கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!

2 சாமுவேல் 3:14    ….  நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். 

தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு மனைவிகளும், அநேக பிள்ளைகளும் இருந்தாலும், அவனுக்கு இன்னொருத்தி தேவைப்பட்டாள்!

அப்னேருக்கும், இஸ்போசேத்துக்கும் இடையிலான மன வருத்தத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்தி, இச்போசேத்திடம் அவன் சகோதரியான மீகாளை அனுப்பி விடும்படி செய்தியனுப்ப சொன்னான்.

மீகாள் இன்னொருவனின் மனைவியென்பது அவனுக்கு பெரிதாகப் படவில்லை! மீகாள் தனக்கு வேண்டும்! அவ்வளவுதான்!

இதை வாசிக்கும்போது, என்னை திருப்தி படுத்த நான் எத்தனை முறை மற்றவர்களுடையத் தேவையை மறுதலித்திருக்கிறேன் என்று யோசித்தேன்.

நிச்சயமாக சொல்கிறேன்! நாம் ஒவ்வொருவருக்குள் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் புதைந்திருக்கும். நம்மை உயர்த்த, நமக்கு பிடித்ததை அடைய, நாம் யாரையாவது உபயோகப்படுத்தியிருக்கிறோமா? தாவீதைப் பொறுத்தவரை அவனுக்கு இருந்த பெரிய குடும்பம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுக்கு மீகாள் தேவை! அவளை அடைந்தே ஆக வேண்டும்! அதற்காக யாரை வேண்டுமானாலும் பணயம் வைக்கலாம்.

இதனால் மீகாளின் குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தால் என்ன? அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி அவளை அழைத்து வர சொல்கிறான். அவனுடைய ஆறு மனைவிகளோடு ( நமக்குத் தெரிந்தது) திருப்தியாக இருந்திருந்தால் மீகாளுடைய குடும்பம் கஷ்டப்பட்டிருக்காது அல்லவா!  தாவீதுக்கு மேலும் மேலும் அடைய ஆசை! இந்த ஆசைதான் ஒருநாள் கட்டுக்கடங்காமல் அவனை பத்சேபாளிடம் பாவம் செய்யும்படி தள்ளியது.

எப்படியாவது உன் ஆசையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களை அலட்சியப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?  அது தாவீதைப்போல பெரிய பாவத்தில் தான் போய் முடிவடையும்! சிந்தித்து செயல் படு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment