கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல!

2 சாமுவேல் 3: 26,27  யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய்  தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

இன்றைய வசனங்களை என்ன வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை.

முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன். எத்தனையோ யுத்ததங்களையும், எத்தனையோ இரத்தவெள்ளத்தையும் கண்டவன். சவுலின் குமாரன் இஸ்போசேத்துடன் வந்த மன வருத்தத்தால் அவன் தாவீதின் பக்கம் சேர்ந்து அவனுக்காக வேலை செய்தான். இந்த சந்தோஷமான  விஷயத்தை தாவீதோடு பகிர்ந்துகொண்டு மன மகிழ்வோடு திரும்புகையில் அவனுடைய உள்ளத்தில் அமைதி  இருந்தது.

ஆனால் இந்த செய்தியைக் கேள்விப்பட்ட  தாவீதின் சகோதரியின் மகனும், தாவீதின் படைத்தலைவனுமாகிய யோவாப், தாவீதுக்கும் அப்னேருக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தில் சற்றும் விருப்பம் காட்டவில்லை. அவன் தாவீதிடம் போய் ஏன் இப்படி செய்தீர் அந்த அப்னேர் உம்மை மோசம் பண்ணி விடுவான் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம்.

உண்மையில் பார்த்தால் யோவாபுக்கும் அப்னேருக்கும் இடையில் ஒரு கசப்பான சரித்திரம் இருந்தது.  யோவாபின் சகோதரனை அப்னேர் கொன்றுவிட்டான். அதை யோவாப் ஒருநாளும் மறந்ததே இல்லை. இப்பொழுது பழிவாங்க ஒரு நல்ல தருணம் கிடைத்து விட்டது.

யோவாப் தாவீதுக்கு தெரியாமல் அப்னேரை அழைத்து வரும்படி தூதுவரை அனுப்புகிறான். திரும்பிவந்த அப்னேரிடம் நல்ல வார்த்தைகளைப் பேசி அவனைத் தனியே அழைத்துசென்று அவன் வயிற்றிலே குத்தி கொலை செய்கிறான். வேதம் தெளிவாக சொல்கிறது,  தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான் என்று.  ஆனால் என்ன நடந்தது? அவன் தம்பி ஆசகேல் உயிரோடு வந்து விட்டானா என்ன?  இந்த சம்பவம் தாவீதுக்கு யோவாப் மீது கடும் கோபத்தைதான் வர வைத்தது.

கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது எவ்வளவு உண்மை!  அப்னேர் யோவாபின் சகோதரனைக் கொன்றான்! யோவாப் அப்னேரை கொன்றான்! நீ எனக்கு எதை செய்தாயோ அதை உனக்கு நான் செய்வேன்!

இது பழைய ஏற்பாட்டில் மட்டும் நடந்த ஒன்றா என்ன ? இன்றும் இப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது.

யாரையாவது பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறாயா? என்னை எப்படி ஏமாற்றலாம், நான் அவர்களை ஏமாற்றுவேன் என்ற எண்ணம்! எனக்கு என்ன நடந்ததோ அது அவர்களுக்கும் நடக்க வேண்டும் என்ற எண்ணம்! என் தலையில் கரியைப் கொட்டினார்கள்  அவர்கள் தலையில் நெருப்பைக் கொட்டுவேன் என்ர எண்ணம்!

பழிவாங்குதல் என்ற ஆயுதம் இந்த உலகிலேயே மிகக்கொடிய ஆயுதம்! அதை கையில் எடுக்காதே! அது உனக்குரியது அல்ல என்று கர்த்தர் சொல்லும் சத்தத்தைக் கேள்!

கூடுமானால் உங்களானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

( ரோமர் 12:18,19)

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment