கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 646 ஆலோசனை மென்மையான பனியைப் போன்றது!

1 சாமுவேல் 25:33  நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும்….. நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக!

நமக்கு யாராவது யோசனை சொன்னால் நாம் எப்பொழுதும் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதுண்டா என்று இன்றைய வசனம் என்னை சிந்திக்க வைத்தது.

நண்பர்களுக்கு இடையிலாகட்டும், உறவினருக்காகட்டும் ஆலோசனை சொல்வது என்பது ஒரு கடினமான காரியம். அவர்களே யோசித்து நல்ல முடிவு எடுக்கட்டும் நாம் தலையிடக் கூடாது என்றுதான் நினைப்போம்.

கணவன் மனைவிக்குள்ளும், நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மோதல் வரும் அல்லவா?

இந்த மோதல் அபிகாயிலுக்கும் தாவீதுக்கும் வந்திருக்க வாய்ப்பு இருந்தது அல்லவா? இடுப்பில் பட்டயத்தை சொருகியிருந்த தாவீதுக்கு  அபிகாயில் ஒரு சொற்பொழிவே ஆற்றிவிட்டாள்.

அவனுடைய பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறினாள். அவனுடைய கோபத்தைத் தணிக்கும்படி யோசனை கூறினாள். நாபால் என்பவன் ஒரு முட்டாள் என்பதை மறந்து விடவேண்டாம் என்று அறிவுரைத்தாள். அவள் பேச்சு முழுவதும் தாவீதுக்கு அவள் கொடுத்த ஆலோசனைதான்! ஆனால் அவளுக்கு தாவீது யார் என்று இதுவரைத் தெரியாது! அவர்கள் இருவரும் இதற்குமுன் சந்தித்ததாக வேதம் கூறவேயில்லை. ஆதலால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாயிருக்க வாய்ப்பேயில்லை.

இதுதான் இந்தக் கதையின் சுவாரஸ்யமான பகுதி. தனக்கு ஆலோசனைக் கொடுக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து, நீ என்ன எனக்கு ஆலோசனைக் கொடுப்பது! வழிவிடு நான் என் வழியே போகிறேன்! நாபாலுக்கு நான் யார் என்று காண்பிக்கிறேன் என்று தாவீது சொல்லாமல் அவளுடைய ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.

ஒருவருக்கு ஆலோசனைக் கொடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல! இங்கு அபிகாயில் தாவீதிடம் நடந்து கொண்ட விதமும், தாவீதை சிறிது கூட மட்டம் தட்டாமல் பேசியதும், கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்தாததும், மற்றவருக்கு ஆலோசனைக் கொடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது!

தாவீது அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி, மூச்சை இழுத்து விட்டு, அவளுடைய வார்த்தையிலுள்ள ஞானத்தைப் புரிந்துகொண்டு, அவளுடைய ஆலோசனையை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் இருவருக்குள்ளும் மரியாதைதான் உருவாகியதே தவிர வெறுப்பு இல்லை!

ஆலோசனையைக் கொடுக்கத் துடிக்கும் உனக்கும், ஆலோசனையை ஏற்க மறுக்கும் உனக்கும், இவர்கள் இருவரும் பெரியதொரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள் அல்லவா!

ஒருவரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு ஆலோசனையைக் கொடுப்பவரை விட ஞானம் வேண்டும்!

நம்மேல் பனி பெய்வதைப் பார்த்திருக்கிறீகளா? அது விழுவதே தெரியாது. அவ்வளவு மென்மையாக இருக்கும். நம்மேல் விழுந்த பனி அப்படியே நம்மில் கரைந்துவிடும்! அப்படிப்பட்டதுதான் நல்ல ஆலோசனையும்! நீ கொடுக்கும் ஆலோசனை ஒருவன் தலையில் விழும் கல்லைப்போல இருக்கக்கூடாது! அபிகாயில் தாவீதுக்கு கொடுத்த ஆலோசனையைப்போல, பனியைப்போல மென்மையாக இருக்க வேண்டும்!

இந்த உலகத்தில் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசை யாருமே கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசுதான் நமக்குக் கிடைத்திருக்கிற வேதப்புத்தகம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment