கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 616 சாட்சி சொல்லவே வேண்டாம்!

1 சாமுவேல் 18:15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

தாவீதின் வாழ்க்கையில் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்ததையும் அவன் புத்திமானாய் நடந்து கொள்வதையும் சவுல் கண்டு அவனுக்கு பயந்தான் என்று இன்றைய வசனம் சொல்கிறது.

தாவீது செய்த எல்லா காரியங்களிலும் பரலோக தேவன் அளித்த ஞானம் புலப்பட்டது. அவனுடைய வாழ்க்கையின் மூலம் கர்த்தருடைய மகிமை வெளிப்பட்டது.  ஒருவேளை தாவீதின் முகத்தைப் பார்க்ககூட பயந்தானோ என்னவோ அதனால் சவுல் அவனைத் தொட பயந்து என் கையல்ல பெலிஸ்தரின் கையே அவன் மேல் விழட்டும் ( 18:17) என்று நினைத்தான்.

இதை நான் படிக்கும்போது என் நினைவுக்கு வந்தது யாத்திராகமம் 34:29 தான்.  மோசே சாட்சிப் பலகைகளை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து இறங்கும்போது அவன் முகம் பிரகாசித்தது. ஜனங்கள் அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஏனெனில் அவர்களுக்கு மோசே கர்த்தரிடத்திலிருந்து வந்தது தெரியும்.

தாவீது வனாந்தர வெளியில் தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்தபோது அவன் ஒவ்வொருநாளும் தேவனாகியக் கர்த்தரிடம் பேசி உறவாடியதால் கர்த்தருடைய மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்தது போல தாவீதின் முகத்திலும் காணப்பட்டதோ என்னவோ அவனைக் காணவே சவுல் பயந்தான்.

மோசேயாகட்டும், தாவீதாகட்டும் அவர்கள் மகா பெரிய புருஷர் என்று ஜனங்கள் அவர்களைக் கண்டு பயப்படவில்லை. அவர்களோடு இருந்தவர் மகா பெரியவர் என்று கண்டு பயந்தனர். அன்று மோசேயோ அல்லது தாவீதோ யாரிடமும் தன்னுடைய சாட்சியைப் பகரவோ அல்லது கர்த்தர் என்னோடிருக்கிறார் என்று சொல்லவோ தேவையேயில்லை.  அவர்கள் முகமே கர்த்தர் அவர்களோடிருந்ததை ஜனங்களுக்கு காட்டியது.

நம்முடைய வாழ்க்கை எப்படி?

நான் கிறிஸ்தவன், நான் கிறிஸ்தவன் என்று  சொல்லிக்கொண்டு நம் வாழ்க்கையில் நம்முடைய மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ துரோகம் செய்வோமானால் என்ன பிரயோஜனம்?

நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு உண்மை பேச வேண்டிய வேளையில் பொய் பேசுவோமானால் என்னதான் பிரயோஜனம்?

உன்னுடைய வாழ்க்கையில் இயேசுக் கிறிஸ்துவின் அழகை பிரதிபலிக்க முடியுமானால் நீ யாரையும் கூவியழைத்து சாட்சி சொல்லவேண்டாம்!  அவர்களே உன்னில் கிறிஸ்துவைக் காண்பார்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment