கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!

2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்.

நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு எழுதுவதற்கு படிப்பதைப்போல என்றும் படித்ததில்லை. அதனால்தானோ என்னவோ இன்றைய வேதாகமப் பகுதி அமைந்துள்ள 2 சாமுவேல் 3 ம் அதிகாரத்தை 5 நாட்கள் படித்தேன்.

இன்றைய வசனங்களை நாம் சாதாரணமாக கடந்து போக முடியும். ஆனால் இது தாவீதின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை நமக்குக் காட்டுகிறது.

இங்கு அப்னேர் சவுலின் குமாரனாகிய இச்போசேத்துக்கு எதிராக எழும்பி தாவீது பக்கம் நிற்பதாக செய்தி அனுப்புகிறான். நானாக இருந்தால் அப்னேர் மாதிரி ஒரு எதிரியுடன் கை கோர்க்க பயந்திருப்பேன். ஆனால் தாவீது அவனை மிரட்டுகிற மாதிரி ஒரு காரியத்தைக் கேட்கிறான்.

சவுலின் குமாரத்தியாகிய மீகாளை அழைத்து வர சொல்லுகிறான். தாவீது மீகாளை மறக்கவே இல்லை. சவுல் அவளை இன்னொருவனுக்குக் கொடுத்தபின்னரும் தாவீதால் அவளை மறக்கவே முடியவில்லை. அதனால் தாவீது அப்னேரை மிரட்டி  மீகாளை திரும்பக் கேட்பதைப் பார்க்கிறோம்.

நம்முடைய உலகத்தில் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறது இதுதானே! எனக்கு வேண்டியதை நான் மிரட்டியாவது பெற்றுக்கொள்வேன் என்பது! என்னுடைய வாழ்க்கையில் நான் என்றுமே இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஒரு குணம் இந்த மிரட்டி காரியத்தை சாதிக்கும் குணம்தான்!

நாம் எத்தனைமுறை தாவீதைப் போல நடந்து கொள்கிறோம். நம்முடைய குடும்பத்தையோ அல்லது மற்றவரையோ மிரட்டி, பயமுறுத்தி எத்தனை காரியங்களை சாதித்துக் கொள்கிறோம்.

தாவீது அப்னேரை மிரட்டி மீகாளைக் கேட்காமலிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! இன்னொருவனுக்கு மனைவியான அவளை அப்படியே விட்டிருக்கலாமல்லவா? கர்த்தருடைய இருதயத்திற்கேற்றவனாய் கருதப்பட்ட அவன் பின்னர் பத்சேபாளுடன்  நடந்த பாவம் தற்செயலாய் நடந்ததா? இல்லவே இல்லை! இந்த எப்ரோனில் விதைத்த விதை தாவீதின் நகரத்தில் கனிகொடுத்தது.

இதை நினைத்துதான் சங்கீதக்காரன் இப்படி எழுதினான் போலும்

என் இருதயம் பொருளாசையை சாராமல் உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையை பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்  ( சங் 119:36,37)

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment