கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?

ஆதி: 18:13,14  அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? 

ஆபிரகாம் விருந்தினரை  உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம்.

வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர்,  சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே  வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்? என்பதை அறிய கவனமாயிருந்தது.

அவர்கள் ஆபிரகாமிடம் உன் மனைவி சாராள் எங்கே என்றதும் அவள் செவி கூர்மையடைந்தது. கர்த்தர் ஆபிரகாமிடம், “ ஒரு உற்பவ காலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்தில் திரும்ப வருவேன் , அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்” என்றார். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தவுடனே சாராள் நகைத்தாள்.

வேதம் வெளிப்படையாக கூறுகிறது “ஸ்த்ரிகளுக்குள்ள வழிபாடு  சாராளுக்கு நின்று போயிற்று” என்று. ( ஆதி: 18: 11). நாம் கூட சாராளின் நிலையில் இருந்திருந்தால் சிரிக்க தான் செய்திருப்போம்! எத்தனை வருடம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குழந்தைக்காக காத்திருந்தாள் அவள். தன்னுடைய குழந்தையை ஏந்த அவள் மனம் எவ்வளவு ஏங்கியிருக்கும்? குழந்தையின்மையால் தன் அடிமைப் பெண் கூட தன்னை ஏளனமாய் பார்த்த நிலையை அவளால் விவரிக்க கூடுமா?  அது மட்டுமல்ல ஒரு குழந்தைக்காக தன் கணவனை மற்றொருவளுக்கு விட்டு கொடுக்கும் அவல நிலையை  அவளல்லவா அனுபவித்தாள்!

இப்பொழுது அவள் சரீரம் செத்து விட்டது. குழந்தை பெரும் பருவத்தை அவள் சரீரம் கடந்து விட்டது. இந்த முதுமைக் காலத்தில் குழந்தையுண்டாக முடியுமா? சாராளுக்கு அதிர்ச்சி ! அழுகை வரவில்லை, அந்த நிலையை கடந்து விட்டாள், சிரிப்பு தான் வந்தது.

மறுபடியும் கர்த்தருடைய பேச்சு சத்தம் கேட்டது. “ சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? என்றார். ( ஆதி: 18: 13, 14)

சாராள் வெளிப்புறம் நகைத்தாலும் அவள் உள்ளத்தின் குமுறுதலை கர்த்தர் அறிந்திருந்தார்.

எத்தனை முறை நம் வாழ்க்கையில் தோல்விகள் ஏற்ப்படும்போது அதை நாம் கோபமாய் வெளிப்படுத்தியிருக்கிறோம். சிலமுறை நாம் பேசுவது தவறு என்று நம் மனது சொன்னாலும் நாம் ஆத்திரத்தில் பேசுவதில்லையா? ஏன்? தேவனுடைய மனிதனான மோசே, ஆத்திரத்தில் தன் கையில் உள்ள பத்து கட்டளைகள் எழுதப்பட்ட பலகையை எறிந்து உடைக்கவில்லையா? நம் உணர்ச்சியை தவறாக வெளிப்படுத்தினாலும் நம் தேவன் நம் உள்ளக் குமுறுதலை அறிவார். நம்மை எல்லா நேரத்திலும் புரிந்து கொள்ளும் நண்பர் அவர் ஒருவரே. அதனால் தான் ஒவ்வொரு நாளும் நம் மன பாரங்களை அவரிடம் இறக்கி  வைக்க வேண்டும்.

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி “ கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? என்றார்.

சகோதரியே! அவரால் பழுது பார்க்க முடியாத குடும்ப நிலை உண்டோ?

அவரால் சுகமளிக்க முடியாத நோய் உண்டோ?

அவரால் நீ ஏங்கி தவிக்கும் குழந்தையை கொடுக்க முடியாதா?

உன் பிள்ளைகளை நல்ல வழியில் கொண்டுவந்து அவர்கள் வாழ்வை உயர்த்த  முடியாதா?

உடைந்து போன உன் திருமண வாழ்க்கையை ஒன்று படுத்த முடியாதா?

கர்த்தரின் வாய் இதைக் கூறிற்று. கர்த்தரால் ஆகாதது ஒன்றுண்டோ?

நிச்சயமாக இல்லை என்பது என் சாட்சி!  நீயும் விசுவாசி,  உலகத்தால் முடியாது என்று எண்ணப்படும் காரியம் கர்த்தரால் முடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment