Archive | September 2, 2019

இதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்!

2 சாமுவேல் 12:6  அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.

நாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்டும் என்று கூறியதை பார்த்தோம்.

இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம்.

இதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு என்ற ஆயக்காரன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. நாங்கள் போன வருடம் இதே மாதம் இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது, சகேயு வாழ்ந்த வீட்டுக்கு போகும்படியாக கர்த்தர் உதவி செய்தார். கர்த்தராகிய இயேசு காலடி எடுத்து வைத்த அந்த வீட்டுக்குள் நிற்கவே உடல் சிலிர்த்தது.

சகேயு கொஞ்ச நாட்களாகவே இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவர் தம்முடைய ஊருக்கு வருகிறார் என்று தெரிந்தவுடனே அவரைப் போய் பார்க்க ஆசைப்பட்டான்.  ஒருவேளை இந்தப் பணக்காரன் இயேசு என்பவர் எப்படிப் பட்டவரோ? மத போதனை என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றும் ஒருவரோ? என்று கூட நினைத்திருக்கலாம். அப்படித்தானே கடவுள் பெயரில் வியாபாரமும் கொள்ளையும் தேவாலயத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆயக்காரனின் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த  சகேயுவுக்கு தெரியாததா என்ன?

சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவனாயிருந்தபடியால் அவர் போகும் வழியில் இருந்த ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். அந்த காட்டத்தி மரம் இன்றும் எரிகோவில் நின்றுகொண்டு இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லையா?

அப்பொழுது ஒரு ஆச்சரியம் நடந்தது! அந்த வழியாய் வந்த இயேசு நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவ்வளவுதான்! சகேயுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை! சீக்கிரமாய் இறங்கி வந்து அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.அதுமட்டுமல்ல அந்த ஐசுவரியவனான ஆயக்காரன் நின்று ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் அநியாயயாய் வாங்கியவனுக்கு நாலத்தனையாகத் திரும்பக் கொடுக்கிறேன் என்றான் என்று பார்க்கிறோம்.

நாலத்தனையாகக் கொடுக்கவேண்டும் என்ற இந்த இரக்க குணம் எப்பொழுது சகேயுவுக்கு வந்தது?  தாவீதுக்கு எப்பொழுது வந்தது? இது இந்த உலகத்தாரால் நடக்கும் காரியமா? தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே முடியும் அல்லவா? நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளையாக மாறும் வேளையில் நம்முடைய கர்த்தராகிய தேவனின் இரக்கமும், தயவும் நமக்குள்ளும் விதைக்கப்படுகிறது!

நடந்து போன ஒரு காரியத்துக்காக மற்றவர்களையோ அல்லது நம்மையே நாமோ பழி சொல்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்கள் மேல் நாம் இரக்கம் காட்ட ஆரம்பித்தால், நாம் மேலும் மேலும் இரக்கம் காட்டும் படியாக கர்த்தர் நம்முடைய இருதயத்தை திறப்பார்.

இரக்கம் என்பது தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளுக்கு உரித்தான குணம்! சகேயு கர்த்தராகிய இயேசுவை சந்தித்தபோது கிடைத்த அற்புத குணம்! தாவீதை தேவன் நாத்தான் மூலம் சந்தித்தபோது கிடைத்த குணம்! இன்று நமக்கும் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் அற்புத குணம் இது!

நலிந்தவர்களைக் காணும் உள்ளத்தை எனக்குத் தாரும்!  நாலத்தனையாய் கொடுக்க உதவி செய்யும் என்று  ஜெபிப்போமா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்