2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..
வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது.
ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன! என்ன செய்வதென்று அறியாது அருகில் உள்ள ஒரு பேக்கரியில் போய் தங்க இடம் கேட்டோம். அந்த இடத்தின் உரிமையாளர் எவ்வளவு சந்தோஷமாக எங்களுக்கு படுக்க இடமும், அந்தக் குளிரில் மூட கம்பளியும் கொடுத்தார் என்பதை என்றுமே மறக்க முடியாது!
யூதர்கள் இதில் மிகவும் விசேஷமானவர்கள்! வழிப்போக்கரை உபசரிப்பது அவர்களுடைய தெய்வீக கலாசாரம்! நம்முடைய சுயநலத்துக்காக இரவும் பகலும் நாம் உழைக்கும் இந்தக் காலத்தில் விருந்தினர் என்ற வார்த்தையே ந்மக்கு பயத்தைக்கொடுக்கிறது அல்லவா? ஆனால் வேதம் நாம் தயவும் இரக்கமும் உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது!
இன்றைய வேதாகமப் பகுதியில் நாத்தான் தாவீதிடம் ஒரு கதையோடு வந்ததைப் பார்க்கிறோம். அதில் ஒரு ஐசுவரியவானும், ஒரு தரித்திரனும் இருந்தனர். தாவீது இந்தக் கதையைக் கேட்டபோது இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தன்னுடைய ராஜ்யத்தில் நடந்ததாகவே நம்பினான் என்று வேதம் சொல்கிறது. ஏனெனில் அவனும் ஒருநாள் ஏழையாகவும், பின்னர் பணக்காரனாகவும் இருந்த அனுபவம் இருந்தது.
திடீரென்று நாத்தான் கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தான். அந்த ஐசுவரியவானிடம் ஒரு வழிப்போக்கன் வந்து ஏதாவது சாப்பிட உண்டா என்று கேட்டான். தாவீது கூட தான் பசியாயிருந்த வேளைகளில் ஏதாவது புசிக்க கிடைக்குமா என்று திரிந்திருக்கிறான். நீங்கள் மறக்கவில்லையானால் அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாபாலையும் அவன் மனைவியான அபிகாயிலையும் சந்தித்தான். நாபால் உணவு கொடுக்க மறுத்து விட்டான் ஆனால் அவனுடைய புத்திசாலி மனைவியோ ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணி தாவீதை சந்தித்தாள் என்று படித்தோம்.
மற்றவர்களுடைய தயவுக்காக தாவீது காத்திருந்த நாட்களை நாத்தான் அவனுக்கு நினைவூட்டுகிறான். தாவீதை தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருநாளும் பாதுகாத்து, போஷித்து வழிநடத்தியதை அவனுக்கு நினைப்பூட்டினான். அவன் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து ஒரு வழிப்போக்கனாய் உணவுக்காக போராடிய அந்த நாட்களை தாவீது எப்படி மறக்க முடியும்? இருளாய் இருந்த அவன் சிந்தனையை, விளக்கேற்றி நினைவு படுத்துகிறான் நாத்தான்!
கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே! அவர் உன்னை நடத்திய விதத்தை, போஷித்த விதத்தை நினைத்துப்பார்! நீ வழிப்போக்கனாய் அலைந்தபோது அவர் உனக்கு பாதை காட்டி, பாதுகாத்து வழிநடத்தியதை எப்படி மறந்து போவாய். ஒரு நிமிடம்! ஒரே ஒரு நிமிடம் கண்ணை மூடி கர்த்தர் உனக்கு செய்த எல்லா உபகாரங்களையும் எண்ணிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Super sisters
வெள்., 23 ஆக., 2019, முற்பகல் 6:05க்கு, Prema Sunder Raj’s Blog எழுதியது:
> premasunderraj posted: “2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில்
> வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல்
> பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..
> வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? ”
>