கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே

2 சாமுவேல் 11: 4  அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்.

 

கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக் கொள்ளும் பறவைதான் இது.

எங்கேயோ கேள்விப்பட்டது போல இல்லை! ஆமாம்! தாவீது பத்சேபாளை அழைத்து வர ஆள் அனுப்பியது இந்தக் கதை போலத்தான் உள்ளது. இந்த அழைத்து வர என்ற வார்த்தையை எபிரேய மொழியில் பார்த்தேன். அதன் அர்த்தம் தாவீதின் செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

லாவ்காஹ் என்ற இந்த வார்த்தை , வாங்குவதற்கு, பறித்துக் கொள்வதற்கு, உபயோகப்படுத்த, என்ற பல அர்த்தங்களைக் கொண்டது. இப்பொழுது இந்த அர்த்தங்களை தாவீதின் செயலோடு இணைத்துப் பாருங்கள்.

பத்சேபாள் ஒரு பொருளைப் போல தாவீது அவளைத் தனக்கு சொந்தமாக்க ஆசைப்படுகிறான். தாவீது ஆள் அனுப்பியபோது பத்சேபாள் அதை ஒரு சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அவளுடைய கணவன் தாவீதின் ராணுவத்தில் ஒரு நம்பகமான பராக்கிரமசாலி. அவளுடைய குடும்பம் தாவீதுக்கு ஊழியம் செய்தனர்.  நிச்சயமாக தாவீதின் ஆட்களைப்பார்த்து அவளுக்கு ஒன்றும் சிவப்பு கொடி கண்ணில் படவில்லை!

திருடு அல்லது களவு என்ற வார்த்தையைப் பற்றி கிறிஸ்தவ புத்தகங்கள் அதிக போதனை கொடுக்கவில்லை, ஆனால் வேதம் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  யாத்திராகமம் 20:15  களவு செய்யாதிருப்பாயாக என்பது தேவனுடைய கட்டளை. பணக்காரர்கள் ஏழைகளைத் திருடுவது நாம் சகஜமாக பார்க்கும் ஒன்று.  நாம் எத்தனை முறை நம்மைவிட குறைவானவர்களை எப்படி பார்க்கிறோம். பெலவீனரை ஒடுக்கக்கூடாது என்று வேதம் நமக்குத் தெளிவாக கூறுகிறது.

தாவீது பத்சேபாளை அழைத்துவர ஆள் அனுப்பிய போது அவன் சுலபமாய் அவளை அடைய முடிவு செய்தான். இது களவு செய்வதற்கு சமம் தானே!

உனக்கு சொந்தமில்லாத ஒன்றை அடைய விரும்புகிறாயா?  நாம் படிக்கும் தாவீதின் வாழ்க்கை உன்னுடைய வாழ்க்கையைப் போல உள்ளதா? மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் கவுதாரியைப் போல மற்றவருக்கு உரிமையானதை நீ பறித்துக் கொள்ள முயலுகின்றாயா? மனந்திரும்பு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment