரிக்கும் போது, நாம் வளர்த்து ஆளாக்கி விட்ட நம் தம்பி தங்கையர் நம்மை நிராகரிக்கும் போது,  நாம் உழைத்து பாடுபட்டு உருவாக்கிய திருச்சபை நம்மை நிராகரிக்கும்போது, நாம் பாடுபடும் நிர்வாகம் நம்மை நிராகரிகரிக்கும்போது, நமக்கு இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது அல்லவா?

இப்படிப்பட்ட சூழலுக்குள் நாம் செல்லும்போது நாம் அவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி தீர்த்து விடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சாமுவேல் என்ன செய்கிறார் பாருங்கள்! தன்னுடைய வேதனையைக் கர்த்தருடைய சமுகத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

தேவனுடைய சமுகத்தில் சாமுவேல் தன்னுடைய மன வேதனையை, தான் நிராகரிக்கப்பட்டதை கொட்டியவுடனே கர்த்தர் அவனை நோக்கி, சாமுவேலே எல்லாம் நீ செய்த தப்புதான், நீ பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தவறி விட்டாய், உன்னால் தான் இந்த நிலைமை வந்து விட்டது என்று அவனை வாட்டி வதக்கி விட்டாரா? இல்லவே இல்லை!  அதற்கு பதிலாக கர்த்தர் சாமுவேலை நோக்கி ஆதரவோடே, சாமுவேலே அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, என்னைத்தான் நிராகரித்து விட்டார்கள்! அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு! என்று கூறினார்.

கர்த்தராகிய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் காட்டும் தயவைப் பாருங்கள்! இந்த சமயத்தை உபயோகப்படுத்தி சாமுவேலின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனைக் காயப்படுத்தாமல், அவன் பாரங்களைத் தன் மேல் சுமத்தி, அவன் காயங்களைக் கட்டிய தேவனைப் பார்க்கிறோம்.

உற்றார் உறவினரால் நிராகரிக்கப் பட்ட வேதனை உனக்குள் உண்டா? நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா? நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா? சாமுவேலைப் போல உன் வேதனையைக் கர்த்தரிடம் கொண்டுசெல்!

உன் பாரத்தை அவர் சுமக்க வாஞ்சிக்கிறார். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத்தான் தள்ளினார்கள் என்று சாமுவேலின் பாரத்தை தன் தோளில் சுமந்த தேவனின் அன்புக் கரத்துக்குள் உன்னை ஒப்புவி!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்