கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!

சங்கீதம் 38: 3,4  உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று!

தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ ஒரு இடத்தில் பாவம் அவனுடைய வாழ்வில் விளையாட இடம் கொடுத்து விட்டான். கடைசியில் அவன் வேதத்தில் இடம் பெற்ற ஒரு மோசமான விபசாரத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டான்.

ஒரே ஒரு கணம் அவன் தவறியது தாவீதை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை என்று எழுத வைத்தது.

அவனுடைய குடும்பம் அனுபவித்த துன்பங்களை இன்று நாம் சிந்திக்க வேண்டாம் ஆனால் அவன் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த வேதனையைப் பாருங்கள்!

தாவீது தன்னுடைய மாம்சத்தில் ஆரோகியமில்லை என்று சொல்லுகிறான். பாவம் நம்முடைய ஆரோக்கியத்தை சிதைத்து விடுகிறது! வியாதியும், வேதனையும் தொடருகின்றன! அதுமட்டுமல்ல அவனுடைய  பாவம் ஒரு வெள்ளம் போல, ஒரு சுனாமி போல அவனுடைய தலைக்கு மேலாக பெருகிற்று. அவை தன்னை பாரச்சுமையைப் போல தாங்கமுடியாமல் பாரமாக அழுத்தியது என்று கூறுகிறான்.

பாரச்சுமையைத் தாங்கமுடியாமல் குனிந்து கொண்டு செல்லும் ஒருவன் தள்ளாடி நடப்பதை நம்முடைய மனக்கண்ணால் பாருங்கள்! அழகான மாளிகையில், உலக அழகி பத்சேபாளுடன் இருந்த அந்த கணம் அவனுக்கு எத்தனை பெரிய பாரமாக மாறிவிட்டது பாருங்கள்! அதைத் தாங்கமுடியாமல் அவன் தத்தளிப்பதைப் பார்க்கிறோம்.

சங்கீதம் 38 ல் தாவீது எழுதியவை, பாவம் அவனுடைய வாழ்வில் ஏற்படுத்திய பேரழிவைக் தெளிவாக காட்டுகின்றன. தாவீது தேவனுடைய கட்டளையை மீறியதால், கர்த்தர் அவனை நோக்கி நீ ஏன் என்னை அசட்டை செய்தாய்? ஏன் என்னை இழிவு படுத்தினாய்?  என்று கேட்ட கேள்வி, அவனுக்கும் கர்த்தருக்கும் நடுவில் ஏற்பட்ட பிளவைக் காட்டியது!

பாவம் என்னும் நச்சு நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவை அறுத்து விடுகிறது. நான் நேசிக்கும் என்னை என்னுடைய பாவம் அசிங்கமான சாக்கடையில் தள்ளி விடுகிறது! அதனால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை! பாவம் என்னும் பாரம் சுமையாக என்னை அழுத்துகிறது! எனக்கு நிம்மதியே இல்லை! இதுதானே தாவீதைப்போல நம்முடைய கதையும்!

ஆனால் கர்த்தராகிய இயேசு , வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார்! இன்றே வாருங்கள்! பாரச்சுமையினால் வாடும் உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment