கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1163 உம்முடைய பெலத்தால் என்னை பெலப்படுத்தும்!

நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.”

நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி  நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார்  என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம்.

இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான் என்று பார்க்கிறோம். பாராக் அவர்களை முற்றிலுமாக கானானை விட்டு ஓட ஓட விரட்டினான். ஒருசிலரை கூட விட்டு வைக்கவில்லை. இது நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி!

இந்த சம்பவத்துக்கு வெகு காலத்துக்கு முன்னமே, கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலமும், பின்னர் யோசுவாவின் மூலமும், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களுக்கு தாம் வாக்குக் கொடுத்த கானான் தேசத்தில், எதிரிகளாகிய கானானியருக்கு இடமில்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். ஏன் அப்படி சொன்னார்? கானானியரை ஏன் அவர் அனுமதிக்கவில்லை? ஒருசில கானானியர் கூட அவர்கள் மத்தியில் வாழக்கூடாதா? என்ன அநியாயம்? என்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையா?

நம்மையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கர்த்தர் வேதத்தின் மூலமாக நம்மோடு பேசி, நம்மை சரியான பாதையில் நடத்துகிறார். நம்மை பாவ சேற்றில் விழாமல் பாதுகாக்கிறார். ஆனால் பல நேரங்களில், நமக்குள் புதைந்திருக்கும் ஒருசில சிற்றின்பங்களின் தூண்டுதலால், ஏன் எனக்கு கர்த்தர் இப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, அப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, நான் ஏன் மற்றவர்களைப் போல  வாழக்கூடாது என்றெல்லாம்  எண்ணி, நம்மைப் பாதுகாக்கும் தேவனை, ஏதோ நம் சுதந்தரத்தைப் பறித்தவர் போல நோக்குகிறோம்.

உண்மை என்ன என்றால், சிசெராவின் சேனையில் ஓரிரு கானானியர் விடப்பட்டாலும், அல்லது நம்முடைய வாழ்வில் ஒருசில சிற்றின்பங்கள் விடப்பட்டாலும், அந்த ஓரிருவர் மூலமாய் நாம் முற்றிலும் வழிமாறிப் போய்விட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் தான் சேனைத்தலைவன் பாராக் சிசெராவின் சேனையை பட்டயக்கருக்கினால் அழித்தான். இந்த சேனையை நம்முடைய சேனைகளோடு இணைத்துக் கொண்டால் நமக்கு மிகப் பெரிய சேனை இருக்குமல்லவா என்று சற்றும் எண்ணவில்லை. அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் கர்த்தருடைய ஜனத்தை முற்றும் திசை திருப்பி அழித்துவிடுவார்கள் என்று அவர்களை பட்டயத்துக்கு ஒப்புவித்தான்.

நம்மில் அநேகரின் வாழ்க்கையில் சிசெராவின் சேனை போன்ற சிற்றின்பங்கள் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அவற்றை நமக்குள் புதைத்துக்கொண்டு, அவற்றின் மேல் வெற்றி சிறந்தது போல வாழ முயற்சி செய்வது,  நம்முடைய சுய பெலத்தால் சிற்றின்பங்களை அடக்க நினைப்பது,  இவை எப்படி இருக்கிறது தெரியுமா? காற்றினால் அலைந்து கடலில் மூழ்கப்போகிற கப்பலை, சிலந்தி நூலைக் கொண்டு திசை திருப்ப நினைப்பது போல இருக்கிறது!

இதற்கு தீர்வு என்ன? பரிசுத்த பவுல், பிலிப்பியர் 4:13 ல்  “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு” என்று இதற்கு தீர்வு காண்கிறார். அவருடைய பெலத்தினாலே எனக்கு பெலனுண்டு! அவருடைய பெலத்தினாலே சிசெராவின் சேனையை முறியடிப்பேன்!

சுய பெலத்தினாலே பாவங்களை மேற்கொள்ள முடியாது! சாத்தானை முறியடிக்க முடியாது! ஆனால் நமக்குள் வாசம் செய்யும் இயேசு கிறிஸ்துவின் பெலத்தினாலே சாத்தானின் சேனையை முறியடிக்க முடியும்! இது அவர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்!

சுய பெலனா? அது சிலந்தி நூல் போன்றது! தேவ பெலனைப் பெற்று வெற்றியுடன் வாழ்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment