Archive | October 2019

இதழ்:782 முகஸ்துதி செய்கிறவன் வலையை விரிக்கிறான்!

2 சாமுவேல் 15: 4-6  பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு என்னைத் தேசத்திலே நியாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி முத்தஞ்செய்வான். இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல்  மனிதருடைய இருதயத்தைக் கவர்ந்து கொண்டான்.

பரலோக தேவன் நமக்கு அருளியிருக்கும் நன்மையான வாழ்வு என்ன என்று நாம் தாவீதின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தாவீது ராஜாவின் தரமில்லாத நடத்தையால் உரியாவின் மனைவியைத் தனக்கு சொந்தமாக்கியது மட்டுமல்லாமல், உரியாவைக் கொலை செய்ததது அரண்மனைக்கு வெளியே மட்டுமல்ல அரண்மனைக்கு உள்ளும் எல்லோராலும் அறியப்பட்டிருந்தது. இந்தக் காரியம் அவனுடைய பிள்ளைகளை எவ்வாறு பாதித்திருந்தது என்பதை அவர்களுடைய நடத்தையிலிருந்து பார்க்கிறோம்.  தான் நினைத்த எதையும் அடையலாம் என்ற எண்ணத்தில் தன் சொந்த சகோதரியை கற்பழித்த அம்னோன், விருந்துக்கு அழைத்து சகோதரனாகிய அம்னோனை கொலை செய்த அப்சலோம் என்று தாவீதின் பிள்ளைகள் செய்த காரியம் அவன் தகப்பனின் நடத்தையின் பிரதிபலிப்புதானே!

இன்றைய வேதாகமப்பகுதியில் அப்சலோம் இஸ்ரவேல் மக்களிடம் நாவுக்கினிய வார்த்தைகளைப் பேசி அவர்களைத் தன் வசப்படுத்துவதைப் பார்க்கிறோம். வேதம் நமக்கு அப்சலோம் மிகவும் சௌந்தரியமானவன் என்று சொல்கிறது. நல்ல உயரம்! நல்ல முகக் களை! அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் உருவம்! அதுமட்டுமல்ல! அவன் மக்களை மகிழ வைக்கும் திறமை வாய்ந்தவன்!  ஒவ்வொருநாளும் அவன் பட்டணத்து வாசலில் உட்கார்ந்து மக்களை சந்தித்து, ராஜாவிடம் நியாயம் கேட்டு வந்தவர்களை அவனே நியாயம் தீர்த்து மக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான். அதுமட்டுமல்ல! என்னை இந்த தேசத்து நியாதிபதியாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஜனங்களின் மனதில் வேறுபாடு கொண்டுவரும் விதையை விதைத்தான்.

உங்கள் துக்கம் என்னுடைய துக்கம்! ராஜாவுக்கு உங்கள் துக்கத்தை விசாரிக்க எங்கே சமயம் இருக்கிறது? நான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் விருந்துக்கு அழைத்தபோது அதற்கு வரக்கூட ராஜாவுக்கு நேரம் இல்லை! உங்களுக்கு எப்படி நேரம் கொடுப்பார்? நானும் உங்களைப்போலத்தான்! அதனால் உங்கள் துக்கத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! என்று நாவில் தேன் சொட்ட சொட்ட பேசியிருப்பான்.

அவன் செய்த இந்தக் காரியத்தை ‘ ஆடுகளைத் திருடுதல்’ என்று சொல்லலாமே! இரகசியமாக அவன் ராஜாவுக்கு சொந்தமான ஆடுகளைத் திருடிக் கொண்டிருந்தான்.  வெகு சீக்கிரமே இஸ்ரவேல் மக்கள் அப்சலோமின் வலையில் விழ ஆரம்பித்தனர்.

இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்ததால்தானோ என்னவோ சாலொமோன் தான் எழுதிய நீதிமொழிகளில் இவ்வாறு எழுதுகிறான்.

பிறனுக்கு முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது.. ( நீதி: 29:5,6)

எதை அறிய வேண்டுமோ அதைமட்டும் அறியும் அறிவு!

எதை நேசிக்க வேண்டுமோ அதை மட்டும் நேசிக்கும் மனது!

தேவனை மட்டுமே புகழும், துதிக்கும் நாவு!

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை மட்டுமே பிரியப்படுத்தும் உள்ளம்!

இவையே நமக்கு நன்மையான வாழ்வை அமைத்துத் தரும்!  இதனையே நாம் ஒவ்வொருநாளும் பெற கர்த்தராகிய இயேசு நமக்கு உதவி செய்வாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்:781 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

யோவான் 17:10,11 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்,அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை  உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

தாவீதின் குடும்பத்தைப் பற்றி நாம் படிக்கும்போது அவனுடைய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளிதான் இன்று என் மனதுக்கு வந்தது.

தாவீதுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் இருந்த இடைவெளி, அவன் பிள்ளைகளுக்குள் ஒருவருக்கொருவர் இருந்த இடைவெளி இவற்றைப் பார்க்கும்போது இப்படியும் ஒரு குடும்பமா என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் ஒரே குடும்பமாய்க் காணப்பட்டாலும், அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பொறாமையும்,  புரிந்து கொள்ளா தன்மையும், சுயஇச்சைகளும், வெறுப்பும்தான் இதற்கு காரணம்.

இன்று உங்களுடைய குடும்பத்திலும் இப்படிப்பட்ட இடைவெளி உண்டு என்று நான் அறிவேன். இடைவெளி என்று நான் சொல்லும்போது நீங்கள் ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரமில்லாமல் வாழ்கின்றீர்களே அதைப்பற்றிதான் சொல்கிறேன்.

அதனால்தான் இடைவெளி அல்லது ஒதுங்கி வாழ்தல் என்ற வார்த்தைக்கு எதிரான ஒற்றுமை என்ற வார்த்தையை இன்று ஆவியானவர் எனக்கு விளக்கிக் காட்டினார்.

இந்த ஒற்றுமை என்ற வார்த்தைதான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் காணப்படுகிறது. இன்றைய வேதாகமப் பகுதியில் அவருடைய பிதாவோடு தாம் ஒன்றாயிருப்பதைப்பற்றிக் கூறுகிறார். ஒன்று என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஒன்றும் தெரியாதது அல்ல என்று நினைக்கிறேன். இது எண் 1 போல நேரான அர்த்தம் கொண்டது. இதில் ஆண் பால் பெண்பால் என்ற வேற்றுமைகூட இல்லை. ஒரு நிமிஷம் பவுல் இதைப்பற்றி என்ன கூறுகிறார் பாருங்கள்!

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். (கலா:3:18)

நான் சுருக்கமாக சொல்லப்போனால் இந்த எண் 1 ப் போன்ற கிறிஸ்துவை நம்முடைய வாழ்வில் முதலில் வைப்போமானால் நமக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். நம்மில் ஒருசிலர் பழைய காயங்களின் தழும்பை மறக்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பிக்கும்போது காயங்கள் ஆறும்!  பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்த எத்தனையோபேர் கிறிஸ்துவினால் இணைந்ததைப் பார்த்திருக்கிறேன்.

ஆம்! நன்மையான வாழ்வு என்பது எந்த குற்ற உணர்ச்சியுமில்லாமல் வாழ்வது என்று பார்த்தோம்!  இடைவெளி இல்லாமல் ஒருவரோடொருவர் நெருங்கி வாழ்வதும் நன்மையான வாழ்வுதான்.

கிறிஸ்துவை தலையாகக்கொண்டு நம்முடைய குடும்பத்தில் ஒற்றுமையைக் கொண்டுவருவோம். உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளி குறையட்டும்! பிள்ளைகளோடு நெருங்கி  ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ ஆரம்பியுங்கள்! கர்த்தராகிய இயேசு மட்டுமே இந்த ஒற்றுமையை உங்கள் குடும்பத்தில் கொண்டுவர முடியும்! குடும்ப ஜெபம் உங்களை ஒற்றுமைப்படுத்தும்!

கிறிஸ்துவில் ஒன்றுபட்டால் உண்டு நன்மையான வாழ்வு!

கர்த்தராகிய இயேசு இன்று இந்த வார்த்தைகள் மூலம் ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ் 780 இன்று மட்டுமே உண்டு என்று வாழ்வோம்!

மீகா 7: 18,19  தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.

நான் என்றாவது பேசிய வார்த்தைகளையும், நடந்துகொண்ட விதத்தையும் மாற்றி வேறு வார்த்தைகளை பேசி, வேறு மாதிரி நடந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைத்ததுண்டா? என்று சற்று யோசித்தேன். நிச்சயமாக அப்படிப்பட்டவை உண்டு! ஆனால் அதை இனி என்னால் மாற்றவே முடியாது!

ஒருதடவை நடந்தது நடந்ததேதான்! எத்தனைதடவை இப்படி நடந்து போன் காரியத்தைக் குறித்து மறுபடியும் மறுபடியும் வருத்தப்பட்டிருக்கிறோம்! நான் இப்படி பேசியிருக்கவே கூடாது, இப்படி நடந்து கொண்டிருக்கவே கூடாது, தவறு பண்ணிவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியால் மனதுக்குள் புலம்பியதில்லையா?

தாவீதின் வாழ்க்கையின் மூலம் எவ்வாறு நாம் நன்மையான வாழ்க்கையை வாழலாம் என்று தொடர்ந்து படிக்கப் போகிறோம். நாம் கடந்து போன செயலுக்காக மனதூக்குள் அழுது புலம்பி நம்மையே நாம் வருத்திக்கொள்ளாமல் வாழ்வதுதான் கர்த்தர் கொடுக்கும் நன்மையான வாழ்க்கை!

அப்படியானால் என்ன? நான் செய்த எல்லாமே சரியா? நான் செய்தது தவறு என்று நினைக்க வேண்டாமா? என்று நாம் நினைக்கலாம். நிச்சயமாக நாம் செய்த தவறை நாம் உணர வேண்டும், அதைக்குறித்து மனஸ்தாபப்பட வேண்டும், அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் கர்த்தருடைய உதவியால் நான் அந்தத் தவறிலேயே வாழ்ந்து கொண்டிராமல் அதைவிட்டு விலகி வாழ்க்கையில் முன் நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

தாவீதைப் பாருங்கள்! விபச்சாரம், கொலை, குழந்தையின் பரிதாபமான மரணம் இவை அவன் மனதை அரித்துக் கொண்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்! ஐயோ இப்படி நடவாமல் இருந்திருந்தால் நலமாயிருக்கும் என்றுதானே அழுது புலம்பியிருப்பான். அதுமட்டுமல்ல தன்னுடைய குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருந்ததால்தானே அம்னோன் தாமார் என்ற பிள்ளைகளின் வாழ்க்கை கெட்டு அழிந்தது!

2 சாமுவேல் 13: 24 – 28 ல் அப்சலோம் தன் தகப்பனைத் தான் ஆடுகள் மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு வருமாறு வருந்தி அழைக்கிறான். ஆனால் தாவீது அதை மறுத்து விட்டான். இதைப் படிக்கும்போது அப்சலோம் தாவீதை ஏன் அவ்விதம் வருந்தி அழைத்தான்? தாவீது அங்கு இருந்திருந்தால் அவனால் அம்னோனை இவ்வளவு சுலபமாக தீர்த்துக்கட்டியிருக்க முடியுமா? பின்னர் ஏன் அழைத்தான்? என்று யோசித்தேன்!  ஒருவேளை அப்சலோம் தான் அம்னோனை அடித்துக் கொன்றதை தன் தகப்பனாகிய தாவீது தன் கண்களால் காண வேண்டும் என்று விரும்பினானோ என்னவோ என்று நினைத்தேன். தாவீதின் பாவத்தால் பிள்ளைகளுக்குள் நடக்கும் பொல்லாப்பை அவன் தகப்பன் கண்ணால் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பான்.

அப்சலோம் என்ன மனதில் நினைத்து செயல்பட்டானோ தெரியவில்லை ஆனால் நான் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால் அன்று அப்சலோம் அழைத்த அழைப்புக்கு இணங்கி ஆடுகளை மயிர் கத்தரிக்கும் இடத்திற்கு போகாததை நினைத்து என் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியால் அழுது புலம்பியிருப்பேன். போயிருந்தால் ஒருவேளை தாவீதால் அந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியும் அல்லவா?

தாவீதின் வாழ்க்கையில் அழுது புலம்ப, குற்றத்தால் மனக்கசந்து அழ அநேக காரியங்கள் இருந்தன. ஆனாலும் சங்கீதம் 51 ல் தாவீது

அப்பொழுது  பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன். பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.  (சங்:51:13)

என்று கூறுகிறான். தாவீது தன்னுடைய குற்ற உணர்ச்சிகளிலேயே வாழாமல் தன்னுடைய குற்றங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு பெற்று அதைத் தாண்டி தன்னுடைய ஓட்டப் பிரயாணத்தைத் தொடருவதைப் பார்க்கிறோம். பாதகரை கர்த்தருக்குள் வழிநடத்தும் நிலைக்கு வந்துவிட்டான்.

நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் நம் மேல் குற்ற உணர்வு என்ற நுகத்தை சுமத்தவே மாட்டார். நம்முடைய பாவங்கள், அக்கிரமங்கள் எல்லாமே சமுத்திரத்தின் ஆழத்தில் போடப்பட்டுவிட்டன. அவர் நன்மையான வாழ்வையே நமக்கு ஈவாகத் தருகிறார்.

இது நமக்கு எத்தனை மகிழ்ச்சியான செய்தி! குற்ற உணர்வால் நாம் தலை குனிய வேண்டாம்! மனக்கசந்து கண்ணீர் விட வேண்டாம்! நன்மையான வாழ்வைத்தரும் இயேசு கிறிஸ்து கொடுக்கும் அற்புத விடுதலை இது!

நேற்று என்னைவிட்டு கடந்து விட்டது! காலம் அதை எடுத்து விட்டது!

நாளை ஒருவேளை என்னைத்தேடி வராது!

ஆனால்  இன்று என்னிடம் இன்னும் இருக்கிறது!

என்று ஒவ்வொருநிமிடமும் எண்ணி இன்றைய தினத்தில் நாம் கிறிஸ்து நமக்கு கொடுக்கும் நன்மையான வாழ்வை சந்தோஷமாக வாழ கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 779 நீண்ட நன்மையான வாழ்வு வேண்டுமா?

சங்: 34:11,12  பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 – 170 வருடங்கள் வரை வாழும்  என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது! ஒரு தரமான, நன்மையான வாழ்க்கைக் கிடைக்குமானால் 150 வருடங்கள் வாழ நான் தயார்!

நன்மையான வாழ்வைப்பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தவுடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் நன்மையான வாழ்வு என்று சிந்திக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை அமெரிக்காவில் வாழ்பவர்களைப் பார்த்து அவர்கள் நன்மையான வாழ்வை வாழ்கிறார்கள் என்று நினைக்கலாம்! பல இலட்சம் சம்பாதிக்கும் நடிகர்களைப் பார்த்து?  நாம் உலகத்தில் சுற்றிப்பார்க்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு? நம்முடைய பெயருக்கு பின்னால் வரும் டிகிரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு? இன்னும் எதையெல்லாம் வைத்து நாம் நன்மையான வாழ்வு என்று கணக்கு போடுகிறோம்?

ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? போரில் அடிபட்ட வீரர்களுக்கு  இரவும் பகலும் சேவை செய்த ஒரு நர்ஸ்! அவர்களுடைய பின்னணி என்ன தெரியுமா? இங்கிலாந்தில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்! சிலர் விரும்பும் நல்ல வாழ்க்கை அது! அவருடைய அம்மாவும், சகோதரனும் தடுத்தும் அவர் தான் நர்ஸ் ஆக பணி செய்வதே தேவன் தன்னை அழைத்த அழைப்பு என்று நிச்சயமாக நம்பி தன்னை அந்த சேவைக்காக அர்ப்பணித்தார். அவருடைய சேவையை போர்க்காலத்தில் பார்த்தவர்கள் அவரை ஒரு தேவதூதனாகவே பார்த்தனர். அவர் எந்த ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தான் வாழ்ந்த கடினமான ஆனால் நன்மையான வாழ்க்கையை விட்டுக் கொடுக்கவில்லை!

நன்மையான வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திக்கும் இந்த வேளையில், தாவீதை நாம் வாலிபனாக சந்தித்தபோது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தான் என்று யோசித்துப் பாருங்கள்! அவன் ராஜாவாகிய சவுலுக்கு பயந்து காடு மேடு குகைகளில் வாழ்ந்த நாட்களில் அவன் தேவனாகிய கர்த்தரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். தினமும் அவரோடு பேசி அவருடைய சித்தத்தை அறிந்து செயல்பட்டான். கடினமான சூழ்நிலையில் நன்மையான வாழ்க்கையை வாழ்ந்தான்.

ஆனால் அவனுக்கு இஸ்ரவேலின் சிங்காசனம் கிடைத்தபோதோ அதோடு அவனுக்கு வசதி, புகழ், பதவி  மற்றும் அநேக மனைவிமாரும் கிடைத்தனர். நாமெல்லாரும் மிகவும் விரும்பும் ஒரு நன்மையான வாழ்க்கை அது! தாவீதுக்கு எல்லாமே இருந்தது அல்லவா? ஆனால் அவனுடைய அரண்மனையின் நான்கு சுவருக்குள் நாம் எட்டிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது நாம் எல்லோரும் நினைக்கும் எந்த நன்மையானதும் அங்கு இல்லை என்று! என்ன பரிதாபம்! அவனுடைய இச்சையினால் ஏற்பட்ட கொலை! பாவத்தின் பலனாய் இழாந்த குழந்தை! அண்ணனே தங்கையை கற்பழித்த அபூர்வ கதை! பழிவாங்க காத்திருந்த சகோதரன்! விருந்துக்கு அழைத்து எதிர்பாராத வேளையில் சகோதரனை செய்த கொலை!  அப்பப்பா! நாமொன்று நினைக்க மற்றொன்று அல்லவா நடக்கிறது!

இன்று எதை நன்மையான வாழ்க்கை என்று நீ நினைக்கிறாய்? வசதியையும், ஆடம்பரத்தையுமா? அல்லது தேவனுடைய பிரசன்னம் நிரம்பிய, தேவனுடைய கரத்தால் வழிநடத்தப்படும் வாழ்க்கையையா? கர்த்தருக்கு பயப்படுதலே நீண்ட நன்மையான வாழ்க்கையை நமக்குக் கொடுக்கும்! அது கடினமான பாதையாயிருந்தாலும் அது நம்மை திருப்தியாக்கும்!

கர்த்தர்தாமே இந்த வசனங்கள் மூலமாக நம்மை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 778 பழிவாங்கினால் நிறைவு கிடைக்குமா?

2 சாமுவேல் 13:  23, 28, 29  இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் …ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்……அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்…… அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்.

அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக் கொதித்துக்கொண்டிருந்தது. அவன் இரண்டு நாட்கள் காத்திருந்தானோ, இரண்டு வருடங்கள் காத்திருந்தானோ அது முக்கியம் இல்லை ஆனால் அவன் அம்னோன் தாமாருக்கு விளைத்த தீங்குக்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்தை மறைத்துக் கொண்டு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது. ஆடுகளை மயிர் கத்தரிக்கும் நாட்களில் அம்னோனை அவனுடைய தகப்பனாகிய தாவீதிடமிருந்து பிரிக்கும் தருணம் கிடைத்தது!

அப்சலோம் தருணத்தைத் தவறவிடவில்லை.  அம்னோனை நன்கு குடிக்க வைத்து பின்னர் அவனை அடித்துக் கொல்லும்படி அப்சலோம்  தன் வேலைக்காருக்கு கட்டளைக் கொடுக்கிறான். இது சாதாரணமாக முடிந்துவிடும்! அப்சலோம் தன் கையை இரத்தமாக்க வேண்டிய அவசியமே இருக்காது. வேலைக்காரரே வேலையை முடித்து விடுவார்கள்! அம்னோன் தாமாருக்கு செய்த தீங்குக்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்!

அப்சலோம் திட்டமிட்டபடியே அம்னோனை முடித்து விட்டான். குடிபோதையிலிருந்த அம்னோனை அப்சலோமின் வேலைக்காரர் அடித்தே கொன்று விட்டனர். அப்சலோமின் இந்தக் கொடூர செயலைப்பார்த்த தாவீதின் மற்ற குமாரர் எல்லோரும் தங்கள் கோவேறு கழுதைகளில் ஏறி ஓட்டம்  பிடித்தனர். துரதிருஷ்டவசமாக இதுதான் அந்தக் குடும்பத்தின் இரத்தம் சிந்தும் படலத்தின்  முதல் ஆரம்பம்!

ஒருவன்  மண்ணை சாப்பிட்டுவிட்டு அப்பா என் வயிறு நிறைந்து விட்டது என்று சொல்வதைப்போலத்தான் இந்தப் பழிவாங்குதலும் இருக்கும். அந்த சமயத்தில் ஒரு நிறைவைக் கொடுப்பது போல இருந்தாலும் அது உண்மையான நிறைவு அல்ல!

புல் டாக்  (bull dog)  என்னப்படும் நாய் எப்படி இருக்கும் தெரியுமல்லவா?அதற்கு மூக்கை சுற்றி சதை தொங்கும். ஒரு சிறு பெண் அந்த நாயின் அருகில் உட்கார்ந்து முகத்தை  பல கோணங்களில் சுளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவள் அம்மா, நீ ஏன் நாயைப் பார்த்து முகம் சுளிக்கிறாய் என்று கேட்டதற்கு, அதுதான் என்னைப்பார்த்து முதலில் சுளித்தது என்று சொன்னாள் அந்த சிறுமி!

நாம் இந்த உலகத்தில் பார்க்கும்  ஒவ்வொரு சுளிப்புக்கும் பதில் சுளிப்பு கொடுத்துக்கொண்டேயிருந்தால் நம் வாழ்வு எப்படியிருக்கும்? அதனால் பயன் தான் என்ன? நம் வாழ்க்கையே வீணாகிவிடும் அல்லவா?

பழிவாங்குதல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து ஒருவரைத் தாக்கும் முன் தயவுசெய்து  அன்பும், இரக்கமும், கிருபையும், தயவும், மன்னிப்புமே நம்முடைய தேவன் நமக்கு காட்டியுள்ள பாதை என்பதை  ஒருபோதும் மறந்து போகவேண்டாம்!

பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ( ரோமர் 12:19)

கர்த்தர் இந்த வார்த்தைகளின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 777 வாயில் தேன்! மனதிலோ நஞ்சு!

2 சாமுவேல் 13: 21,22  தாவீதுராஜா இந்த செய்திகளையெல்லாம் கேள்விப்பட்ட போது, வெகு கோபமாயெரிந்தான். அப்சலோம் அம்னோனிடம் நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை. தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.

ஒருநாள் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்மாறான கட்சிக்காரர் இருவர் பேச ஆரம்பித்தபோது அங்கிருந்த நடுவரால் அவர்களை அடக்கவே முடியவில்லை. அவர்கள் சத்தமாக ஒருவரையொருவர் பேசவிடாமல் தடுத்து கூச்சலிட ஆரம்பித்தனர்! இவர்கள் என்ன செய்கிறார்கள்! ஒருவரை மற்றொருவர் பேசவிடாமல் தடுப்பதுதான் இவர்கள் உள்நோக்கமா என்று நினைக்கத்தோன்றியது!

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நம்முடைய உள்நோக்கம் வெளிப்படும் என்பது உண்மை அல்லவா! சில நேரங்களில் நம்முடைய உள்நோக்கத்தை நாம் மூடி மறைத்தும் வாழ்கிறோம்.

இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, தாவீதுராஜா அம்னோன் தாமாரை ஏமாற்றி கற்பழித்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது கோபமாயெரிந்தான் என்று. ஆனால் அவன் அம்னோனைக் கூப்பிட்டு இந்த விஷயத்தைப் பற்றிக் கண்டித்ததாக வேதம் எங்குமே கூறவில்லை. தன்னுடைய வீட்டுக்குள் நடந்த இந்தப் பாவத்தைத் தட்டி கேட்க அவனால் ஏன் கூடாமல் போயிற்று என்று என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை! அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தால் அவனுடைய வீட்டிலும், நாட்டிலும் நீதி குறைவுபட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தாமாரின் அண்ணனாகிய அப்சலோம் தன்னுடைய தங்கையை யாரிடமும் இதைப்பற்றி பேசாதே என்று சொல்லித் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வைக்கிறான். அப்சலோம் அம்னோனிடம் இதைக்குறித்து பேசவில்லை ஆனால் அம்னோனை வஞ்சம் தீர்க்கும் உள்நோக்கம் அவனுக்குள் மறைந்திருந்தது.

நம்மில் எத்தனைபேர் இன்று கர்த்தருடைய சித்தத்திற்கு மாறாக வஞ்சம் என்ற உள்நோக்கத்தை மறைத்து வைத்திருக்கிறோம். என்றைக்காவது ஒருநாள் தருணம் கிடைக்கும்போது அவன் எனக்கு செய்ததை இரண்டுமடங்காக கொடுத்து விடுவேன், நான் அனுபவித்ததை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இல்லையா? அதை மறைத்துக்கொண்டு ஒன்றுமே நடக்காதுபோல் நாம் நடந்து கொள்வதில்லையா? வார்த்தையில் ஒன்று மனதில் ஒன்று வைத்து பேசுபவர்களில் நாமும் ஒருவரா? வாயில் தேன்! மனதிலோ நஞ்சு!

நம்முடைய எண்ணமும் செயலும் எந்த உள்நோக்கமும் இல்லாமல் பரிசுத்தமானவைகளாய் இருக்கவேண்டுமானால் நமக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  வேதத்தில் யோவான் 16:13 ல்

சத்திய ஆவியாகிய அவர்வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.

என்று பார்க்கிறோம். சத்திய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணும்போது நமக்குள் சத்தியம் அல்லது உண்மை நிலைத்திருக்கும். எந்த ஒளிவு மறைவுக்கும் இடம் இருக்காது. நம்முடைய செயல்களும், நம்முடைய உள் நோக்கங்களும் கர்த்தருடைய சித்தத்துக்குள் அடங்கியுள்ளன என்ற நிச்சயத்தை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நமக்குக் கொடுக்க முடியும்!

என் பிள்ளைகளே வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூறக்கடவோம். ( 1 யோவான் 3:18)

கர்த்தர்தாமே இந்த வேத வசனங்கள் மூலமாய் உங்களை இன்று ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர்ராஜ்

 

 

 

 

இதழ்: 776 தாமார் என்னும் பேரீச்சைமரம்!

2 சாமுவேல் 14:27  அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர் கொண்ட குமாரத்தியும் பிறந்திருந்தார்கள். இவள் ரூபவதியான் பெண்ணாயிருந்தாள்.

கடந்த சில நாட்கள் நாம் அம்னோன் தாமார் என்ற தாவீதின் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தாமாரைப்போல வாழ்ந்து கொண்டிருக்கும் பலர் நம்மில் உண்டு! அவர்களுக்கு தாமாரின் வாழ்க்கை என்ன அர்த்தத்தைக் கொடுக்கும் என்று சற்று ஆழமாகப் படிக்கும்போதுதான் என்னுடைய ஆத்துமாவுக்கு செழிப்பூட்டிய சில உண்மைகளைப் பார்த்தேன்.

தாமாரைப்பற்றி அதிகம் படிக்க எனக்கு ஆசை வந்ததின் காரணம் அந்தப் பெயரின் அர்த்தம்தான்! அது மட்டுமல்ல தாமார் என்ற இந்தப் பெயரில் வேதத்தில் இடம்பெற்ற இன்னும் இருவரைப் பற்றிப் படித்ததும்தான்!

தாமார் என்ற பெயருக்கு பேரீச்சை என்ற அர்த்தம். பேரீச்சம் மரம் நம்முடைய பனை மரங்கள் வகையை சேர்ந்தது! நம்முடைய தென்னை மரங்களும் அதே குடும்பத்தை சேர்ந்தவைதான்!  202 நாடுகளில் இந்தக் குடும்பத்தை சேர்ந்த 2600 வகை மரங்கள் உள்ளன. பாலைவனத்தில் வளரும் வகையும் உண்டு, கடலோரத்தில் வளரும் ஜாதியும் உண்டு, மலைப்பகுதிகளில் வளரும் வகையும் உண்டு! ஆனால் இவை எல்லாமே மிகுந்த பயனைக் கொடுக்கும் மரங்கள்! இவை சரித்திரத்தில் செழிப்பு, வெற்றி, சமாதானம் என்பவற்றுக்கு அடையாளமாக இருந்தன!

வேதத்தில் மூன்று பெண்கள் தாமார் என்ற பெயருடன் வாழ்ந்தனர். முதலாவது வாழ்ந்த தாமாரைப்பற்றி ஆதியாகமம் 28ல் படிக்கிறோம். அவள் யாக்கோபின் குமாரனான யூதாவின் மருமகள்.  அவளை ஒரு வேசி என்று எண்ணி அவளுடைய மாமனார் அவளைத் தன் இச்சைக்காக உப்யோகப்படுத்துகிறான். ஆனால் அவளுடைய கடந்த காலம் அவளுடைய எதிர்காலத்துக்கு ஒரு தடையாகவே இல்லை. மத்தேயு 1:3-6 ல் தாமாரின் குமாரனாகிய பாராஸ் வம்சமாய் வந்தவன் தான் தாவீதும், பின்னர் கர்த்தராகிய இயேசுவும். இதைப்படிக்கும்போது புன்னகை வந்தது. எத்தனைபேர் நம்முடைய வாழ்க்கையை நம்முடைய கடந்த காலத்தின் அளவு கோலால் அளக்கின்றனர். யூதாவும் அவளோடிருந்தவர்களும் அவளை வேசி என்று கணித்தபோது, அவளுடைய சந்ததியில்தான் மேசியா பிறப்பார் என்று யாருமே நினைக்கவில்லை! ஆனால் கர்த்தர் அவளை ஒரு உயர்ந்த, தலை நிமிர்ந்து நின்ற, அன்பு உள்ளம் கொண்ட ஒரு  பேரீச்சையாகப் பார்த்தார்!

அடுத்தது நாம் பார்த்துக்கொண்டிருக்கிற தாவீதின் மகளான தாமார்! தன்னுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்டு, வெட்கத்தால் நாணி, கூனி குறுகி தனிமையில் நின்ற தாமார்!  ஐயோ என்னை விட்டுவிடு என்று கதறிய உனக்கு, வெட்கத்தால் குறுகிப்போன உனக்கு,  கறையான வாழ்க்கையோடு தனிமையில் வாடும் உனக்கு, ஒரு ஆறுதலைத் தரும் தாமார்! இன்று இந்தத் தாமாரின் வாழ்க்கை எத்தனை பேருடைய வலிக்கு மருந்தாக இருக்கிறது!

மூன்றாவது அப்சலோமின் மகள் தாமார்! தாவீதின் குமாரனாகிய அப்சலோம் கற்பை அம்னோனிடம் இழந்து கிழிந்த வஸ்திரத்தோடு, த்லையில் சாம்பலோடு ஓடி வந்த தாமாரை ஆறுதல் பேசி தன்னுடைய வீட்டில் தங்க வைத்தது மட்டுமல்லாமல் அவனுக்கு பிறந்த குமாரத்திக்கு தன்னுடைய தங்கையின் பெயரை சூட்டினான். அது அவன் மனம் புண்பட்ட தன்னுடைய அழகிய தங்கைக்கு  கொடுத்த மரியாதை. அதுமட்டுமல்ல வேதம் சொல்கிறது அப்சலோமின் குமாரத்தியாகிய இந்தத் தாமார் மிகவும் ரூபவதியானவள் என்று!

இன்று பேரீச்சையை தாமார் என்ற பெயரோடு சேர்த்து பார்க்கும்போது கர்த்தருடைய பிள்ளைகளான இவர்கள் பல்வேறு வகைகளாக இருந்தாலும் தங்கள் சந்ததிக்கு, இவர்களைப்பற்றி படிக்கும் நமக்கு ஒரு ஆசீர்வாதத்தை விட்டு சென்றனர். நாம் ஒவ்வொருவரும்கூட நமக்கு பின்வரும் சந்ததிக்கு ஒரு மாதிரியாக, ஆசீர்வாதமாக வாழ முடியும்!

பாலைவனமோ, கடலோரமோ, மலைப்பகுதியோ எங்காயிருந்தாலும் நம்முடைய வாழ்க்கை மற்றவர் படிக்கும் ஒரு ஏற்பாடு போன்ற புத்தகமாக மாற முடியும்!

கர்த்தர்தாமே இந்த வார்த்தைகளின் மூலம் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்