கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today

இதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை!

2 சாமுவேல் 12:12    நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்…

தாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் புருவங்கள் உயர்ந்தன! தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது!  தாவீதின் இரகசியம் கிசுகிசுப்பாக மாறிக்கொண்டிருந்தது!

கர்த்தர் தாவீதிடம் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவனுடைய பாவத்தைக் குறித்து பேசியபோது,  நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தாவீது ஒருவேளை யோசித்திருப்பான் நான் நான்கு சுவருக்குள், இருட்டில் செய்த காரியம் யாருக்கும் வெளியே தெரியாது என்று. யாருக்கும் தெரியாதது என்று அவன் நினைத்தது கர்த்தர் மட்டும் அல்ல அரண்மனைக்கு வெளியேயும் தெரிய ஆரம்பித்தது!

தாவீதுக்கு இஸ்ரவேலின் ராஜாவாகும் பெரிய பொறுப்பை ஒப்புக்கொடுத்த தேவன், அவன் வாழ்க்கை அந்த ஜனத்துக்கு முன் சாட்சியாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். இன்றைக்கு நாம் நம்முடைய போதகர்மாருடைய வாழ்க்கையை, ஊழியக்காரருடைய வாழ்க்கையை நமக்கு மாதிரியாக பார்க்கவில்லையா அப்படித்தான்!  தாவீது இந்தப் பாவத்தை இருளில் செய்து அதை இரகசியமாகக் காப்பாற்றி  அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அப்படித்தானே அவனுடைய நாட்டு மக்களும் நினைப்பார்கள்!

பாவம் என்பது ஒரு நோய் போலத்தான். அதை உடனே கவனிக்கவில்லையானால் அது நம்மையே அழித்துவிடும்! ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான்! ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான்! ஒரு சிறிய மறைக்கப்பட்ட பாவம் நம்முடைய ஆத்துமாவையே அழித்துவிடும் என்பதும் உண்மை!

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்மை வெறுமையாக்கி கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சுத்திகரித்து நம்மை பரிசுத்தப்படுத்தி,  தவறுகளை மன்னித்து,அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிரம்ப செய்வார். அவருடைய அழகை நம் வாழ்க்கையின் மூலம் பிறர் காணச் செய்வார்! ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

Leave a comment