கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 756 தூஷணம் வேண்டாம்! நறுமணம் வீசு!

2 சாமுவேல் 12:14 ஆனாலும்  இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே …..

நம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான்.

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது பாவம் செய்தபோது தேவனாகிய கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட்டது என்று கர்த்தர் கூறுகிறார். நல்லதொரு தோட்டத்தில் தூவப்பட்ட விதைகள் போல தேவ தூஷணம் முளைக்கும்!

நாம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தாமல் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவருடைய நாமத்தை தூஷணப்படுத்தும் அல்லவா? சற்று யோசித்துப் பார்ப்போம்!  நம்முடைய அலுவலகத்தில், உறவினர் மத்தியில், குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ளவர்கள் நாம் தவறு செய்யும்போது என்ன நினைப்பார்கள்? நாம் கிறிஸ்தவர் என்று சொல்லும்போது கிறிஸ்துவின் நாமம் அல்லவா அவதூறுப்படும்!

ஒரு பெர்சியக் கதையை வாசித்திருக்கிறேன்!

ஒரு வழிப்போக்கன் வழியில் ஒரு அழகான வர்ணத்தில் கிடந்த ஒரு மண் பாண்டத்தின் துண்டை கையில் எடுத்தாராம். அது அழகாய் மட்டும் அல்ல ஒரு நறுமணம் வீசியதாக இருந்ததாம். அதை ஏதோ ஒரு விலையேறப்பெற்ற கல் என்று நினைத்து அதினிடம் நீ யாரோ என்று கேட்டாராம்!

நீ விலைமதிப்பெற்றவியாபாரப் பொருளோ? நீ கிடைக்காத ஒரு விசேஷக் கல்லோ என்றார்?

அதற்கு அந்தப் பாண்டம் நான் ஒரு சாதாரண மண்தான் என்றதாம்!

பின்னும் அவர் அப்படியானால் உனக்கு இந்த நறுமணம் எப்படி கிடைத்தது என்றார்!

அதற்கு அது என் நண்பனே உனக்கு என் இரகசியத்தை சொல்லிவிடுகிறேன்! நான் ரோஜா மலரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். தினமும் வாசனையுள்ள மலர்களைத் தாங்கிய ஒரு ஜாடிதான் நான். அந்த மலர்களிடமிருந்து  கிடைத்தது தான் இந்த மணம் என்றதாம்!

இதைத்தான் நம்முடைய மிகப் பழமையானத் தமிழ் மொழியில், பூவோடு சேந்த நாரும் மணக்கும் என்று பழ மொழியாக சொல்லுவோம்!

நண்பர்களே!  சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்கின் லீலியுமானவர்  நமக்குள் வாசம் செய்வாரானால் நாமும் நம்முடைய நற்கிரியையால் அவர் நாமம் மகிமைப்பட நற்கந்தம் வீசுவோம்!  நாம் ஒவ்வொருநாளும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய சத்தியத்தின் படி வாழும்போது வெறும் களிமண்ணான நாம் நறுமணம் வீசும் விசேஷக்கல் ஆக முடியும்!

உங்கள் வாழ்க்கையின் மூலமாக கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட வேண்டாம்! மாறாக நீங்கள் கர்த்தருடைய மகிமையை நற்கந்தமாக வீசும் ஒரு சாட்சியாக வாழுங்கள்!

ராஜாவின்மலர்த் தோட்டம் உங்களை சாரோனின் ரோஜாவகிய கர்த்தரிடம் கிட்டி சேர உதவும் தோட்டம் என்பதை உணர்வீர்களானால்  உங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பற்றி பகருங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment