Archive | August 2019

இதழ் :738 அழிந்து போகும் ஆஸ்தி ஒரு தடையாகிறதா?

2 சாமுவேல் 12: 2   ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

சென்னையில் வெள்ளம் வந்தபோது தன்னுடைய இரண்டு மாடி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும், இரண்டு கார்களையும் இழந்த ஒரு தம்பதியர் நாங்கள் ஒருவரையொருவர் இழக்கவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொன்னது என் நினைவை விட்டு விலகவில்லை!

இன்றைய வேதாகம வசனம் ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்த ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது. இவன் வெறும் ஆடுகளை மாத்திரம் வைத்திருந்ததாகவோ அல்லது மாடுகளை வளர்த்தவனாகவோ அல்ல ஆடுகளும்,மாடுகளும்  வெகு திரளாய் வைத்திருந்ததாக வேதம் கூறுகிறது. அளவுக்கு மீறிய ஆஸ்தி உள்ளவனாக இருந்திருக்க வேண்டும்.

எல்லாமே அளவுக்கு அதிகமாக இருந்த இந்த ஐசுவரியவானிடத்தில் குணம் மட்டும் மிகவும் குறைவாக இருந்தது. நற்குணம் இல்லாதவனிடத்தில் உள்ள ஆஸ்தி நிச்சயமாக அழிவுக்குள் நடத்தும் என்பது உண்மை அல்லவா?

லூக்கா 18:18-25 ல் கர்த்தராகிய இயேசுவிடம் வந்த ஒரு பண்க்கார வாலிபனைப்பற்றி படிக்கிறோம். அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள ஆவல் இருந்தது. அவன் எல்லா கற்பனைகளையும் தவறாமல் பின்பற்றுவதாக இயேசு கிறிஸ்துவிடம் கூறினான்.  ஆனால் கர்த்தராகிய இயேசுவோ நீ உன்னுடைய எல்லா ஆஸ்தியையும் விற்று தரித்திரருக்கு கொடு, பின்பு என்னை பின்பற்றி வா என்று சொன்னபோது அவனுடைய முகம் சுருங்கி போய்விட்டது!

ஏனெனில் அவன் ஒரு பெரிய  ஐசுவரியவான். ஒருவேளை அவனுடைய அழகான மாளிகைகளோ, அல்லது ஆடுகளோ, மாடுகளோ, நிலங்களோ, வயற்காடுகளோ அல்லது விலையுயர்ந்த பொன் வெள்ளியோ ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது! திணறிப்போய் விட்டான். பரலோகமா? பூலோகமா? தேவனாகியக் கர்த்தரைப் பின்பற்ற இந்த பூமியில் அவனுக்கு இருந்த சொத்து சுகம் ஒரு தடையாயிருந்தது.

இன்று ‘ என்னைப் பின்பற்றிவா’ என்ற கர்த்தரின் சத்தம் உன் காதுகளில் விழுகிறதா? அவரைப் பின்பற்ற என்ன தடையாயிருக்கிறது? உன்னுடைய வேலையா? உன்னுடைய ஆஸ்தியா?  நீ சேர்த்து வைத்திருக்கும் பணமா?இவை உன் வாழ்க்கையை அடிமைப்படுத்தி இருக்கின்றனவா? இவை உனக்கு திருப்தி அளிக்கின்றனவா? இவை ஒருநாள் அழிந்து போகும் என்பதை உணர்வாயா?

கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடு!  அழிந்து போகும் செல்வத்துக்காக அழியாத நித்திய வாழ்வை இழந்து விடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 737 நீ ஏழையா? அல்லது பணக்காரனா?

2 சாமுவேல் 12: 1   … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே சொல்லப்பட்டது என்று புரிந்தது!

நாம் முன்னரே பார்த்தவிதமாய் நாத்தான் தாவீதின் குடும்பத்திற்கு மிகவும் தெரிந்த ஒருவன் தான். தேவனுடைய செய்தியை தாவீதுக்கு எடுத்துரைத்த அரண்மனை தீர்க்கதரிசி.

நாம் சற்று நினைவு படுத்திக் கொள்ளலாமே! பத்சேபாள் 7 நாட்கள் தன் புருஷனுக்காக அழுது தீர்த்தபின், தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து தன்னுடைய மனைவிமாரில் ஒருத்தியாக சேர்த்துக்கொண்டான். எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய சதி வேலையிலிருந்து அப்பாடா என்று தப்பித்ததாக தாவீது பெருமூச்சு விட்டான். என்னன்னா! தாவீதின் தளபதியான யோவாப் எதையும் மூச்சு விடக்கூடாது! பத்சேபாளை முதல் நாள் அரண்மனைக்கு அழைத்து வந்து பின்னர் கொண்டுபோய்விட்ட வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது! பத்சேபாள் தான் கர்ப்பவதியாக இருப்பதை சொல்லியனுப்பினாளே அந்த வேலைக்காரர் மூச்சு விடக்கூடாது!  அப்படி இருந்துவிட்டால் தாவீதுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை!  கிசுகிசுப்பு காற்றை விட வேகமாக பயணம் செய்யும் என்பதால் இத்தனை பேரும் அந்த இரகசியத்தை பத்திரமாகப் பூட்டி வைப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை!  நிச்சயமாக ஒரு கிசுகிசுப்பு அரண்மனையை சுற்றிக் காற்றில் பரவிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் நாத்தான் தாவீதின் அரண்மனைக்குள் வந்தபோது தாவீது எந்தக் குற்றமுமே அறியாத ஒரு அப்பாவிப்போலத்தான் நடந்து கொண்டான்.

நாத்தான் தாவீதின் சமுகத்தில் தேவ செய்தியோடு நின்றதை சற்று யோசித்துப் பார்த்தேன். எவ்வளவு தைரியசாலியாயிருந்திருப்பான் அவன். சாதாரண வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஏழை, பணக்காரன் கதையை அவன் தாவீதிடம் ஆரம்பிக்கிறான். அவன் கதையில் ஒரு நல்லவன் கெட்டவன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தவில்லை. ஏழை பணக்காரன் என்ற வார்த்தை தாவீதுக்கு நன்கு புரியும். அவன் ஏழ்மையை நன்கு உணர்ந்தவன். சவுலால் ஒரு பறவையைப் போல விரட்டப்பட்டபோது மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன். பசியும், தாகமும் அவன் நன்றாக அறிந்த ஒன்றே!  பின்னர் இந்த ஏழை, எருசலேமின் அரண்மனையில் ராஜாவானான். அவன் கண்களால் பார்த்த எதையும் அவன் அடைய முடியும்!

ஆதலால் இந்த ஏழை பணக்காரன் என்ற வார்த்தைகள் இரண்டுமே தாவீதுக்கு பொருந்தியவைதான். கர்த்தர் அவன் இந்த இரண்டு ஸ்தானத்தையுமே மறந்து விடக்கூடாது என்று நினைத்தார்.

நம்முடைய வங்கியில் இருக்கும் கணக்கை வைத்து கர்த்தர் நம்மை ஏழை என்றும் பணக்காரன் என்றும் கணிப்பது இல்லை என்று நமக்கு நன்கு தெரியும்.தாவீது எதுவுமே சொந்தம் இல்லாதிருந்தபோது அவனிடம் கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. தாவீதுக்கு எல்லாமே சொந்தமான வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் அவனோடு இல்லையே! அவனுடைய வாழ்க்கை எல்லாம் இருந்தபோதும், ஒன்றுமே இல்லாமல் வெறுமையாய் ஆகிவிட்டது!

இன்று கர்த்தர் நம்மை எப்படி பார்க்கிறார்? ஏழையாகவா? பணக்காரராகவா? ஒன்றுமே இல்லாத வேலையிலும் நாம்  கர்த்தருடைய பிரசன்னத்தோடு பணக்காரராய் வாழமுடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 736 கதையோடு வந்த நாத்தான்!

2 சாமுவேல் 12: 1-4  … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 

அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

கதை கேட்பது என்றால் நமக்கு எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? நான் என்னுடைய பிரசங்கங்கத்தை முடிக்கும் போதெல்லாம் சிறு கதையோடு முடிப்பேன். எது நினைவில் இருக்கிறதோ இல்லையோ கதையும் கருத்தும் நினைவைவிட்டு அகலாது என்பது என் அனுபவம்.

அதுமட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  நமக்கு எத்தனை உவமை என்ற கதைகளின் மூலம் மிகப் பெரிய காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கூறிய உவமை ஒவ்வொன்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களேத் தவிர ஏதோ நமக்குப் புரியாத, விவாதத்துக்குரிய கதைகள் அல்ல!  உலகப்பிரகாரமான கதைகளைக்கொண்டு பரலோகத்துக்கடுத்த உண்மைகளை நமக்கு கொடுத்தது நம்முடைய கர்த்தராகிய இயேசு தானே.

இங்கு தன்னுடைய பாதை மாறிய குமாரன் தாவீதிற்கு புத்தியூட்ட ஒரு கதையுடன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்புவதைப் பார்க்கிறோம்.

இந்தக் கதையை வாசிக்கும்போது அந்த ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனிடம் நம்முடைய உள்ளம் ஈர்க்கப்படுகிறது அல்லவா? அவன் நிலமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா?  கர்த்தர் ஒரு அரிவாளை வைத்து தாவீதின் தலையில் ஒரு தட்டு தட்டியிருக்கலாம் அல்லது அவனைத் திட்டி,அவன்முன் மண் பானையை உடைத்து, அவனை அவமானப்படுத்தும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம்!

ஆனால் கர்த்தர் ஒரு கதையோடு நாத்தானை அவனிடம் அனுப்பிய விதம் என் உள்ளத்தைத் தொட்டது. நாத்தான் தன்னுடைய கதையின் மூலம் தெளிவாக தாவீதின் ராஜ்யத்தில் நடந்த ஒரு அநியாயத்தை சுட்டிகாண்பிக்கிறான்.

நாம் நமக்குத் தெரிந்தவர்கள் பாவம் செய்யும்போது அதை எப்படி கண்டிக்கிறோம் என்று இது என்னை சிந்திக்க வைத்தது. பாவத்தில் விழுந்த சகோதரனை நாம் எப்படி நடத்துகிறோம்? எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம்? அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம்? அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம்? என்று சிந்திக்க ஆரம்பித்தேன்!

நீங்களும் சிந்தித்து பாருங்கள்! பாவத்தில் தவறி விழுந்த தாவீதை கர்த்தர் நாத்தான் மூலம் எப்படி சந்தித்தார் என்று! கர்த்தருடைய பிள்ளைகள் தவறும்போது நாமும் அவர்களை மறுபடியும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அவருடைய பெயரை அவதூறு படுத்தக்கூடாது!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ் 735 கர்த்தர் உன்னை அழைத்தால்?

2 சாமுவேல் 12:1  கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி….

தாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான்.

இன்றைய வேதாகம வசனம் நமக்கு  மூன்று காரியங்களை கூறுகிறது.

அனுப்பினார்,  வந்து, நோக்கி என்ற வார்த்தைகளை கவனியுங்கள்!

தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால் கர்த்தர் தீர்க்கதரிசியான நாத்தானை தாவீதினிடத்தில் அனுப்பினார்.

ஒருவேளை கர்த்தர் இன்று உன்னை அழைத்து நம்முடைய பிரதம மந்திரியை சந்தித்து ஒரு செய்தியை வெளிப்படையாக சொல்ல சொன்னால் நமக்கு எப்படியிருக்கும்?  நல்லவேளை நாத்தானுக்கு தாவீதை நன்கு தெரியும். நாத்தான் தாவீதுடைய அரண்மனையில் இருந்த தீர்க்கதரிசி, கர்த்தருடைய வார்த்தையை எடுத்துரைத்தவன்.

தாவீது நாத்தானை அதிகமாக நம்பியதுடன் அவன் மீது அதிக மரியாதையும் வைத்திருந்தான். ஆனாலும் இவை எதுவும் நாத்தானுக்கு கர்த்தர் கொடுத்த வேலையை சுலபமாக்கவில்லை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

நான் அன்று நாத்தானுடைய இடத்தில் இருந்திருந்தால், கர்த்தர் எதைப்பற்றி தாவீதிடம் பேச சொல்கிறார் என்று அறிந்தவுடன், கர்த்தர் வேறு யாரையாவது அனுப்பட்டுமே என்று பின்வாங்கியிருப்பேனோ என்னமோ!

ஆனால் சரித்திரத்தின் அந்தக்கட்டத்தில் கர்த்தருக்கு நாத்தாநின் சேவை தேவைப்பட்டது. அவன் தேவனுடைய செய்தியை தாவீதிடம் அறிவிக்க தேவனால் அனுப்பப்பட்ட தேவ மனுஷன்.  கர்த்தர் இன்றும் நாத்தானைப் போன்ற தேவனுடைய மனுஷரைத் தேடுகிறார். தேவனுடைய சேவையை செய்ய பெரியத்தகுதி வாய்ந்தவர்கள் தேவையில்லை. தேவன் தாமே தாம் தெரிந்துகொள்பவர்களை தகுதிப்படுத்துவார். நாத்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டான். கர்த்தர் தாவீதை சந்தித்து பேசும் பெரிய வேலைக்கு அவனைத் தகுதிப்படுத்தினார்.

இன்று நாத்தானைப்போல தேவனுடைய அழைப்பை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொண்டு தேவன் காட்டும் இடத்துக்கு செல்ல நம்மில் எத்தனைபேர் ஆயத்தமாக இருக்கிறோம். கர்த்தருக்கு இன்று ஒரு நாத்தான் தேவை! அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அவருடைய அழைப்பை ஏற்று, அவருடைய காரியமாய், அவருடைய செய்தியை சுமந்து செல்லும் ஒரு நாத்தான் தேவை! அது இன்று நீயாகக்கூட இருக்கலாம்.

இன்று கர்த்தர் உங்களை அழைப்பாரானால், ஒன்றை மட்டும் மறந்துபோக வேண்டாம்!  கர்த்தருடைய சித்தம் உன்னை என்றுமே கர்த்தருடைய  கிருபை இல்லாத இடத்துக்கு அழைத்துச் செல்லாது!

அவருடைய அழைப்பின் சத்தம் செவிகளில் கேட்கிறதா? உடனே நாத்தானைப்போல் கீழ்ப்படி!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 734 கர்த்தரின் பார்வையில்!

2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.

என்னால் எதையும் கூர்ந்து பார்க்க முடிவதில்லை. அதோ பார் ஒரு அழகான பறவை அந்த மரத்தின் மேல் இருக்கிறது என்று என் கணவர் சொன்னால் மேலே பார்த்துவிட்டு எதையும் காணாமல் கண்களை அகற்றி விடுவேன்.

ஆனால் வேதம் நாம் பார்ப்பது போல அல்ல, வித்தியாசமாகப் பார்க்கிறது. இதைத்தான் நாம் கர்த்தரின் பார்வையில் என்று வாசிக்கிறோம்.

கர்த்தரின் பார்வை என்ற வார்த்தை எபிரேய மொழியில் பூமியெங்கும் பார்க்கும் பார்வை என்ற அர்த்தத்தில் உள்ளது.

சிலநேரங்களில் எப்பொழுதுமே அலட்சியமாகக் கடந்து போகும் மலைப்பகுதியை சற்று கூர்ந்து பார்த்தால் அது வேறொரு கண்ணோட்டத்தைத் தரும். ஒருநாள் நான் எப்பொழுதும் எடுக்கும் பாதையில் காரில் வந்து கொண்டிருந்தபோது அந்த மலைத்தொடரில் ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அந்த மலைகளுக்கு பின்னால் என்றுமே கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்த  சிகரங்கள் சூரிய  ஒளியில் பளிச்சென்று ஜொலித்தன. ஏதோ அந்த மலைகளுக்கு பின்னால் பரலோகம் தெரிந்தாற் போல இருந்தது.

இங்கு கர்த்தரின் பார்வை தாவீதை உள்ளும் புறம்பும், ஆரம்ப முதல் முடிவு வரைப்  பார்த்தது. அவருடைய பார்வையில் எதுவுமே மறைக்கப்படவில்லை. தாவீதின் வாழ்க்கை மொத்தத்தையும் கர்த்தரின் பார்வை கண்டது. அவனுடைய நன்மை செய்த நாட்கள், கர்த்தருக்கு கீழ்ப்படிந்த நாட்கள், அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து அவரிடம் அவன் விசாரித்த நாட்கள், அவன் யுத்தத்தில் கிடைத்த சம்பத்தை, யோராம் அவனுக்கு அன்பளித்த அனைத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்த நாட்கள், அனைத்து இஸ்ரவேலுக்கும் அவன் முன்னோடியாக வாழ்ந்த நாட்கள், தன் மக்களிடம் இரக்கமாய் நடந்து கொண்ட நாட்கள் அனைத்தும் அவர் கண்களுக்கு முன் வந்தது. ஆனால் கர்த்தரின் பார்வையில் தாவீது உரியாவிடம் நடந்து கொண்டது பொல்லாப்பாய் பட்டது.

நாம் ஒருவரிடம் உள்ள குறைகளைப் பார்க்கும்போது கர்த்தரின் பார்வை அப்படியல்ல ஒருவரிடம் உள்ள நற்குணத்தையும், சகல குணங்களையும், குறைகளையும்  சேர்த்துத்தான் பார்க்கின்றன!

இன்று இந்த சத்தியம் எனக்கு மிகவும் ஆறுதல் தருகிறது. கர்த்தரின் பார்வை எத்தனை ஆழமானது! அவர் பார்வையில் மறைக்கப்படும் எதுவுமே என் வாழ்க்கையில் இருக்க முடியாது.  கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்று நாம் நேசிக்கிற இந்த தேவன் எல்லாவற்றையும் காண்பவர்! என்னில் உள்ள குறையை மட்டும் அல்ல மற்ற எல்லாவற்றையும் கூட பார்க்கிறார். இது எனக்கு எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது தெரியுமா!

கர்த்தர் தாவீது உரியாவுக்கு செய்த காரியத்தை பொல்லாப்பாய்க் கண்டார். ஆனாலும் கர்த்தரின் பார்வை அவனுடைய மொத்த வாழ்க்கையையும் பார்த்தது. அதனால் தான் கர்த்தர் அவனை இன்னும் நேசித்தார். எத்தனை இரக்கமுள்ள தேவன் அவர்.

இன்று கர்த்தரின் பார்வையில் நீ எப்படி காணப்படுகிறாய்? கர்த்தர் உன்னை உள்ளும் புறம்பும், உன்னில் உள்ள நன்மை தீமை யாவற்றையும் பார்க்கிறார் என்று உணரும்போது நீ என்ன நினைக்கிறாய்?  சற்று நேரம் சிந்தித்து நம்மைக் காணும் தேவனிடம் ஜெபி!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 733 கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானது!

2 சாமுவேல் 11:27 …. தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது.

எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள்  எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது  இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள்.

இங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது என்று சொல்கிறது. கர்த்தர் தாவீது செய்த பாவத்தை சுண்ணாம்பு அடித்து மறைக்கவும் இல்லை.

தாவீதின் குடும்பம் மிகவும் பெரியது. அவனை சுற்றியுள்ளவர்கள் அதிலும் பெரிய எண்ணிக்கை. இஸ்ரவேல் தேசமே அவனை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குமே அவன் தான் முன்மாதிரி.  நம்முடைய தவறான சாட்சியின் மூலம் நாம் அதிக பாதிப்பைத்தானே ஏற்படுத்துவோம். எத்தனைமுறை நாம் அதிகமாக நேசிக்கும் பாஸ்டரோ, அல்லது டிவியில் காணும் பிரசங்கிமாரோ செய்யும் தவறைக்கண்டு நம்மில் அநேகர் தவறி விழுந்திருக்கிறோம்.

எத்தனையோ பேர் பயங்கரமாக தவறு செய்து விட்டு பிடிபடாமல் தப்பித்துப் போவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனையோ ஊழியர்கள் அரசியல்வாதிகள் கால்களில் விழுந்து தப்பித்துக் கொள்கிறார்கள். தாவீதைப் பொறுத்தவரை முதலில் அவன் செய்த பாவங்களிலிருந்து எளிதாக அவன் தப்பித்ததைப் போலத்தான் இருந்தது. அவன் கொலை செய்ததாகவே கருதப்படவில்லையே, உரியா ஏதோ போரில் மரித்தது போலத்தானே காணப்பட்டது.

இதுதான் பொல்லாப்பு என்பது!  நம்மை சுற்றியுள்ளவர்களை ஏதோ அழியும் பொருட்களைப் போலப் பார்ப்பது. அவர்களும் கர்த்தரின் பார்வையில் விசேஷமானவர்கள் என்று உணராமல் இருப்பது. உண்மையில் தாவீது பத்சேபாளையும், உரியாவையும் ஏதோ தன்னிடம் அடகு வைக்கப்பட்ட பொருளை அடகுக்காரன் நடத்துவது போல நடத்தினான். அவன் தீட்டிய திட்டத்தில் அவர்களை விழ வைத்தான்.

தாவீதின் வாழ்வில்  இருந்த பொல்லாப்பு நம்முடைய வாழ்வில் உண்டா? நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம்?  பொல்லாப்பை விட்டு நாம் விலகும்போது அது நம்மை விட்டு விலகும். நாம் பற்றவருக்கு செய்யும் பொல்லாப்பு நமக்கு நாமே பொல்லாப்பு செய்வதுபோலத்தான்.

தாவீது, உரியாவுக்கும், பத்சேபாளுக்கும் செய்த செயல் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பாயிருந்தது! உன்னுடைய செயல்கள் இன்று கர்த்தரின் பார்வையில் எப்படி உள்ளன! உன்னை சுற்றியுள்ள உன் குடும்பத்தை உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருட்களைப் போல நடத்துகிறாயா? உன்னுடைய அம்மா அப்பா உனக்கு வேண்டாத பொருளாகி விட்டனரா?  சிந்தித்துப் பார்! ஜெபி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 732 பத்சேபாளிடம் ஒரே ஒரு கேள்வி!

1 சாமுவேல் 11: 26,27  தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்.

கற்பு என்பது  நமக்கும் அழகு!  நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்!  இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன படிக்கப்போகிறோம் என்று புரிகிறது அல்லவா?

அன்று பத்சேபாளின் கதவு தட்டப்பட்டது! போர்க்களத்திலிருந்து செய்தி! என்னவாயிருக்கும்! மாவீரன் உரியா  மறைந்து விட்ட செய்தி! உன்னுடைய அன்புக் கணவன் மரித்துவிட்டான் என்ற செய்தி.

பத்சேபாளுக்கு எப்படி இருந்திருக்கும்? வேதம் சொல்கிறது அவள் தன் நாயகனுக்காக துக்கம் கொண்டாடினாள் என்று.  எத்தனை நாள் துக்கம் தெரியுமா? ஏழே நாட்கள்தான்.  உண்மையாக சொல்லப்போனால் உரியாவின் உடல் குழிக்குள் இறங்கி எட்டாம் நாளில் அவள் தாவீதுக்கு மனைவியாகிறாள்.

நான் பத்சேபாளை சந்திக்க நேர்ந்தால் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். என்ன கேள்வி தெரியுமா? உன் புருஷனை கொன்ற ஒருவனை எப்படி உன்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றுதான். சிலர் சொல்கின்றனர், பத்சேபாளுக்கு தன் கணவன் படுகொலை பண்ணப்பட்ட விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று.

ஆனால் பெண்களே சொல்லுங்கள்! நம்மால் இதை உணர முடியுமா? முடியாதா? நம்முடைய உள்ளுணர்ச்சி நிச்சயமாக இதை நமக்குக் காட்டும். தான் தாவீதால் கர்ப்பவதி ஆகிவிட்டதை தாவீதுக்கு தெரிவித்து சில நாட்களிலேயே அவளுடைய, வாலிபனான, போரில் திறமையான, தைரியசாலியான கணவன் மரித்து விட்டான். நான் பத்சேபாளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக எங்கோ கரிந்து விட்டது என்று முகர்ந்திருப்பேன். ராஜ கிரீடம் தரித்து சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜா ஒரு நரி என்று உணர்ந்திருப்பேன்.

முதல் தடவை தாவீது அவளை அடைய விரும்பி ஆள் அனுப்பியபோதே அவள் முடியாது என்று சொல்லி  இருக்கலாம். அவள் கணவன் இறந்து துக்கம் கொண்டாடிய பின்னர் மறுபடியும் அவளுக்காக ஆள் அனுப்பியபோது முடியாது என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவரும் ஆடிய கபட நாடகத்தை மறைக்க அவள் அரண்மனைக்குப் போய் அவனைத் திருமணம் செய்கிறாள்.

கர்ப்பவதியான அவளால் அந்த செய்தியை அநேக நாட்கள் மறைக்க முடியாது. போர்க்களத்தில் கணவன் இருந்தபோது இவள் எப்படி கர்ப்பந்தரித்தாள் என்ற கிசுகிசுப்பு பரவ ஆரம்பிக்கும்.  தாவீதும் அவளும் செய்த பாவத்தை எப்படியாவது மறைக்கவேண்டும் என்றே இந்த உடனடி முடிவு எடுக்கப்பட்டது.

தாவீதுக்கு தான் விரும்பிய பெண் கிடைத்து விட்டாள். அவளுக்கோ யாரும் அவள் கற்பின்மேல் குற்றம் கண்டுபிடிக்கவே முடியாது.  கற்புக்கரசி அல்லவா!

ஆனால் அவளுடைய குமாரனான சாலொமோனோ தன்னுடைய நீதிமொழிகளின் புத்தகத்தில் ( 28:13) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிறான். தன் தாயும் தகப்பனும் செய்த சதி வேலைகள் அவனுக்குத் தெரிந்திருந்தனவோ என்னவோ?

நம்முடைய நடத்தையில்  பரிசுத்தம் இல்லாமல் ஆத்துமாவைப்பற்றி பேசுவதால் என்ன பயன்? நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆலயப்பணிகளில் ஈடுபடுவதால் பலன் என்ன? இன்று நம்மில் எத்தனை பேர் இப்படி நம் பாவத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்?

கற்போடும், பரிசுத்தத்தோடும் வாழ பெலன் தருமாறு கர்த்தரை நோக்கி ஜெபிப்போமா?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்