Archive | February 2017

மலர் 7 இதழ்: 563 குற்றம் சாட்டும் விரல்!

1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.”

நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம்.

ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில் நம்மை வைத்துக் கொள்வோம். வேதனை மிகுதியால் நம் கண்களில் தாரை தாரையாக நீர் வடிய, வாயைத் திறந்து கர்த்தரிடம் முறையிட வார்த்தைகள் வராமல் தடைபட,உள்ளம் உடைந்து நொறுங்கிய வண்ணமாய் தலை தூக்க முடியாமல் தள்ளாடி நிற்கும் போது, நீ எவ்வளவு நேரம் இவ்வாறு குடிவெறியில் தள்ளாடிக்கொண்டிருப்பாய் என்று யாராவது நம்மிடம் கேட்டால் நமக்கு எப்படியிருக்கும்? இந்த சம்பவம் ஒருவேளை நாம் தேவனுடைய சமுகத்தில் இருந்தபோது நடந்தால், நம்மிடம் அந்த சபை போதகர் இப்படியானக் கேள்வியைக் கேட்டால் நாம் என்ன நினைப்போம்?

அன்னாளிடம் பேசி அவளுடைய நிலமையைத் தெரிந்து கொள்ளுமுன்னமே ஏலி அவள் மேல் குற்றச்சாட்டை எறிகிறான் என்று பார்க்கிறோம். இந்த நிலமையை யாராவது கடந்து வந்ததுண்டா? உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு இடம் கொடுக்காமலே உங்கள் மேல் பழி சுமத்தப்பட்டுள்ளதா?

வேதத்தில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு சம்பவம் உண்டு! அன்னாள் மேல் ஆசாரியனான ஏலி குற்றம் சுமத்தியதுபோலவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம், பரிசேயரும், வேதபாதகரும் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்தி அவள் விபசாரத்திலே கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்டாள் என்று குற்றம் சுமத்தினர் (யோவான் 8:3-5).

ஒரு நிமிஷம்! இந்த தேவ தூதரைப் போன்ற பாவமறியாத பரிசுத்த மனிதர் எந்த இடத்துக்கு போய் அவள் விபசாரம் பண்ணுவதைப் பார்த்து கையும் மெய்யுமாய்ப் பிடித்தார்களோ தெரியவில்லை? அதுமட்டுமல்ல! பிடிக்கப்படுதல் என்ற வார்த்தை கிரேக்க மொழியாக்கத்தில் பிடிக்கும்படியான ஆவல் என்ற அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. அப்படியானால் அவளைப் பிடிக்கவேண்டுமென்ற ஆவலில் அவர்கள் காத்திருந்து, அவளை மேற்கொண்டு, பிடித்துக் கொண்டு வந்து, அவள் மூலமாக இயேசுவின் மேல் குற்றம் கண்டு பிடிக்கும் படியாய் அவளைப் பகடைக்காயாய் உபயோகப் படுத்தினர் பார்கிறோம்.

இந்த இடத்தில் ஏலியின் செயலின் விளக்கமும் எனக்கு சற்று புரிகிறது. ஏலியின் குமாரரின் நடத்தையால் பல விரல்கள் அவன் மேல் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த வேளையில், இந்த அப்பாவிப் பெண்ணைப் பார்த்தவுடன் விரலை நீட்டி அவள்மேல் குற்றம் சுமத்தி தன் சூட்டை தணித்துக் கொண்டான் போலும்.

இன்றைய சமுதாயத்தில், ஒருவர் மற்றொருவருடைய தவறுதலை மைக் வைத்து கூச்சல் போட்டு உலகத்துக்கு அறிவிப்பதின் தன்னுடைய பாவத்தை மூடி மறைக்க முயற்சி செய்வதை நாம் காண்கிறோம்.

இன்று யாரையாவது நாம் தவறாக குற்றப்படுத்தி நம்முடைய விரல் நீட்டி பழி சுமத்தியிருக்கிறோமா? ஒருவர் மீதும் காரை ஏற்றிக் காயப்படுத்த விரும்பாத கிறிஸ்தவர்களான நாம் ஏன் நம்முடைய நாக்கால் மற்றவர்களத் தாக்குகிறோம்?

நாம் மற்றவர் மேல் நம்முடைய ஆள்காட்டி விரலை நீட்டி பழி சுமத்தும் முன், நம்முடைய மற்ற விரல்கள் அனைத்தும் நம்மையே சுட்டிக் காட்டுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்!

I சாமுவேல்: 1: 10   அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

ஏதோ ஒரு சம்பவத்தில் யாரோ ஒருவர்  சண்டையிடும் போது உபயோகப் படுத்தின வார்த்தைகளைப் பற்றி விளக்கிய ஒருவர் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று விளக்கியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகும் என்று நமக்குத் தெரியும்.

சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப் பட்ட நீண்ட பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று கூட நினைக்காமல் நாம் பேசிவிடுகிறோம். இது இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் ஒரு காரியம் தான். நாம் உணருமுன்னால் உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்ததைப் போன்ற நிரந்தர பாதிப்பை அது ஏற்படுத்தி விடும்.

யோவான் சுவிசேஷத்தில் கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கிறோம்.

அப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்:….

அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு: பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான்: 18:10,11)

அன்னாளின் வாழ்க்கையைப் பற்றி படிக்கும்போது, எப்படி இந்த சம்பவம் பொருந்தும் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்! 1 சாமுவேல்: 1: 6 ல் நாம் அன்னாளின் கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார் என்று பார்த்தோம். கர்த்தராகிய இயேசுவானவர் தம்முடைய பிதாவானவர் மேல் முழு நம்பிக்கையும் வைத்து பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றவிதமாக, அன்னாள் தன் கர்ப்பத்தை அடைத்திருந்த தன் தேவனாகிய கர்த்தரிடம் முழு நம்பிக்கையோடு தன்னை ஒப்புக்கொடுத்து ஜெபித்தாள் என்று பார்க்கிறோம்.

அன்னாள், தன்னை வார்த்தைகளால் குத்தி சிதறடித்த பெனின்னாளை கோபத்தால் திட்டி தீர்த்து விட்டு, இதற்குக் காரணமான கர்த்தரை இழிவு படுத்தாமல், இந்தப் பாத்திரத்தை தனக்குக் கொடுத்த பிதாவானவரிடம் தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

அன்னாளின் வாழ்க்கை அவள் தன் தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கைக்கு மட்டுமல்ல, தன் மேல் உப்புக் காகிதம் போல காயத்தை ஏற்படுத்திய பெண்ணை பதிலுக்குக் காயப்படுத்தாமல், அந்தத் துயரத்தை அவள் கர்த்தரிடம் முறையிட சென்றதையும் பார்க்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படும் நமக்கு இது ஒரு பெரிய பாடம் அல்லவா? நம்மிடம் கோபத்தோடு நடந்து கொள்ளுபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம்மைத் துன்பப் படுத்துபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

நம்மிடம் ஒருவர் உப்புக் காகிதத்தைப் போல உரசினால் பதிலுக்கு நாமும் உப்புக் காகிதத்தைப் போல உரசி நெருப்பை உண்டு பண்ணுவதில்லையா?

அன்னாளைப் போல தேவனை நம் வாழ்க்கையின் மூலம் மகிமைப் படுத்துவோம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 561 கண்ணீரே உணவான வாழ்க்கை!

1 சாமுவேல்: 1: 9,10  “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி  கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். 

அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் ! நேசித்து மணந்த அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்!

பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின் பாரபட்சம் அந்தக் குடும்பத்தை இரண்டாக்கியது! வார்த்தைகள் அம்பு போல ஊடுருவி சென்றன! அன்னாளின் வாழ்க்கையில் கண்ணீரே உணவானது!

நாட்களும், வருடங்களும் கழிந்த போது இவர்களுடைய மனதில் கசப்பு என்னும் கொடிய வேர் ஆழமாக இடம் பிடித்தது. நிறைவேறாத கனவுகளும், கணவனையும், இரண்டு பிள்ளைகளையும் இழந்த துக்கம் எவ்வாறு நகோமியின் வாழ்க்கையில் கசப்பாக மாறியதோ அவ்விதமாக அன்னாளின் மனதில், அவளுடைய மலட்டுத் தன்மையும் , பெனின்னாளின் கொடிய வார்த்தைகளும் கசப்பாக மாறியது.

இப்பொழுது சீலோவிலே தேவனைத் தொழுது கொள்ள வந்த இடத்தில் மனக்கசப்பு முற்றி விட்டது. நாம் கூட அப்படித்தானே! வீட்டுக்குள் என்ன நடந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு மற்றவர்கள் முன்பு புன்முறுவலுடன் வந்து விடுவோம். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்ற இடத்திலோ அல்லது உறவினர் முன்னாலோ யாரவது ஏதாவது சொல்லிவிட்டால் கண்ணீர் தாரை தாரையாக வந்து விடும் அல்லவா?

அன்னாளைப் போல வெளியே சொல்ல முடியாத வேதனையையும், மனக்கசப்பையும், ஈரம் வற்றாத கண்களையும் கொண்டவர்கள் நம்மில் அநேகர் இன்றும் உள்ளதால் தான் தேவனாகிய கர்த்தர், அன்னாளைப் போன்ற பெண்களின் வாழ்க்கையை வேதத்தில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அன்னாளைப் போல பெண்கள் மட்டுமல்ல தாவீதைப் போன்ற ஆண்களும் இவ்வித வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். அதனால் தான் தாவீது,

என் இருதயம் புல்லைப் போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தை புசிக்க மறந்தேன்

என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்கிறது. (சங்:102:3,4)

என்று எழுதுகிறான்.

இன்று உன்னுடைய வாழ்க்கையில் மனக்கசப்பு உள்ளதா? நீ விரும்பி கிடைக்காத ஒன்றினால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம்? அல்லது யாரோ ஒருவர் வார்த்தைகளை அம்பாக எய்வதால் ஏற்பட்ட மனக்கசப்பாக இருக்கலாம்! இருதயம் உலர்ந்து போய் பெருமூச்சாக வெளிப்படலாம்!

நல்ல வேளை அன்னாளின் வாழ்க்கையும், சங்கீதக்காரனின் வாழ்க்கையும் மனக்கசப்போடு முடிவடையவில்லை!

உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் என்று சொன்னேன். (சங்:102: 28) 

என்று, தான் உயர்ந்திருக்கும்போது மட்டுமல்ல, தாழ்ந்திருக்கும் போதும் கூட தேவனாகிய கர்த்தர் தன்னை பராமரித்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் தாவீது இந்த சங்கீதத்தை முடிக்கிறார்.

நீயும் சோர்ந்து போகாதே! உன் துக்கத்துக்கும் முடிவு உண்டு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 560 காயப்படுத்தும் வார்த்தைகள்!

1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள்.

இன்று காலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, ஒரு நல்ல குடும்பத்துக்கான  அஸ்திபாரம் போட நாம் எவ்வளவு கடினமாக பாடுபட வேண்டியிருந்தது என்று சிந்தித்தேன். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், நம்மிடம் உள்ளதை வைத்து, குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவது நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை!

இங்கே அன்னாள், பெனினாள் என்ற இரு பெண்களை மணந்த எல்க்கானாவின் குடும்பம் அஸ்திபாரமேயின்றி ஆடிக்கொண்டிருந்தது! யாருடைய தவறு அதற்குக் காரணம்?

ஒரு கணம் என்னோடே கூட  சிந்தித்து பாருங்கள்!  நாம்  மற்றொரு பெண்ணின் நிழலில் வாழ்வதை கற்பனை பண்ணிப்பார்க்க முடிகிறதா? ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல!  தினம் தினம், நம் குறைகளை முள்ளால் குத்துவது போல சுட்டிக்காட்டி , அதைப் பெரிது பண்ணி, கிண்டலும் கேலியும் பண்ணும் ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் வாழ்வது எப்படியிருக்கும்!

பெனினாளின் வார்த்தைகள் அன்னாளைக் காயப்படுத்தியது மட்டுமல்ல அவளைத் துக்கப்படுத்தியது என்று வேதம் கூறுகிறது. தினமும் அன்னாளுடைய மலட்டுத்தனத்தை அவள் உரத்த சத்தமாய்க் குத்திக்காட்டினாள். ஒரு ஆங்கில வேதாகம மொழி பெயர்ப்பு, பெனினாளுடைய வாய் அவளைப் புண்படுத்தியது என்று கூறுகிறது. எபிரேய மொழி பெயர்ப்பு , அவளுடைய வார்த்தைகள் அன்னாளை ஆழ்ந்த துக்கத்திலும் , சரீர வேதனையிலும் ஆழ்த்தியதாகக் கூறுகிறது! மனதில் வேதனை அதிகமாகும் போது நம்மால் சரியாக சாப்பிடக் கூட முடியாது அல்லவா? பட்டினியாக உடலை வருத்தும்போது உடல்நிலை பாதிக்கப் படும் என்பதும் நாம் அறிந்ததே! எல்க்கானா அன்னாளைப் பார்த்து, ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? என்று கேட்பதை நாம் 1:8 ல் பார்க்கிறோம். பெனினாளின் வார்த்தைகள் அவ்வளவு தூரம் அன்னாளைப் பாதித்தன.

நம்முடைய வார்த்தைக்கு உள்ள சக்தியை நாம் என்றுமே குறைவாக எடை போடக் கூடாது. நான் என்னுடன் கல்லூரியில் படித்த பெண்கள் அவர்களுடைய கண்களுக்குக் குறைவாய்ப் பட்ட மற்ற பெண்களை வார்த்தையால் குத்திக் கிழிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி வார்த்தைகளால் குத்தப் பட்ட ஒரு பெண், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி பண்ணி, உடல் நிலை பாதிக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். மனோதத்துவ நிபுணர்கள் இதனால் ஏற்படக்கூடிய பல நோய்களைப் பற்றி நமக்குக் கூற முடியும்!

பெனினாளுக்கு அன்னாளுடன் எந்த விரோதமும் இருக்கக் காரணம் இல்லை!  அவள் பிரச்னைக்குக் காரணம் அவள் கணவன் எல்க்கானா தான். ஒரே பெண்ணுடன் வாழாமல், இரு பெண்களை மணக்க முடிவெடுத்தது தான் இத்தனைக்கும் காரணம். பெனினாள் செய்ததும் தப்புதான்!  திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனை மணக்க முன் வந்த போதே அவள் வாழ்க்கை ஆனந்தமான மலர்த் தோட்டமாக இருக்காது என்று உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடையத் தவறையும், தன் கணவன் எல்க்கானாவின் தவறையும் உணராமல் இந்தப் பெண் அன்னாளை வருத்தப்படுத்தினாள் என்று பார்க்கிறோம்.!

சிம்சோனின் கையிலிருந்த கழுதையின் எலும்பு போல பெனினாளின் வார்த்தைகள் அன்னாளை உடைத்து சுக்கு நூறாக்கியது. அதனால் தான் சங்கீதக்காரன் இவ்விதமாக கூறினான் .

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.  [சங்:19:14] 

இன்று உன்னுடைய வார்த்தைகள் யாரையாவது குத்தி, உடைத்து, சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கின்றனவா? யாரைவாது உன் வார்த்தைகளால் துக்கப் படுத்தி, விசனப் படுத்திக் கொண்டிருக்காயா? யாரிடமாவது நீ பேசிய வார்த்தைகளுக்காக மன்னிப்பு வேண்ட வேண்டியிருக்கிறதா?

உன் வார்த்தைகளை சிம்சோனின் கையிலிருந்த கழுதையின் எலும்பு போலாக்கி விடாதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 559 கிறிஸ்துவின் அன்பு என்னும் உள்ளாழி!

1 சாமுவேல் 1: 4, 5  ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான்.

அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.”

என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில் ஏதாவது பிரச்சனையா என்று பார்க்க சொல்லியனுப்பினேன். காட்டிலும் மேட்டிலும் அசையாமல் ஏறும்படியாக அமைக்கப்பட்ட வண்டி அது. அப்படிப்பட்ட வண்டி கொஞ்ச காலமாக சிறிய பள்ளத்தில் இறங்கினாலும் வேகமாக ஆடுகிறது. என்னவாயிருக்கும்? என்று எண்ணினோம். வண்டி சர்வீஸிலிருந்து வந்த போது சஸ்பென்ஷனில் எந்த பிரச்சனையும் இல்லை, அதைத் தாங்கியிருக்கும் ஒரு சிறிய உள்ளாழி ( bush) தான் உடைந்திருக்கிறது என்று அதை மாற்றி அனுப்பினர்.  ஒரு சிறு உள்ளாழி உடைந்து விட்டதால் இத்தனை பெரிய வண்டியே ஆட்டம் கொள்கிறது!

அப்படித்தானே நம் குடும்பமும்!

நம் குடும்பத்தில் நடைபெறும் ஒரு சிறிய தவறு, உறவுக்குள் ஏற்படும் ஒரு சிறிய கீறல், நம் குடும்பத்தையே ஆட்டி விடுகிறது அல்லவா?

இன்று நாம் எல்க்கானாவின் குடும்பத்தின் உள்ளே சென்று பார்க்கலாம்!  நிம்மதி இழந்து ஆட்டம் கொண்டிருந்த அவனுடைய குடும்பத்தில் கீறல் விழுந்த புஷ் என்னவாயிருக்கும் என்று சற்று பார்க்கலாம்?

அன்னாளின் வாழ்க்கையைப் பற்றி நான் படித்த அநேக புத்தகங்கள் அவள் கணவன் அவளை மிகவும் நேசித்துதான் திருமணம் செய்தான் என்று கூறுகின்றன, ஆனால் திருமணம் ஆனவுடன் அவளுக்கு குழந்தைபிறக்காத மலட்டுத்தன்மையுடையவள் என்று தெரிந்தவுடனே, அவன் கர்ப்பத்தில் செழிமை உள்ள இன்னொருப் பெண்ணை மணந்து கொண்டான். கர்த்தர் நமக்கு அமைத்துக் கொடுத்த திருமண பந்தத்தில் குழந்தை இல்லாவிட்டால் இரண்டாவது மணம் செய்து கொள்ளலாம் என்று ஏதாவது ஏற்படுத்தினாரா?

எல்கானா மிகவும் விரும்பிய பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்ததால் பெனின்னாளுக்கு அவன் இதயத்தில் இடம் கிடைத்ததா? இல்லை!  தவறான நோக்கத்துக்குக்காக ஏற்படும் உறவில் அன்புக்கு இடம் இல்லை. எல்க்கானா தன்னை விட அன்னாளை மிகவும் நேசிக்கிறான் என்ற எண்ணம் அவள் மனதில் காயமாக அல்லவா அமைந்தது!

எல்க்கானா அன்னாளுக்கு தன்னுடைய அன்பை மட்டும் தாராளமாக வழங்க வில்லை, அவளுடைய உலகப்பிரகாரமான தேவைகளுக்கும் அவன் தாராளமாக வழங்கினான். பெனின்னாளையும், அவன் பிள்ளைகளையும் விட அன்னாளுக்கு இரட்டிப்பாக வழங்கினான்! எல்க்கானா காட்டிய இந்த பட்சபாதம் பெனின்னாளை உடைய செய்ததால், அவள் தன்னுடைய வெறுப்பை அன்னாள் மீது காட்டினாள். அந்தக் குடும்பமே ஆட்டம் கொள்ள ஆரம்பித்தது!

இன்று உன் குடும்பத்தை தாங்கும் உள்ளாழியில் கீறல் உள்ளதா? நாம் ஒரு பிள்ளையை விட மற்ற பிள்ளையை அதிகமாக நேசித்தால் கூட உள்ளாழியில் கீறல் விடுந்து விடும்! கர்த்தரின் சித்தத்தை விட்டு நம்முடைய சுயநலத்துக்குக்காக நாம் செய்யும் காரியங்கள், பட்சபாதமுள்ள அன்பு இவை நம் குடும்பத்தை ஆட செய்து விடும் ஜாக்கிரதை!

நம்முடைய குடும்பம் என்னும் வாகனத்தின் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்கள், காடு மலைகள் இவைகளைத் தாண்டும் போது ஆடாமல், குலுங்காமல் இருக்க வேண்டுமானால், அன்பு என்னும் உள்ளாழி கீறல் விழாமல் இருக்க வேண்டும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு நம் குடும்பத்தில் நிறைந்திருக்குமானால் தான் இது சாத்தியமாகும்!

 

உங்களின் பணியில்

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 558 ஒரு உதவாக்கரை வாழ்க்கையா?

1 சாமுவேல் 1: 2  பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

என்னுடைய வாழ்க்கையில் என்றாவது நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்கு இதை வாசித்தவுடன் வந்தது.

உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா?  யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.!

ஒருவேளை உங்கள் கணவர்  உங்களை கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப் பட்டு தூக்கி எறியப்பட்டு விட்டேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்திருக்கலாம்!

அல்லது சிறு வயதிலேயே யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டதால் உங்கள் அடிமனதில் நான் எதுவுக்குமே உதவாதவள் என்ற எண்ணம் ஆறாத புண்ணைப் போல இருக்கலாம்!

அப்படித்தான் அன்னாளும் தான் ஒரு உதவாக்கரை என்று தன்னைப்பற்றி நினைத்தாள். அன்னாள் வாழ்ந்த சமயத்தில் பிள்ளை பேறு என்பது கடவுளுடைய ஆசீர்வாதம் என்ற எண்ணம் மட்டுமல்ல, பிள்ளை பெறாதவள் கடவுளால் சபிக்கப்பட்டவள் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இருந்தது.

அன்னாளுடைய மலட்டுத்தன்மை அவள் தன்னைத்தானே வெறுக்க செய்தது. அவள் குடும்பத்தார் அவளை வெறுமையாகப் பார்த்தனர், சமுதாயத்தினர் அவளை கடவுளால் சபிக்கப்பட்டவளாய்ப் பார்த்தனர். அவளுடைய சபையின் போதகர் கூட அவளை போதையில் இருப்பவள் என்று சிறுமையாய் எண்ணினார்.

அப்படிப்பட்ட பயனற்ற தன்மையில் வாழ்ந்து கொண்டிருந்த அன்னாளை கர்த்தர் ஒரு பயனுள்ள தாயாக மாற்றினார். அன்னாளின் வாழ்க்கையை நான் இந்த மலர் எழுதுவதற்காக படித்தபோது அவளும் என் கண்களுக்கு ஒரு வேதாகமத்தின் கதாநாயகி போலத்தான் தோன்றினாள்.

அன்னாளைப் பற்றி இன்னும் ஓரிரு நாட்கள் படிக்கும் போது, தயவுசெய்து உங்களுடைய வாழ்க்கையில் பயனற்ற தன்மை என்று நீங்கள் நினைக்கும் இடத்தை சற்று கூர்ந்து பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதை நினைத்துப் பார்க்கவே அஞ்சும் ஒரு இடமாக, சம்பவமாக, காயமாக இருக்கலாம். பயனற்ற வெறுமையான அந்த வாழ்க்கையை மாற்றி அன்னாளைப் போல பயனுள்ள வாழ்க்கையாக உங்களை  மாற்றக் கர்த்தரால் கூடும்.

அன்னாளைப் போல நாம் வெறுமையாய் இருக்கும் போது தான் கர்த்தர் நம்மை நிரப்ப முடியும் என்று நாம் அறிந்து கொள்வோம்.

ஒன்றுக்கும் உதவாக்கரை என்ற கறையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? கர்த்தரிடம் வாருங்கள் உங்களை அன்னாளைப் போல ஆசீர்வாதமாக்குவார்.

நாம் தொடர்ந்து  அன்னாளின் வாழ்க்கையைப் படிக்கும்போது தயவு செய்து உங்கள் நண்பர்களையும் இந்தத் தோட்டத்துக்கு அழைத்து வாருங்கள். அன்னாளின் வாழ்வில் அற்புதத்தை செய்த தேவன் உங்கள் வாழ்விலும் அற்புதங்களை செய்வார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை!

1 சாமுவேல்: 1: 2  அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர்  பெனின்னாள்.

தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு.

நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம். பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணிரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும்.

இங்கு தான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில் அந்தக் குடும்பத்தில் நடைபெறவில்லை.

கிருபையும் இரக்கமும் பெற்றவள் என்ற பேர் கொண்ட அன்னாள் அங்கு கணவனின் அன்பை சற்று அதிகமாகப் பெற்றிருந்தாள். ஆனால் அவள் அதிகமாக ஆசைப்பட்ட குழந்தை பாக்கியம் இல்லாதது அவளுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்தது.

அந்தக் குடும்பத்தில் இருந்த அடுத்த பெண்ணான பெனின்னாள் அவளுடைய பெயரின் செழிப்பு அர்த்தத்துக்கு ஏற்ப குழந்தை செல்வத்தில் செழித்திருந்தாள். ஆனால் அவள் மிகவும் விரும்பிய தன் கணவனின் அன்பு அவளுக்கு அதிகம் கிடைக்கவில்லை.

நம் கண்களுக்கு அக்கரையில் பச்சையாகத் தெரிபவை பச்சையாகத்தான்  இருக்கும் என்று நிச்சயம் இல்லை. அக்கரையில் போய்ப் பார்க்கும்போது தான் அங்குள்ள குறைகள் யாவும் தெரியும். நாம் பச்சை என்று ஏக்கத்தோடு எண்ணும் யாவும் அங்கே இருக்கலாம் ஆனால் அவை அவர்களின் மனக்குறையை நிவிர்த்தி பண்ணவில்லை என்று நமக்கு அங்கே சென்றால் தான் தெரியும்.

நம்மை சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் படுவதால் என்ன நேரிடும் என்று நாம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து படிக்கப்போகிறோம். அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க , அல்லது அவர்களுடைய திருமண வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமா இருக்கு,  அவங்க வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையை விட எவ்வளவோ உயர்ந்திருக்கு என்றெல்லாம் நாம் மற்றவர்களைப் பார்த்து எண்ணுகிறோம். ஆனால் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் பல எதிர்நீச்சல் உள்ளன, சவால்கள் உள்ளன!

நாம் அன்னாளைப் போல கிருபையும் இரக்கமும் பெற்றவர்களாக இருக்கலாம், அல்லது பெனினாளைப் போல செழிப்பு உள்ளவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் நாம் ஒருநாள் நம் வாழ்க்கையில் உள்ள வெறுமையையும் , குறைகளையும் பார்ப்போம்.

பழைய துணிகளை அரிக்கும் பூச்சியைப் பார்த்திருக்கிறிர்களா? அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாது ஆனால் துணியில் வட்ட வட்டமாக ஓட்டை போட்டு விடும் அப்படித்தான் பொறாமை என்பதும்.

போதும் என்கிற மனதுடன் நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை திருப்தியாக வாழக் கற்றுக்கொள்வோம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்