யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்….
வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.
அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை என்று பார்த்தோம். பல கனவுகளோடு அவள் மோசேயை மணந்தாலும் அவள் கனவுகள் எதுவும் பலிக்க வில்லை. அவளுக்கு மோசேயோடு கிடைத்தது 40 வருடங்கள் மீதியானிய வனாந்தரத்திலும், மற்றுமொரு 40 வருடங்கள் நாடோடியாய் கானானுக்கு போகிற வழியில் நடந்து திரிந்ததும்தான்! ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்தாள் என்று பார்த்தோம்.
இன்றைய கதையின் நாயகி சிப்போராள் தான்! கர்த்தர் மோசேயோடு பேசி, அவனை இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியான பெரிய பொறுப்பைக் கொடுத்து எகிப்துக்கு திரும்பிப் போகும்படி கட்டளை கொடுக்கிறார்.
நாம் தியானிக்கிற இந்த சம்பவம் மோசே தன்னுடைய மனைவியோடும், பிள்ளைகளோடும் எகிப்த்துக்கு போகும் வழியில் சம்பவித்தது. அவன் தன் குடும்பத்தோடு தங்கிய இடத்தில் கர்த்தர் அவனை கொலை செய்ய முயற்சித்தார் என்று பார்க்கிறோம். இதற்கு எந்தக்காரணமும் கொடுக்க்ப்படவில்லை! இதே மாதிரிதான் யாக்கோபு கானானுக்குத் திரும்பும்போது அவன் தேவதூதனோடு போராட வேண்டியதிருந்தது. அதற்கும் நமக்குக் காரணம் தெரியாது!
ஆனால் இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை மாத்திரம் தெளிவு படுத்துகிறது! மோசேயின் இரண்டு குமாரரில் ஒருவனுக்கு விருத்தசேதனம் பண்ணப்படவில்லை என்பதுதான் அது!
கர்த்தர் தமக்கு சொந்தமான ஜனமாக இஸ்ரவேலைத் தெரிந்து கொண்டபோது அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற புது கட்டளையையும் கொடுத்தார். இதை ஏன் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு விளக்கி கூறியதாக வேதம் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். மோசேயின் தாய் தகப்பன் இருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்கள் ஆதலால் தங்கள் குமாரனாகிய மோசேக்கு நிச்சயமாக விருத்தசேதனம் செய்திருப்பார்கள்.
ஆனால் 40 வருடங்கள் எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்ததாலும், இன்னுமொரு 40 வருடங்கள் மீதியான் தேசத்தின் வனாந்திரத்தில் வாழ்ந்ததாலும் அவன் விருத்தசேதனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம், அல்லது அதின் முக்கியத்துவத்தைப் பற்றி அவன் மனைவிக்கு எடுத்துரைக்காமல் இருந்திருக்கலாம்.
அதனால் அநேக வேதாகம வல்லுநர்கள் எண்ணுகின்றனர், மோசே தன்னுடைய மூத்த மகனுக்கு எபிரேய முறைப்படி விருத்தசேதனம் செய்திருப்பான், ஆனால் இளையவனுக்கு விருத்தசேதனம் செய்ய விடாமல் சிப்போராள் தடை செய்திருக்கக் கூடும் என்று. இது நமக்கு மோசேயின் இரு குமாரரில் ஒருவன் ஏன் விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுக்கிறது அல்லவா?
தன்னுடைய கணவனுக்கு வந்த ஆபத்தைக் கண்டவுடன் சிப்போராள் ஒரு கருக்குள்ள கத்தியை எடுத்து, தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்தது எறிந்தது மாத்திரமல்லாமல், நீர் எனக்கு இரத்தத சம்பந்தமான புருஷன் என்று கூறினதால் அவள் இந்த இரத்த சம்பந்தமான விதிமுறையை விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் தான் தன்னுடைய இரண்டாவது பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ண தடை செய்திருப்பாள்.
இந்த சம்பவத்தில் கீழ்ப்படிதல் என்ற பெரிய பாடம் நமக்குக் காத்திருக்கிறது.
மோசே மீதியான் தேசத்தில் போய் பெண் எடுத்த போது, அவன் அந்த தேசத்து பழக்க வழக்கங்களின் படி நடக்க ஆரம்பித்திருப்பான். தன் வாழ் நாள் முழுவதும் அந்த தேசத்தில் கழிந்துவிடும் என்று தானே நினைத்திருப்பான்? எகிப்துக்கு திரும்புவதை கனவில் கூட நினைத்திருக்கமாட்டான். அதேவிதமாய் சிப்போராள் முதலில் அவனை மணந்தபோது, மோசேயுடைய எபிரேய பழக்க வழக்கங்களில் ஆர்வம் காட்டியிருப்பாள். அதனால் தான் அவர்கள் முதல் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த ஆர்வம் குன்றியிருக்கும். கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதும், கீழ்ப்படிவதும் அவர்களிடம் குறைவு பட்டிருக்கும்.
இப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களின் தலைவனாக எகிப்துக்கு செல்கிறான். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளான மோசேயும், சிப்போராளும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள், தங்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற குறையோடு இஸ்ரவேல் மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் வழியில் இடைப்பட்டு சிப்போராள் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் மோசேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று வெளிப்படுத்துகிறார்.
இந்த விருத்தசேதனத்துக்கு அப்படி என்ன வசியம்? அப்படி என்ன முக்கியத்துவம்? என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்! இது ஒரு உடன்படிக்கையின் அடையாளம்! ஆதி:17 ம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமுக்கு திரளான ஜாதிகளுக்கு அவன் தகப்பனாவான் என்றும், அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அவர் தேவனாயிருப்பார் என்றும், கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரிப்பார்கள் என்றும் வாக்களித்தபின்னர், 17 ம் வசனத்தில் இந்த நித்திய உடன்படிக்கைக்கு அடையாளமாக சகல ஆண்பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்றார்!
இந்த உடன்படிக்கையின் அடையாளமான விருத்த சேதனம் மோசே தன்னுடைய இளைய குமாரனுக்கு பண்ணாதிருந்தான்.
சிப்போராளின் கீழ்ப்படிதல், அவள் கணவன் உயிரைக் காத்தது. அதுமட்டுமல்ல சிப்போராள் கீழ்ப்படியாமல் இருந்திருப்பாளானால் தேவனாகிய கர்த்தர் மோசேக்கு பதிலாக வேறு ஒருவனை இந்த பணிக்கு அழைத்திருக்கக்கூடும்! மோசே இந்த பெரிய ஆசீர்வாதத்தை இழந்திருக்கக்கூடும்!
ஒரே ஒரு கேள்வி???? நாம் எப்படி உடன்படிக்கையின் பிள்ளைகளாகிறோம்???? தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தின் மூலமாய் நமக்கும் இரத்த சம்பந்தமான உறவு ஏற்படுகிறது, நாமும் உடன்படிக்கையின் பிள்ளைகளாகிறோம். பின்னர் கர்த்தர் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. நம்மைத் தொடுகிறவன் அவர் கண்மணியைத் தொடுகிறான் என்று கூறினார் அல்லவா?
இன்று நாம் எப்படி வாழ்கிறோம்? நம்முடைய குடும்பத்தில் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தலும், கீழ்ப்படிதலும், குறைந்து காணப்படுகிறதா? இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உன் கீழ்ப்படியாமை காரணமாயிருக்கக் கூடும்! கீழ்ப்படியாமை நம்மை தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு அப்பாற்பட்டவர்களாக்கி விடும்! கர்த்தர் நம்மைக் காத்து வழிநடத்த முடியாது. உன்னைக் காக்கிறவர் உறங்கார் என்ற வாக்குத்தத்தம் நமக்கு ஒருபோதும் சொந்தமாகாது!
ஏனெனில் இந்தப்பரிசுத்தமுள்ள தேவன் பலிகளையல்ல கீழ்ப்படிதலையே நம்மிடத்தில் விரும்புகிறார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்