கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1121 எரிகோவில் பூத்த மலர்!

யோசுவா: 2:1 ”நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பி நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்து வாருங்கள் என்றான்; அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து….”

நாடகங்கள் பார்த்த அனுபவம் உண்டா?எனக்கு உண்டு! அமெரிக்காவில்  மிகவும்  புகழ் வாய்ந்த   ஒலி ஒளி நாடகத் தியேட்டரில் (Sight and Sound Theatre) இரண்டு நாடகங்கள் பார்த்தோம்! ஒன்று “முதல் கிறிஸ்துமஸ் ”  First Christmas என்ற தலைப்பில் நடந்த நாடகம். அந்த தியேட்டரில் மூன்று பக்கமும் நாசரேத் ஊரின் அன்றாட வாழ்வும், தேவ தூதன் மரியாளுக்கு செய்தி கொண்டு வந்ததும், பின்னர் இயேசு பிறந்த பெத்லெகேம் பட்டணத்தில் நடந்த சம்பவங்களும் தத்ரூபமாக பாடலோடும் நடிப்போடும் கொண்டு வந்தார்கள்.நாங்கள்  இயேசு பிறந்த அன்று பெத்லேகேமில் இருந்த உணர்வு வந்தது!

நாங்கள் பார்த்த இரண்டாவது நாடகம் Let my people go “என் ஜனங்களை போகவிடு ” என்ற மோசேயின் சரிதை. கர்த்தரானவர் எரிகிற முட்செடியினின்று மோசேயுடன் பேசியது, சீனாய் மலை, மோசேயின் கோல் பாம்பாக மாறியது, கர்த்தர் செங்கடலை இரண்டாய் பிளந்தது இவையெல்லாம் உண்மையாகவே  மெய் சிலிர்க்க செய்த காட்சிகள்.  

நாடகத்துக்கு உயிர் கொடுப்பது அதன் பின்னணி தானே! ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி வருவதற்குள் மேடையின் பின்னணி அதற்குத் தக்கவாறு மாறினால் தான் காட்சிக்கு உயிர் கிடைக்கும்! நாம் அடுத்த இரண்டு வாரங்கள் எரிகோவில் வசித்து வந்த கானானிய ஸ்திரீயான ராகாபின் கதையை படிக்கும்போது இதைத்தான் செய்யவேண்டும்!

இப்பொழுது நமது முதல் காட்சியின் பின்னணி என்ன? மோசே மரித்துப்போனார் என்று கேட்டவுடன் இஸ்ரவேல் மக்கள் அவருக்காக துக்கித்து அழுது கொண்டிருக்கிறார்கள். அதற்குள் கர்த்தரால் ஆயத்தப்படுத்தப்பட்ட யோசுவாவை கர்த்தர் தம் வாக்குத்தத்தத்தினால் பலப்படுத்தி இஸ்ரவேலை வழிநடத்தும்படி கூறுகிறார். இப்பொழுது யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்க வேண்டும்!

இன்றைய வேத வசனத்தில் நாம் பார்க்கிறோம் யோசுவா இரண்டுபேரை எரிகோவை வேவுபார்க்கும்படி அனுப்புகிறான் என்று. அந்தக் காலத்தில் எரிகோ நகரம்தான் கானானின் நுழைவாயிலாக இருந்தது. உயரமான மதில் சுவராலும், பேரீச்ச மரங்களாலும் சூழப்பட்ட இந்த நகரம் யோர்தானின் தெற்கு திசையில் அமைந்திருந்தது!

இந்த இருவரும் ராகாப் என்ற வேசியின் வீட்டில் தங்குகின்றனர். ஒரு சில வேதாகமவல்லுநர்கள் வேசியின் வீடு என்பதை ஒரு சத்திரத்துக்கு ஒப்பிட்டு எழுதுகின்றனர்! இன்றைக்கு நாம் தங்கும் ஓட்டல் போல. ஆனால் எபிரேய, கிரேக்க வேதாகமம் நிச்சயமாக அப்படிக்கூறவில்லை. இதில் உண்மையென்னவெனில் வேவுபார்க்க வந்திருக்கும் இருவரும் பகல் முழுவதும் ஊரில் அங்கும் இங்கும் அலைந்து விட்டு இரவு நேரத்தில் வேசியின் வீட்டில் நுழைந்துவிட்டால் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்ற எண்ணத்தால்தான் நுழைந்திருப்பார்கள்.

ராகாப் ஒரு வேசி என்று வேதம் சொல்கிறது! அவளை சொல்லிக் குற்றமில்லை, அவள் வாழ்ந்த ஊரில் ஆபிரகாமின் தேவனையும், ஈசாக்கின் தேவனையும், யாக்கோபின் தேவனையும் யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றி சிறிதளவு கேள்விப்பட்டிருந்ததால் அவர்கள் உள்ளத்தில் இஸ்ரவேலரைக் குறித்து சிறிது பயம் இருந்தததே தவிர இஸ்ரவேலரை நேரடியாக சந்திக்கும் தருணம் இல்லை. அவர்கள் வரட்டும், யார் வல்லவர் என்று ஒரு கை பார்த்துவிடலாம், என்ற எண்ணத்தில் தான் இருந்தார்கள். அதுமட்டும் அல்ல பாகாலை வழிபட்ட அவர்களுக்கு, சரீர ஆசைகளை திருப்தி பண்ண நடைபெற்ற வேசித்தனம் கூட கூட ஒருவிதமான கடவுள் வழிபாடாகவே பட்டது.

இதுதான் ராகாப் என்ற வேசியைப் பற்றி நாம் படிக்கப்பாகிற வரலாற்றின் பின்னணி. இதை நம் மனக்கண் முன்னால் வைத்தவிதமாய் நாமும் இஸ்ரவேலின் வேவுகாரர் இருவரோடும் கூட சேர்ந்து ராகாப் என்ற வேசியின் வீட்டுக்குள் பிரவேசிக்கப் போகிறோம்! இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்கப் போகிறோம்!

என்னைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் ராகாப் தான்! நான் வேசியா என்று ஒருவேளை நீங்கள் என்னிடம் கேட்கலாம்! நாம் எத்தனைமுறை பணத்துக்காக, பொருளுக்காக, பதவிக்காக, அதிகாரத்துக்காக, யாரையாவது திருப்தி படுத்துவதற்காக, நம்முடைய காரியத்தை சாதிப்பதற்காக நம்மையும் நம்முடைய விசுவாசத்தையும் விற்றிருக்கிறோம்!

ராகாப் பிறப்பினாலும், வளர்ப்பினாலும்  ஒரு வேசியாக, காட்டில் படர்ந்த முள்ளைப்போல இருந்தாலும், அந்த முள்ளிலும் காட்டு ரோஜா மலரும் அல்லவா? ஒருவன் எப்படி பிறந்தான் எப்படி வாழ்ந்தான் என்பது முக்கியம் இல்லை! அவனுடைய வாழ்க்கையில் தருணம் கொடுக்கப்படும்போது அவன் அதை உபயோகப்படுத்தி தன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கிறானா இல்லையா என்பதுதான் முக்கியம்!

தருணம் கிடைத்தால் உள்ளத்தை திறப்பவர்கள் நம் பக்கத்து வீட்டிலும் இருக்கலாம், நம் தெருவிலும் இருக்கலாம், நம்முடன் வேலை செய்பவர்களாகவும் இருக்கலாம்! அவர்கள் அப்படிப்படவர்கள், இப்படிபட்டவர்கள் என்று சாக்குபோக்கு சொல்லாமல் அவர்களுக்குத் தருணத்தை ஏற்படுத்திக்கொடுப்பது நம் கடமை!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment