ஆதி 16:1 எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஓர் அடிமைப்பெண் அவளுக்கு ( சாராய்க்கு) இருந்தாள்.
தேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது.
சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும்,
கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும், வெள்ளியும், பொன்னும், பரிசாக வழங்கினான்.
எத்தனை நேரங்களில், நம் வாழ்க்கையில் தேவனை விட்டு வழி விலகி நாம் ஓடும் போது நமக்கு, நல்ல வேலை, சொத்து, வீடு, வாகனம் என்று செல்வத்தை வாரியிறைத்து, நம் கண்களை மறைத்து விடுகிறான் சாத்தான்.
பார்வோன் வெகுமதிகளை வாரியிறைத்த போது ஆபிராம் என்ன சொல்லியிருக்கவேண்டும்?
“ பார்வோன் ராஜாவே, மிக்க நன்றி, உன் பரிசுகளை நீயே வைத்துகொள்.! என் தேவனின் மகா பெரிய ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது, அவர் எனக்கு எல்லாவற்றையும் நிறைவாகத் தர வல்லவர்’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
அப்படி செய்யாமல், பார்வோன் கொடுத்த வெகுமதிகள் எல்லாவற்றையும் ‘மிக்க நன்றி’ என்று பெற்றுக்கொண்டு பெரும் பணக்காரனாய் எகிப்திலிருந்து புறப்பட்டான் ஆபிராம்.
தவறான் வழியில் வந்த சொத்து அவன் வாழ்க்கையில் பெரிய முள்ளாகிவிடும் என்று எண்ணவில்லை போலும். வேதம் சொல்கிறது,
சொத்து மிகுதியால் ஆபிராமும், அவன் சகோதரன் மகனாகிய லோத்துவும் பிரிய வேண்டியதாயிற்று.( ஆதி:13:6)
இதை விட பெரிய முள் பார்வோன் கொடுத்த அடிமைப்பெண்களில் ஒருத்தியான ஆகார் என்பவள் தான் ( ஆதி: 16:1) ஆகாரினால் குடும்பத்தில் தான் எத்தனை பிரச்சனைகள், பிரிவினைகள், துன்பங்கள்! அவளை தன்னுடைய எஜமானின் இச்சைக்கு இணங்கும் பொம்மையாய் உபயோகப்படுத்தியபின்னர் அவளே எல்லாக் கசப்புக்கும் அடிப்படையாகி விட்டாள்.
எகிப்துக்குள் வந்த வண்ணமாகவே, எகிப்திலிருந்து புறப்பட்டிருந்தால், அவர்கள் சாட்சி எத்தகையதாக இருந்திருக்கும். பார்வோன் வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் கொடுத்த போது அவர்களை அவர்கள் நாட்டிலேயே, அவர்கள் குடுபத்தாரோடு வாழ அனுப்பியிருந்தால் அந்த ஆசீர்வாதம் எத்தனை பெரிதாயிருந்திருக்கும்! ஆகார் எகிப்திலேயே தங்கியிருப்பாள் அல்லவா?
தன்னை இம்மட்டும் வழி நடத்திய தேவனை பற்றிக்கொள்ளாமல், பார்வோன் அள்ளி இறைத்த ஆஸ்தியை பற்றிக் கொண்டான் ஆபிராம். மிகுந்த ஆஸ்தி மோசம் ஆச்சு என்பது உண்மையாயிற்று. பண ஆசை எல்லாத் தீங்குக்கும் வேராயிருக்கும் என்று தெரியாதா! தேவைக்கு அதிகமாய் எதற்கும் ஆசைப்பட்டால் இப்படித்தான் முடியும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
